தரவு நிலையங்களின் தாக்கம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்: மலேசிய ராணி

தரவு நிலையங்களின் தாக்கம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்: மலேசிய ராணி

1 of 2
படம்: எஃப்எம்டி மலேசிய ஊடகம்
படம்: த ஸ்டார் மலேசிய ஊடகம்

14 Nov 2026 - 3:12 pm

2 mins read

ஜோகூர்பாரு: மலேசியாவில் செயல்படும் தரவு நிலையங்கள் சமூகங்களுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை அதிகாரிகள், தனியார் துறையினர் ஆகியோர் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் ராணி ராஜா ஜாரித் சோஃபியா கேட்டுக்கொண்டார்.

ஜோகூர்பாருவின் ஸ்கூடாய் பகுதியில் சனிக்கிழமை (நவம்பர் 14) நடந்த மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (யுடிஎம்) 70வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போது அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

அதிக அளவில் தரவு நிலையங்கள் பயன்படுத்தும் தண்ணீர், மின்சாரம், நிலம் ஆகியன உள்ளூர் சமூகங்களுக்கு ஏற்படுத்தும் விளைவுகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

பகல், இரவு உட்பட நாள்முழுதும் தரவு நிலையங்கள் ஏற்படுத்தும் சத்தம், அங்கு பயன்படும் விளக்குகளின் ஒளியளவு போன்றவற்றை ஆராயப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

“இயற்கைக்கு விளைவிக்கும் பாதிப்புகளை கல்வித் திறன் நிறைந்த சமுதாயமான நாம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். நமது எண்ணங்களை மாற்றியமைத்து பொறுப்புடன் நடந்து அடுத்த தலைமுறைகளுக்கு உலகைப் பாதுகாப்பாக வழங்கிச் செல்வது நமது கடமையாகும்,” என்று அவர் விளக்கினார்.

இன்றைய உலகினை செயற்கை நுண்ணறிவு முன்னெடுத்துச் செல்கிறது. அதனுடன் பல பெரிய சவால்களும் தொடர்கின்றன. மக்கள் வாழ்வின் தரத்தை உயர்த்துவதில் ‘ஏஐ’ பயன்படுத்தப்பட வேண்டும். பொருளியல் லாபத்துக்கு மட்டும் அதனை உபயோகிக்கக்கூடாது என்று ராணியார் கூறினார்.

மலேசியாவின் ஆய்வுப் பல்கலைக்கழகமான யுடிஎம் நாட்டிலேயே முதன்முதலாக செயற்கை நுண்ணறிவுக்கென ஒரு கல்வித் துறையை ஏற்படுத்தியுள்ளது. எனவே அறநெறி, நேர்மை உட்பட்ட மனித விழுமியங்களை அதன் அடிப்படையாகக் கொண்டு தொழில்நுட்ப மேம்பாடுகள் தொடர்வதைக் கழகம் உறுதிசெய்வது அதன் பொறுப்பாகும் என்று ராணி ராஜா ஜாரித் சோஃபியா தமது உரையில் யுடிஎம் நிர்வாக அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்