அரசியல் பரபரப்புக்குக் குறைவில்லாத தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இன்னும் ஒருசில நாள்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற உள்ளது.
நான்கு முனைப் போட்டி, 4,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், மே 4ஆம் தேதி முடிவு - என எல்லாம் நான்காகத் தெரியும் வேளையில், வாக்குகளும் நாலாபுறமும் சிதறுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
காரணம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். பிரசாரக் களத்தில் திரு விஜய் செல்லுமிடமெல்லாம் கூட்டம் அலைமோதுவதை ஊடகத்தினர் படம்பிடித்துக் காட்டுகிறார்கள். பெரும்பாலும் மாணவர்களையும் இளையர்களையும் உள்ளடக்கிய பெருந்திரளான கூட்டத்தைக் கண்டு, கணிப்புகளும் கருத்துகளும் பல்வேறு கதைகள் சொல்கின்றன. ஆனால், முடிவு தலைகீழாக மாறிவிடக்கூடிய அளவுக்கு மக்கள் மத்தியில் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. ஒருமுறை ஆண்ட பின்னர் அந்தக் கட்சி மீது எழக்கூடிய அதிருப்திகூட அடுத்த வெற்றியைப் பாதிக்கக்கூடிய அளவில் இல்லை என்கின்றனர் களப்பணியில் உள்ளோர்.
தமிழகத்தின் தேர்தல் வெற்றிகளைத் தீர்மானிப்பதில் இளையர்கள் மற்றும் பெண்களின் பங்கு அதிகம். தற்போதைய 57.3 மில்லியன் வாக்காளர்களில் ஐவரில் ஒருவர் இளையர் (20.7%); இருவரில் ஒருவர் பெண்கள் (51%). 2021 தேர்தலில் இருந்ததைக் காட்டிலும் இந்த விகிதம் மிகச்சிறிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது. அந்தத் தேர்தலில், செந்தமிழன் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் புதிய வரவான மக்கள் நீதி மய்யத்திற்கும் ஜென் ஸீ இளையர்களின் வாக்குகள் அதிகமாகப் பிரிந்து சென்றதால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பன இருபெரும் கழகங்கள்தான் என்னும் தேர்ந்தெடுப்பில் மாற்றம் நிகழவில்லை.
செல்வி ஜெயலலிதா இருக்கும்வரை அதிமுகவை ஆதரித்த பெண்களில் பலர், 2021 தேர்தலில் திமுக பக்கம் திரும்பினார்கள். இளையர் ஆதரவு அவ்வளவாகக் கிடைக்காத சூழலில், திமுகவின் வெற்றிக்குப் பெண்கள் துணைநின்றார்கள். அதனைத் தக்கவைக்கவே பெண்கள் நலனைக் குறிவைத்து திமுக அரசு சில திட்டங்களை நடைமுறைப்படுத்தியது என்றும் அவை அக்கட்சிக்கு இம்முறை பலனளிக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். மறுமுனையில், பெண் வாக்காளர் ஆதரவுத்தளத்தைத் தக்கவைக்கவோ அல்லது முதல்முறை வாக்களிப்போரை ஈர்க்கவோ அதிமுக எந்த உத்தியையும் செயல்படுத்தவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
செல்வி ஜெயலலிதாவுக்குப் பிறகு சிதறுண்ட அதிமுக, 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி தேர்தலுக்குத் தேர்தல் தோல்வி கண்டு பலவீனமாகத் தோன்றுவதால் அக்கட்சியே தவெக சுழலில் சிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் குறிப்பிடுவோர், ஆட்சிக்கு எதிரான கொஞ்சநஞ்ச அதிருப்தி வாக்குகளும் அதிமுக-பாஜகவுக்குப் பதில் தவெகவுக்குப் போகும் சாத்தியம் உள்ளது என்கிறார்கள். ஆயினும், அதிமுக அடியோடு சரிந்து மூன்றாமிடம் செல்லும் என்று, போகிறபோக்கில் சொல்லிவிட முடியாது.
வரலாறு உணர்த்தும் உண்மை என்னவெனில் - ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்குமேல் வலுவான கட்டமைப்புடன் இயங்கிவரும் அதிமுகவும் திமுகவும் எந்த ஓர் அரசியல் சுனாமியிலும் 70% வாக்கு வங்கியைத் தக்கவைக்கத் தவறியதில்லை. 1991 தேர்தலில் மிகமோசமான தோல்வியைச் சந்தித்தபோதுகூட திமுக 29% வாக்குகளைப் பெற்றிருந்தது. அதேபோல, 1996 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படுதோல்வியைச் சந்தித்தபோதும், அக்கட்சியால் 27% வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. ஒரு கட்சியின் வீழ்ச்சி இன்னொரு கட்சியின் வளர்ச்சியாகத் தொடரும் வேளையில், புதிய கட்சியான தவெகவின் தாக்கம் எப்படி இருக்கப்போகிறது என்பதே வாக்காளர்கள் மத்தியில் உள்ள கேள்வி.
“சரியான கூட்டணிகளை அமைப்பதிலும் தேர்தல்களில் வெற்றிக்கனி பறிப்பதிலும் கைதேர்ந்த, நன்கு வேரூன்றிய அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் ஊடக வெளிச்சமும் திரையுலகக் கற்பனைகளும் எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம்,” என்கிறார் சமூக-அரசியல் ஆய்வாளர் ஒருவர். பெரிய மாற்றத்தை ஏற்படுத்த புதிய கட்சி பத்து மில்லியன், அதாவது ஐந்தில் ஒரு பங்கு வாக்குகளையாவது பெறவேண்டும் என்பது அவரது கருத்து.
களம் எப்படி மாறினாலும் நிலையான ஆட்சியை ஏதாவது ஒரு பெரிய கட்சியிடம் ஒப்படைப்பதையே தமிழக மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தவெகவின் குறிக்கோள் கண்கூடாகத் தெரியாத நிலையில், பலம் பொருந்திய அரசாங்கத்தால் மட்டுமே மாநிலத்தின், மக்களின் உரிமைகளைக் காட்டிக்காக்க முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை. கூட்டணி ஆட்சியையோ யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு சட்டமன்றத்தையோ அவர்கள் விரும்பியதில்லை. 2006ல் அப்படி ஒரு நிலை ஏற்பட்டபோதுகூட கூட்டணிக் கட்சியான காங்கிரசின் ஆதரவில், கூட்டணி அல்லாத அரசை திமுக அமைத்தது.
வரலாறு இப்படிக் கூறினாலும், முடிவு அறிவிக்கப்படும் மே 4ஆம் தேதி வரப்போவது அசைத்துப் பார்க்கும் ஆடிக்காற்றா? அல்லது அந்திநேரத் தென்றல் காற்றா? காத்திருப்போம் விடை அறிய!

