தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் பத்திரிகைகளைப் புறக்கணிக்கவில்லை: விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்

2 mins read
4db4bf3c-fdc5-4349-96f4-36957029c1b2
சென்னை விமான நிலையத்தில் இந்தி இதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார் திமுக எம்பி வில்சன். - படம்: ஊடகம்

சென்னை: விமான நிலையத்தில் தமிழ் பத்திரிகைகள், இதழ்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள புகாரை சென்னை விமான நிலைய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

நாங்கள் எந்த மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுப்பதில்லை என அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் அண்மையில் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வறையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியைத் திணிக்கும் வகையில் இந்தி மொழி இதழ்கள் மட்டுமே காணப்படுவதாகவும் அவர் சாடியிருந்தார்.

மேலும், விமான நிலைய நிர்வாகத்தின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் தமிழ் மொழியை இந்திய விமான நிலைய ஆணையம் புறக்கணிப்பது சரியல்ல என்றும் தமது பதிவில் குறிப்பிட்டிருந்த வில்சன் எம்பி, விமான நிலைய ஓய்வறையில் இந்தி இதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளித்துள்ளதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

“பயணிகளுக்கான ஓய்வறைகளில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிப் பத்திரிகைகள், வார இதழ்கள் வைத்துள்ளோம். நீங்கள் வந்து பார்க்கும்போது, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி இதழ்களை பயணிகள் விமானத்துக்குள் படிப்பதற்காக கையில் எடுத்துச் சென்றிருக்கலாம்.

“நீங்கள் பார்க்கும்போது இந்தி மொழி இதழ்கள் மட்டுமே இருந்துள்ளதால், நீங்கள் இப்பதிவைப் போட்டிருக்கலாம். நாங்கள் அனைத்து மொழிகளையும் ஒன்றாகவே பார்க்கிறோம்,” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் ஓய்வறையில் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள், இதழ்கள் இருக்கும் புகைப்படங்களும் அப்பதிவில் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்