நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரம், மேன்ஹாட்டன் பகுதியில் உள்ள 37 மாடிக் கட்டடம் ஒன்றின் தூண்கள் வளைந்ததால், கட்டடத்தின் நிலைத்தன்மை குறித்து அச்சம் எழுந்துள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்பு கருதி அங்கிருந்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
முன்னணி மருந்து நிறுவனமான ஃபைசரின் முன்னாள் தலைமையகமாகச் செயல்பட்ட அக்கட்டடம், தற்போது குடியிருப்பு வளாகமாக மாற்றப்பட்டு வருகிறது.
அதற்கான கட்டுமானப் பணிகள் நடந்துவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) காலை அக்கட்டடத்தின் இரண்டு முக்கியத் தூண்கள் வளைந்து, தரைப்பகுதிகள் தொய்வுற்று, விரிசல்கள் ஏற்பட்டன.
ஆயினும், கட்டடம் முழுமையாக இடியும் அபாயம் இல்லை எனக் கட்டுமான நிறுவனம் கூறுகிறது.
ஆனால், “கட்டடம் நிலைத்தன்மையற்றதாக இருக்கிறது. வளைந்த தூண்களில் ஒன்று சற்று நகர்ந்ததையும் கண்டோம்,” என்று நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள பள்ளிகள், தங்குவிடுதிகள், வணிக வளாகங்களில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். உள்ளூர்த் தொலைக்காட்சி நிலையம் ஒன்றும் நேரலையின்போது படக்கூடத்தைவிட்டு வெளியேறியது. நல்ல வேளையாக யாரும் காயமடையவில்லை.
கூடுதல் மாடிகளை எழுப்பியதால் ஏற்பட்ட மிகையான எடையே இச்சேதத்திற்குக் காரணம் எனத் தொழிற்சங்கப் பேராளர் கிளிஃபர்ட் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஆளில்லா வானூர்திகள்மூலம் சேதங்கள் கணிக்கப்பட்டு, கட்டடத்தை முட்டுக்கொடுத்து நிலைநிறுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முழுமையான பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே மக்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

