புதுடெல்லி: இந்திய அளவில் சரக்கு ஏற்றுமதியில் அதிக வளர்ச்சி கண்டு, தமிழகம் முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளதாக அந்நாட்டின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இருந்ததைவிட தமிழகத்தின் மொத்த ஏற்றுமதிகளின் மதிப்பு 13.7 விழுக்காடாக உயர்ந்து, 59.3 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ. 5.1 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என அண்மைய புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி வர்த்தக அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
உலக அளவில் வர்த்தகப் பதற்றங்கள், புவிசார் அரசியலில் நிச்சயமற்ற சூழல்கள் நிலவியபோதும் தமிழகம் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளதாக அந்த அமைச்சு பாராட்டியுள்ளது.
குறிப்பாக, மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது என்றும் மின்னணுச் சாதனங்கள், கைப்பேசிகள், அவற்றுக்கான உதிரிப் பாகங்களின் ஏற்றுமதி 36 விழுக்காடு உயர்ந்துள்ளது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தப் பொருள்களின் ஏற்றுமதி மதிப்பானது, 19.9 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளதை இந்திய வர்த்தக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஒட்டுமொத்தத்தில், இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு மட்டும் 42 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதாவது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஒவ்வொரு 100 அமெரிக்க டாலர் மதிப்புள்ள மின்னணுப் பொருள்களில், 42 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருள்கள் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டவை என்பதை வர்த்தக அமைச்சின் அறிக்கை விளக்கியுள்ளது.
கடந்த 2021-22ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 3.5 விழுக்காடாக இருந்த நிலையில், அந்தப் பங்களிப்பு தற்போது 13.7 விழுக்காடாக வளர்ச்சி கண்டுள்ளது.
மொத்த ஏற்றுமதி மதிப்பில் இந்தியாவின் ஆகப்பெரிய மூன்றாவது மாநிலமாக உருவெடுத்துள்ள தமிழகம், வளர்ச்சி விகிதத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏற்றுமதி மதிப்பில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் முதலாம், இரண்டாம் இடங்களில் உள்ளன. ஆனால், வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை தமிழகம் 13.7 விழுக்காட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
கர்நாடகா 12.9, ஹரியானா 7.7, மகாராஷ்டிரா 6.4, உத்தரப் பிரதேசம் 3.6, மேற்கு வங்கம் 1.7 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
குஜராத் (4.9%), ஆந்திரா(3.9%), ராஜஸ்தான் (3.6%), தெலுங்கானா (27.5%) எனப் பல மாநிலங்கள் வளர்ச்சி விகிதத்தில் சரிவைச் சந்தித்துள்ளன.
கைப்பேசி உற்பத்தி மையங்களை விரிவடையச் செய்தது, வேதிப் பொருள்கள், பொறியியல் பொருள்களின் உற்பத்தி அதிகரித்தது, பல்வேறு உலக நிறுவனங்கள் முதலீடு செய்தது ஆகியவை தமிழகத்தின் வளர்ச்சி விகித உயர்வுக்குக் காரணிகளாக வர்த்தக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சென்னை, திருப்பெரும்புதூர், ஓரகடம், ஓசூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் மின்னணு உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தின் ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

