சென்னை: ஆளுநரின் உத்தரவுக்கு ஏற்ப சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசுக்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்களும் எதிர்ப்பு தெரிவித்து 22 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். ஐந்து உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
மதிமுக உறுப்பினர்கள் இருவர் அவைக்கு வரவில்லை. தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தவெக வேட்பாளர் நீதிமன்ற உத்தரவு காரணமாக வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
கடந்த மே 10ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட ஜோசப் விஜய்க்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க மூன்று நாள்கள் அவகாசம் கொடுத்திருந்தார் ஆளுநர் அர்லேகர்.
அதன் பேரில், புதன்கிழமை (மே 13) நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றிய பின்னர் எதிர்க்கட்சியான திமுக வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது.
இதையடுத்து, முதல்வர் விஜய் கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்குப் பதிலளித்தார்.
பின்னர் சட்டமன்ற விதிகளின்படி, அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு அல்லது எதிர்ப்பைப் புலப்படுத்தும் முறையில், வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்துள்ள பகுதிகள் ஆறு பிரிவுகளாகக் கணக்கிடப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
முதலில் அரசுக்கு ஆதரவாக தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
அடுத்து, எதிர்ப்பு தெரிவிப்போர், நடுநிலை வகிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதன் முடிவில், தவெக அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
ஐந்து பேர் நடுநிலை வகித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதிமுகவில் நிலவும் உட்கட்சிப்பூசல் காரணமாக, அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 25 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவர்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

