சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) நிறைவடைகிறது. இதையடுத்து, ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், திங்கட்கிழமை அரசியல் கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் தீவிர இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, தலைநகர் சென்னையில் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கடந்த மார்ச் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இம்முறை களத்தில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.
ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி மே 4ஆம் தேதி நடைபெறும்.
தமிழகத் தேர்தலில் இம்முறை 5.73 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். ஏறக்குறைய 4,000 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
கடந்த 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் இருமுனைப் போட்டியே இருந்து வந்தது. தற்போது திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகளுடன் தனித்துக் களம்காணும் தவெக, நாதக என நான்குமுனைப் போட்டி உருவாகியுள்ளது.
அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனும் இலக்குடன் செயல்பட்டு வரும் இந்தியத் தேர்தல் ஆணையம், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
வாக்காளர்கள் வசதிக்காக மாநிலம் முழுவதும் ஏறக்குறைய 75,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 40,000 வீரர்களைக் கொண்ட 295 துணை ராணுவக் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் இறுதிக்கட்டப் பிரசாரம் மேற்கொண்டனர்.
ஏப்ரல் 21ஆம் தேதி மாலை ஆறு மணியுடன் பிரசாரம் முடிவடையும். அதன் பிறகு 48 மணி நேரம் யாரும், எந்தவிதப் பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதி இல்லை.
ஏப்ரல் 21, 22, 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். வாக்குப்பதிவன்று (ஏப்ரல் 23) பொது விடுமுறை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

