புதுடெல்லி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில், அரசியல் களம் இதுவரையில்லாத அளவுக்கு திருப்பங்களையும் அதிகாரப் போட்டாபோட்டிகளையும் சந்தித்து வருகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) எப்படியும் தங்கள் பக்கம் இழுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கடைசி நேரம் வரை முயற்சி செய்கிறது.
தற்போது கரூர் சம்பவம் தொடர்பான மத்திய புலனாய்வு (சிபிஐ) விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள விஜய்யை பெரும் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக மேலிடம் பேரம் பேசுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெற்றி பெற்றால் விஜய்க்குத் துணை முதல்வர் பதவி அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் என்று பாஜக தரப்பு உறுதி அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 80க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ள பாஜக, பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் குறிவைத்து பாஜக இந்த நகர்வை மேற்கொள்கிறது. தமிழகத்தில் 2% வாக்கு மாற்றம் கூட தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் என்பதால், விஜய்யின் ஆதரவு தங்களுக்குக் கைகொடுக்கும் என பாஜக மேலிடம் கருதுகிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாகவே இந்தப் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.
திமுக எதிர்ப்பு வாக்குகளைச் சிதறவிடாமல் ஒரே பெட்டியில் சேர்ப்பதே பாஜகவின் திட்டம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. முதல்வர் பதவியைக் குறிவைத்துள்ள விஜய், இந்த நேரத்தில் கூட்டணி வைப்பது சரிவருமா என யோசிக்கிறார். மேலும், தொடக்கம் முதலே பாஜகவை கருத்தியல் எதிரியாக விமர்சித்து வரும்நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தப்பாகிவிடுமோ என விஜய் யோசிக்கிறார்.
இருப்பினும், முதல்வர் பதவியை இலக்காகக் கொண்டுள்ள விஜய் தரப்பில் இதுகுறித்து தயக்கம் நிலவுகிறது. தொடக்கத்திலேயே தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது கட்சியின் தனித்துவத்தைப் பாதிக்கும் என விஜய்யின் நெருங்கிய ஆலோசகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கூட்டணி முயற்சிக்கு அதிமுக, தவெக ஆகிய இரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், இபிஎஸ் கூட்டணி ஆட்சி முறைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. “ஆட்சி அதிகாரம் அதிமுக-விடமே இருக்க வேண்டும், அமைச்சரவையில் பங்கு தர முடியாது” என்பதில் இபிஎஸ் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக தலைவர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கூட்டணி அமைந்தால், தமிழக அரசியலில் பெரிய சுனாமி ஏற்படும், தமிழகத்தின் தேர்தல் கணக்குகள் முற்றிலுமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

