அமெரிக்க கவனிப்பாளர்கள்: தென்கிழக்காசியா சீனா பக்கம் சாய்வது நீடிக்காமல் இருக்கலாம்

அமெரிக்க கவனிப்பாளர்கள்: தென்கிழக்காசியா சீனா பக்கம் சாய்வது நீடிக்காமல் இருக்கலாம்

2 mins read
e191e0ad-859e-4230-82c0-00c40f38dfb1
தென்சீனக் கடலில் அண்மையில் சீனாவின் கரையோரக் காவல்படைக் கப்பல் பிலிப்பீன்ஸ் படகின் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: தென்கிழக்காசியாவில் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சூழல் வந்தால் கூடுதலானோர் சீனாவையே விரும்புவதாக யூசோப் இஷாக் கல்விக் கழகத்தின் தென்கிழக்காசிய ஆய்வுக் கழகம் நடத்திய கருத்தாய்வு ஒன்றில் தெரிய வந்தது.

எனினும், அந்தப் போக்கு அநேகமாக நீடிக்காது என்று கவனிப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆண்டுதோறும் நடத்தப்படும் அந்தக் கருத்தாய்வில் இம்முறை 1,994 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள், வர்த்தகர்கள், கவனிப்பாளர்கள் ஆகியோர் அடங்குவர்.

அமெரிக்காவைவிட சீனா பக்கம் சாய்வதையே விரும்புவதாக கருத்தாய்வின் பங்கேற்பாளர்களில் 50.5 விழுக்காட்டினர் தெரிவித்தனர். அந்த விகிதம், அமெரிக்கா பக்கம் சாய்வதை விரும்பும் 49 விழுக்காட்டினரைக் காட்டிலும் சற்று அதிகம்.

யூசோப் இஷாக் கல்விக் கழகத்தின் தென்கிழக்காசிய ஆய்வுக் கழகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான தென்கிழக்காசிய நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் கருத்தாய்வின் முடிவுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த நான்கு கருத்தாய்வுகளின் முடிவுகளில் கூடுதலானோர் அமெரிக்கா பக்கம் சாய்வதை விரும்புவதாகத் தெரிவித்திருந்தனர்.

எனினும், ஆக அண்மைய கருத்தாய்வின் முடிவுகள் ஆச்சரியம் தரும் வண்ணம் அமையவில்லை என்று கவனிப்பாளர்கள் சிலர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் குறிப்பிட்டனர். இதனால் இந்த வட்டாரம் எவ்விதக் குறையுமின்றி சீனாவுடன் கூடுதல் நெருக்கமாக இருக்கிறது என்று அர்த்தம் கிடையாது என்றும் அவர்கள் கூறினர்.

இவ்வட்டாரத்தின் ஆக முக்கியமான அரசியல் சார்ந்த கவலையாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் காஸா போர், கருத்தாய்வில் பங்கேற்றோரிடையே தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்கத் தலைநகர் வா‌ஷிங்டனில் இயங்கும் உத்திபூர்வ, அனைத்துலகக் கல்வி நிலையத்தின்கீழ் வரும் தென்கிழக்காசியா தொடர்பான இயக்கத்தை நடத்தும் திரு கிரெகரி போலிங் குறிப்பிட்டார்.

அதேபோல், காஸா போரினால் அமெரிக்கா மீதான நம்பிக்கை பாதிக்கப்பட்டிருப்பது அதிக ஆச்சரியத்தைத் தரும் ஒன்றல்ல என்றார் நியூயார்க்கின் சமூகக் கொள்கை நிலையத்தின் இணை இயக்குநரான திரு பிலேக் பர்கர்.

மலேசியா, இந்தோனீசியா, புருணை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் சீனா பக்கம் சாய்வதை விரும்புவதாக ஆய்வின் முடிவுகள் காட்டின.

குறிப்புச் சொற்கள்