சென்னை: தமிழகத்தில் கோடைக் காலம் நெருங்கி வருகிறது. எனினும், இப்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் தொடங்கி ஜூன் மாதம் வரை கோடைக் காலமாகும். இச்சமயம் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக மே மாதம் கத்திரி வெயில் காலத்தில் வீசும் வெப்ப அலையால் பலருக்கு வெப்ப வாதம் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது.
ஆண்டுதோறும் மாநிலத்தில் வெப்ப அலையால் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நீர்ச்சத்து குறைந்து, மயக்கம், வாதம் போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இம்முறை கோடைக் காலத்தில்தான் தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் வெயில், மழை பாராமல் வீதி, வீதியாகச் சென்று வாக்கு வேட்டையில் ஈடுபடுவர். எனவே, தொண்டர்கள் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதைக் கவனத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வெப்ப வாதப் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரு படுக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுகளை அமைக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

