கின்னஸ் உலகச் சாதனையுடன் மலர்ந்த 10வது தோட்ட விழா

தக்காஷிமாயாவில் பூத்துக் குலுங்கிய நந்தவனம்:

கின்னஸ் உலகச் சாதனையுடன் மலர்ந்த 10வது தோட்ட விழா

2 mins read
430d94ab-5289-4632-85ef-dd9f8ef6e87e
சிங்கப்பூர்த் தோட்ட விழாவின் தொடக்க நிகழ்வின் ஒரு பகுதியாகத் தக்காஷிமாயா ஸ்குவேரில் நிறுவப்பட்ட ஊஞ்சலுக்காக வியாழக்கிழமை (மார்ச் 12) கின்னஸ் உலகச் சாதனைச் சான்றிதழை அதிகாரபூர்வ நடுவர் சோனியா உஷிரோகோச்சி (வலம்), தேசியப் பூங்காக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹுவாங் யு-நிங்கிடம் வழங்கினார். - படம்: தேசியப் பூங்காக் கழகம்

சிங்கப்பூர்த் தோட்ட விழாவின் 10வது ஆண்டுநிறைவு நிகழ்ச்சிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளன.

தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை (மார்ச் 12) தக்காஷிமாயா ஸ்குவேர் கீழ்த்தளத்தில் கோலாகலமாக அரங்கேறியது.

தேசியப் பூங்காக் கழகமும் கரையோரப் பூந்தோட்டமும் விழாவை இணைந்து நடத்தின.

நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஐந்து மீட்டர் உயரமுள்ள ஊஞ்சல் புதிய கின்னஸ் உலகச் சாதனை படைத்தது. ஓர் ஊஞ்சலில் அதிகப் பூக்கள் இருந்ததற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஏறக்குறைய 60 வகையான மலர்கள் ஊஞ்சலை அலங்கரித்தன. மொத்தம் 12,888 மலர்கள் நிரம்பியிருந்த ஊஞ்சல் கலைநயத்தோடு காட்சி தந்தது.

கின்னஸ் உலகச் சாதனைக்காக ஆயிரக்கணக்கான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட ஊஞ்சல்.
கின்னஸ் உலகச் சாதனைக்காக ஆயிரக்கணக்கான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட ஊஞ்சல். - படம்: தேசியப் பூங்காக் கழகம்

விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) வரை நீடிக்கும்.

10வது ஆண்டுநிறைவையொட்டிய முக்கிய நிகழ்ச்சி ஜூலை 4 முதல் 12ஆம் தேதிவரை கரையோரப் பூந்தோட்ட வளாகத்தில் நடைபெறவுள்ளது.

தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய பூங்காக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹுவாங் யு-நிங், “பிரம்மாண்டமான இந்த ஊஞ்சல் உண்மையான சமூக உணர்வின் அடையாளமாகத் திகழ்கிறது,” என்று குறிப்பிட்டார்.

மாணவர்கள், தோட்டக்கலையில் ஆர்வமுள்ள சமூகத்தினர், தொண்டூழியர்கள், பூங்காக் கழக ஊழியர்கள் உட்பட ஏறக்குறைய 200 பேர் கடந்த இரண்டு நாளாக இந்த எழில்மிகு படைப்பை உருவாக்கியதாக அவர் சொன்னார்.

மேலும் விழா கண்டுள்ள வளர்ச்சி சிங்கப்பூரின் “இயற்கையில் ஒரு நகரம்” என்ற தொலைநோக்குப் பார்வையைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரான்சைச் சேர்ந்த தலைமை நடுவர் திரு பேஸ்கல் கார்ப், “தனித்துவமான வெப்பமண்டலச் சூழலாலும் அரிய மலர் வகைகளாலும் உலகின் தலைசிறந்த மூன்று தோட்ட விழாக்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது; இது ஆகச் சிறந்தவற்றுள் ஆகச் சிறந்ததற்கான போட்டியாகும்,” எனப் புகழாரம் சூட்டினார்.

“இன்றைய மன அழுத்தம் நிறைந்த அவசர உலகில் மலர்கள் ஆழ்ந்த அமைதியையும் புன்னகையையும் தந்துவருகின்றன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

விழாவில் நான்கு நாளும் பொதுமக்கள் பங்கேற்கக்கூடிய பல்வேறு பயிலரங்குகளும் அறிவுப் பகிர்வு அமர்வுகளும் இடம்பெறுகின்றன.

சிங்கப்பூர்த் தோட்ட விழா 2026இன் தொடக்க நிகழ்வையொட்டி தக்காஷிமாயா ஸ்குவேர் கீழ்த்தளத்தில் கேளிக்கைத் திருவிழா அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்த் தோட்ட விழா 2026இன் தொடக்க நிகழ்வையொட்டி தக்காஷிமாயா ஸ்குவேர் கீழ்த்தளத்தில் கேளிக்கைத் திருவிழா அமைக்கப்பட்டுள்ளது. - படம்: தேசியப் பூங்காக் கழகம்

விழாவிற்கான நுழைவுச்சீட்டுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. தொடக்க விழா நிகழ்ச்சிகளைக் காணச் செல்வோருக்குச் சிறப்பு தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.

“முந்திய ஆண்டுகளில் வெற்றி வாகை சூடிய சாதனையாளர்களை மீண்டும் ‘ஆல்-ஸ்டார்ஸ்’ போட்டியில் ஒன்றிணைப்பதன் மூலம், தோட்டக்கலை நுணுக்கங்களின் உச்சத்தை எங்களால் உலகிற்குப் பறைசாற்ற முடிகிறது,” என்று சிங்கப்பூர் தோட்ட விழாவின் இயக்குநர் டென்னிஸ் லிம் தெரிவித்தார்.

ஜூலை மாதத் திருவிழாவிற்கு அதிகமானோரை ஈர்க்க இந்தத் தொடக்க விழா உதவும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்