அன்பும் உரையாடலும் தமிழில் பகிர்ந்த குடும்பத்தில் வளர்ந்த வள்ளியம்மை அடைக்கப்பனுக்குத் தமிழ் மனப்பாடம் செய்ய வேண்டிய பாடமாக ஒருபோதும் இருந்ததில்லை.
அம்மொழி அவரோடு உயிரில் கலந்த ஓர் உறவாகவே இருந்தது.
அவ்வாறு தமிழால் வளர்க்கப்பட்ட அவர், தமிழ்மொழி பாடத்திட்ட வல்லுநராகப் பணிபுரியும் தமது தாயின் காலடித் தடங்களைப் பின்பற்றி தமது தமிழ் துறைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
22 வயதான வள்ளியம்மை, அண்மையில் நடைபெற்ற தேசியக் கல்விக் கழகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பட்டமளிப்பு விழாவில் கல்விக்கான (தமிழ்) படிப்பில் பட்டயம் பெற்றார்.
மேலும், கல்வி, நடைமுறை செயல்திறனுக்காக, சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் புத்தகப் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது.
“நான் விருதுக்காகப் படிக்கவில்லை. இருப்பினும், எமது முயற்சிகள் பாராட்டப்படும்போது அது எனக்கு மிகுந்த மனநிம்மதியையும் மேலும் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளிக்கிறது,” என்றார் வள்ளியம்மை.
மேலும், தம்மைப் போன்ற இளம் ஆசிரியர்களை இவ்வாறு ஊக்குவிப்பது அவர்களை மேலும் சிறப்பாகச் செயல்பட தூண்டும் என்றும் அவர் கூறினார்.
வள்ளியம்மையின் பயணம் வெறும் சான்றிதழ்களையும் விருதுகளையும் மட்டும் சார்ந்ததல்ல. தமிழ் பேசும் குடும்பத்தில் வளர்ந்ததால், அவரது வீடே அவரது முதல் வகுப்பறையாக அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
வள்ளியம்மை பாலர் பள்ளியில் படித்தபோது, அவரது தாயார் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.
அன்றாட வாழ்வின் இயல்பான தருணங்களைத் தமிழில் உரையாட தமது பிள்ளைகளை ஊக்குவித்த அவர், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார்.
“உதாரணமாக, எமது தாயார் சமையலுக்குத் தேவையான பொருள்களின் பெயரைத் தமிழில் கூறி, அவற்றை எங்களை எடுத்துவருமாறு சொல்வார். இதன்மூலம், புதிய சொற்கள், எண்கள், நிறங்கள் எல்லாம் தமிழில் சொல்லக் கற்றுகொண்டோம்,” எனத் தமிழ்மொழியைத் தம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க தமது தாயெடுத்த முயற்சிகளை வள்ளியம்மை நினைவுகூர்ந்தார்.
இதுபோன்ற அனுபவங்களே, தொடக்கக் கல்லூரியில் அவர் தமிழ்மொழி மற்றும் இலக்கிய பாடத்தில் சிறந்து விளங்க உதவியது. அவரது சாதனைகள் தமிழ் முரசு நாளிதழிலும் வெளியாகின.
“தமிழ் துறையில் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் இருந்தது. ஊடகம், மொழிபெயர்ப்பு போன்ற துறைகள் இருந்தபோதும், பிள்ளைகள்மீது கொண்ட நேசத்தால் ஆசிரியர்ப் பணியைத் தேர்வுசெய்தேன்,” என அவர் கூறினார்.
மதிப்புகளையும் மனப்பாங்கையும் பிள்ளைகளிடையே புகுத்தும் சக்தி ஆசிரியர்களிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய பயிற்சி காலத்தில், மாணவர்களுக்கேற்ற அணுகுமுறையைத் தமது வகுப்பறையில் கடைப்பிடித்து வருவதாக வள்ளியம்மை சொன்னார்.
உணர்வுபூர்வ ஆதரவும், விளையாட்டோடு கூடிய கற்றலும், மின்னிலக்க கருவிகளும், கதைசொல்லும் நுட்பங்களும் அவரது பாடங்களில் இடம்பெறுகின்றன.
“ஒவ்வொரு மாணவரின் பெயரையும் நான் நினைவில் வைத்திருப்பேன். அவர்களை அவர்களின் பெயரால் அழைப்பது அவர்கள் தனிப்பட்டவர்களாக மதிக்கப்படுகின்றனர் என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும்,” என்றார் அவர்.
மாணவர்களின் அன்றைய தினம் எப்படி இருந்தது, வகுப்புகள் எப்படி இருந்தன போன்ற கேள்விகள் சாதாரண கேள்விகள்போல் தோன்றினாலும் அவை வெளிப்படுத்தும் அக்கறை, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான உறவையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என்று வள்ளியம்மை குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாணவரும் தாங்கள் முக்கியமானவர்கள்தான் என்று உணர வைப்பதே தமது முதன்மை நோக்கங்களில் ஒன்று என்றார் அவர்.
தமது மகளை நினைத்து பெருமிதப்படுவதாகக் கூறிய திருவாட்டி அடைக்கப்பன், தமிழைக் கட்டிக்காக்கும் பணியில் அனைவரும் பங்கு வகிக்க வேண்டும் என்றார்.
“தமிழை நாம் பேசவில்லை என்றால், யார் அதைப் பேசுவார்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இன்றைய காலகட்டத்தில் தாத்தா பாட்டி கூடப் பேரக்குழந்தைகளிடம் ஆங்கிலத்தில்தான் பேசுகின்றனர் என வருந்திய அவர், மொழிக்கான வளர்ச்சி வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தற்போது, தமிழ் கல்வி பட்ட படிப்பிற்கு தயாராகி வரும் வள்ளியம்மை, இன்றைய தலைமுறைக்குப் பிடித்த வகையில் தமிழ் பாடங்களைக் கற்பிப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து கண்டறிந்து வருகிறார்.
நமது கலாசாரம், மரபு, இசை, அடையாளம் ஆகியவற்றை எதிர்காலத்திற்கு தாங்கிச் செல்லும் ஒரு பாலம் தமிழ் என்று அவர் கருதுகிறார்.
“நாம் தமிழுடன் வளர வேண்டும். அதை ஒருபோதும் நிராகரிக்கக் கூடாது. மாணவர்கள் தமிழின் அழகையும் பெருமையையும் உணர வைப்பதே எமது குறிக்கோள்,” என வள்ளியம்மை கூறினார்.

