அட்லான்டா: உலகக் கிண்ண காற்பந்தாட்டத் தொடரில் 16 குழுக்களுக்கிடையிலான சுற்றின் ஆட்டங்கள் புதன்கிழமை (ஜூலை 9) இடம்பெற்றன.
அந்த இரு ஆட்டங்களில் அர்ஜென்டினா அணியும் சுவிட்சர்லாந்தும் வெற்றி பெற்றுக் கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன.
எகிப்துடன் போட்டியிட்ட அர்ஜென்டினா, மிகவும் அதிர்ச்சியான முறையில் ஆட்டத்தில் இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்துத் தோல்வியை எதிர்நோக்கியது.
முதல்பாதியில் 15ஆம் நிமிடத்திலும் இரண்டாம் பாதியில் 67ஆம் நிமிடத்திலும் யாசர் இப்ராகிம், முஸ்தபா சிக்கோ இருவரும் எகிப்தை முன்னணிக்கு இட்டுச் சென்றனர்.
மேலும் 21வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நட்சத்திர ஆட்டக்காரர் ‘கேப்டன்’ லயனல் மெஸ்ஸி தவறவிட்டு அந்நாட்டு ரசிகர்களை மனமுடையச் செய்தார்.
அதுவரையில் எகிப்தின் ஆட்டக்காரர்கள், நடப்பு உலகக் கிண்ண வெற்றியாளர்களான அர்ஜென்டினாவைத் திணறவைத்தனர்.
அனுபவமும் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கும் அர்ஜெந்டினா ஆட்டக்காரர்களை மீண்டு எழச் செய்தது. ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் கிரிஸ்டியன் ரொமெரோ ஒரு கோலைப் போட்டார். பிறகு 83ஆம் நிமிடத்தில் மெஸ்ஸி இரண்டாம் கோலை அபாரமாகப் புகுத்தி ஆட்டத்தைச் சமநிலைப் படுத்தினார்.
ஆட்டம் முடியச் சில நிமிடங்களே இருந்த நிலையில் 93வது நிமிடத்தில் என்சோ பெர்னான்டெஸ் மூன்றாம் கோலைப் புகுத்தி, அர்ஜென்டினாவின் கால் இறுதிக் கனவை நிறைவேற்றினார்.
மற்றோர் ஆட்டத்தில், கொலம்பியாவுடன் போராடிய சுவிட்சர்லாந்து அணி 90 நிமிடங்களைக் கடந்து, கூடுதல் நேரமாக 30 நிமிடங்கள் ஆடியும் 0-0 என்று கோல்களின்றிச் சமநிலையில் ஆட்டத்தை முடித்தது.
பெனால்டி வாயிலாக இறுதியில் சுவிட்சர்லாந்து போட்டியில் 4-3 என்று வென்றது.
கால் இறுதிச் சுற்றில், பிரான்ஸ் - மொரொக்கோ, ஸ்பெயின் - பெல்ஜியம், நார்வே - இங்கிலாந்து, அர்ஜென்டினா - சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் பொருதவிருக்கும் ஆட்டங்கள் உலகக் கிண்ணக் காற்பந்து ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தக் காத்திருக்கின்றன.

