தேசம் தனது 60வது ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வேளையில், சிங்கை தமிழ்ச் சமூகத்தின் மாண்பு, ஈகை, ஆற்றல், மரபு, வாழ்க்கைத் தொழில், கலை, அருஞ்சாதனை உள்ளிட்ட பலவற்றை எடுத்துச்செல்லும் அன்பளிப்பாக உருவெடுத்து வருகிறது சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்.
தமிழ்ச் சமூகத்தின் மரபு, அது நாட்டுக்கு அளித்த ஆளுமைகள், தமிழர்களின் நற்செயல்கள் ஆகியவற்றைப் பற்றி அறிய நினைக்கும் அனைவருக்கும் கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தையும் கண்முன் தரவிருக்கிறது இந்தக் கலைக்களஞ்சியம்.
அவ்வகையில், பற்பல ஆண்டுகள் கடந்த பின்னரும் வரலாற்றை மீண்டும் பார்க்கவும் படிக்கவும் நினைப்போருக்கு உதவவிருக்கும் அதற்கு வடிவம் கொடுத்த தொழில்நுட்பம் யாது?
என்றோ நடந்து முடிந்த பல்வேறு நிகழ்வுகளை மின்மயமாக்கி தலைமுறைகள் கடந்தும் அவை நிலைத்து நிற்க உதவிய மென்பொருள் சார்ந்த அமைப்புகள் என்னென்ன ஆகியவற்றை இக்கட்டுரை விவரிக்கின்றது.
பாரம்பரிய தொன்மையைச் சந்தித்த தொழில்நுட்ப ஆற்றல்
சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தின் உருவாக்கத் திட்டத்தில் தேசிய நூலக வாரியமும், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் இணைந்து பணியாற்றி வருகின்றன என்பது நாம் அறிந்ததுதான்.
அவ்வகையில் நூலகம் நிறுவவுள்ள முதல் இருமொழி கலைக்களஞ்சியம், சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் என்பதும் குறிப்பிடத்தக்கதே.
எனினும் கலை, தொலைத்தொடர்பு, சமூகம், பொருளியல், கல்வி, கலாசாரம், வரலாறு, ஆளுமைகள், சமயம், அரசியல், விளையாட்டு எனப் பல்வேறு பிரிவுகளில் கலைக்களஞ்சியத்திற்கான கட்டமைப்பை வடிவமைப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
இதற்கான உள்ளடக்கங்கள், புகைப்படங்கள், தகவல்கள், தரவுகள், அவற்றைப் பிரித்தல், தொகுத்தல், இணைப்புகளைக் கண்டறிதல் எனப் பல்வேறு நிலைகளில் தொழில்நுட்பப் பணிகள் நீண்டன.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து தமிழ் முரசிடம் கருத்துரைத்த திரு பெட்ரிக் செர், 39, தனிச்சிறப்பு வாய்ந்த இந்த முயற்சிக்கான தொழில்நுட்பத் திட்டத்தை வகுத்தபோது மனத்தில் எழுந்த முதன்மையான எண்ணம்குறித்து விவரித்தார்.
மின்னிலக்க, நூலகச் சேவைகள் பிரிவின் மூத்த திட்ட நிர்வாகியான திரு செர், தமிழர் கலைக்களஞ்சியத் திட்டம் என்றதுமே வாசகர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கிட வேண்டும் எனும் ஒரே எண்ணமே மேலோங்கி இருந்தது என்றார்.
“நூலகத்தின் தற்போதைய வழிமுறைகள் தமிழ் மொழிக்கான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. என்றாலும் வாசகர்கள் ஒரே நேரத்தில் எளிதாகத் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் மின்னிலக்கத் தளத்தில் கலைக்களஞ்சியத்தைப் படித்து மகிழ பல்வேறு ஆதரவு அம்சங்களை உட்புகுத்த வேண்டியிருந்தது,” என்றார் திரு செர்.
வாசகர்களைக் கவர எழுத்துருவில் சிறப்புக் கவனம்
மின்னிலக்கத் திரையில் கலைக்களஞ்சியத்தை வாசிக்கவிருக்கும் மக்களின் கவனத்தை ஈர்க்க, அவர்கள் எளிமையாகப் படிப்பதற்கு ஏதுவான தமிழ் எழுத்துருக்களைக் குழு பயன்படுத்தியுள்ளதாகச் சொன்னார் திரு ராம்சந்தர் கிருஷ்ணா, 35. இவர் வாரியத்தின் மின்னிலக்க நூலகச் சேவைகள் பிரிவின் மூத்த திட்ட நிர்வாகி.
“ஆங்கிலத்தில் வாசிக்க எளிதாக இருக்கும் எழுத்துருக்கள் பெரும்பாலான சூழல்களில் தமிழ் எழுத்துருக்களுடன் ஒத்துப்போகாது.
‘‘இப்பிரச்சினையை களைவதற்காக இவ்விரு மொழிகளுக்கும் தன்னியக்க முறையில் எழுத்துருக்களை வடிவமைத்திடும் திறன்மிக்க அமைப்பை உருவாக்கினோம்,” என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய திரு ராம், அச்சுக்கலையில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது என்றும் அனைத்துத் தரப்பினருக்கும் தெளிவாகவும் வாசிப்பதற்கு ஏதுவாகவும் மின்தளம் திகழும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
புத்தாக்கம் இல்லாமல் தொழில்நுட்பம் இல்லை. அவ்வகையில் இருமொழிகளில் படிக்கவிருக்கும் வாசகர்களுக்குப் புதுவித வாசித்தல் அனுபவத்தையளித்திட ‘tooltip’ எனும் தகவல் குறிப்புகளும் மின்னிலக்கத் திரையில் தோன்றவுள்ளன.
இப்பணியில் கவனம் செலுத்திய திரு ராம், இம்முறை குறித்தும் விளக்கினார்.
‘‘பொதுவாக நேரடி மொழிபெயர்ப்பு இல்லாத வார்த்தைகளுக்கு இத்தகைய தகவல் குறிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
‘‘உதாரணமாக, ‘ராஃபிள்ஸ்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்ட இடத்தில் அது வெவ்வேறு வண்ணங்களில் இடம்பெற்றிருக்கும். அதன் ஆங்கில வார்த்தையைப் பார்க்க நினைக்கும் வாசகர்களுக்கு ஒரேநேரத்தில் உடனடி மொழிபெயர்ப்பாக ‘Raffles’ எனும் ஆங்கிலச் சொல் பளிச்சிடும்.
‘‘அவ்வகையில் தகவல்களை ஒரே நேரத்தில் இருமொழிகளில் எளிதாக அறிந்துகொள்ளலாம்,’’ என்று கூறினார் திரு ராம்.
இதற்கு முன்பு நூலக வாரியம் இந்தப் புத்தாக்கமுறையை வேறு எத்திட்டத்திற்கும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனைகளைத் தொகுக்க உதவிய வல்லுநர் குழு
இருநூறு ஆண்டுக்கால சிங்கப்பூர்த் தமிழ் மக்களின் வரலாற்றை நொடிப்பொழுதில் வருடிப்பார்க்க தொழில்நுட்பத்தின் பல்வேறு திறன்சார் அம்சங்களையும் தொடுத்து, இம்முயற்சியில் குறுக்கிட்ட சவால்களையெல்லாம் சாதனைகளாக உருமாற்றிவருகிறது நூலகத்தின் தொழில்நுட்ப வல்லுநர் அணி.
மூத்த நூலகரும் நூலக வள நிர்வாகத்தின் நிர்வாகியுமான திருவாட்டி பேமலா லோ, 38 இதுகுறித்து பேசினார்.
“உதாரணமாக, ‘அகம் நாடக அமைப்பு’ குறித்த தகவலை வாசகர்கள் கலைக்களஞ்சியத்தில் படிக்கும்போது, அவர்களது ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில், அவ்வமைப்பு குறித்த முந்தைய இணைப்புகள், அல்லது தகவல்கள் சார்ந்த இதர சுட்டிகளும் இணையப்பக்கத்தில் இருக்கும்.
எனவே, ஒவ்வொரு பகுதிக்கும் இவ்வாறு பட்டியலிடும்போது. தமிழ்ச் சமூக வாழ்க்கைப் பயணத்தை எடுத்தியம்பும் குறிப்புகள் அனைத்தும் கிடைத்தாலும், அவை சரியானதா? அதற்கான இணைப்புகள் இயங்குகின்றனவா, அதற்குரிய பொருத்தமான பத்திகளை இணைத்திருக்கிறோமா என்று மிகுந்த கவனத்துடன் தொகுத்துள்ளோம் என்றார் திருவாட்டி லோ.
இம்முயற்சி அனைத்திலும் நிலைத்திறன் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் அனைத்துலக தர மதிப்பீடுகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறிப்புகள் கலைக்களஞ்சியமான தருணம்
தமிழ் மக்களின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் எண்ணற்ற குறிப்புகள் புகைப்படங்களுடன் கிடைத்த மாத்திரத்தில் ஒரு தரப்பிற்கு பணி முடிந்திருக்கலாம்.
ஆனால் அவற்றைச் சரிபார்த்து அவற்றிற்கான இறுதி வடிவத்தைக் கொடுக்க வேண்டியிருந்த குமாரி சைனபின், 29, வேலை அப்போதுதான் தொடங்கியது.
இவர் தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவில் நூலகர். கிடைத்த தகவல்களைக் கலைக்களஞ்சியத்தின் கட்டமைப்புக்கு ஏற்ப வகைப்படுத்தல், தலைப்பு, வடிவமைப்பு, படங்களை இணைத்தல் எனப் பற்பல பணிகளைத் துல்லியமாக மேற்கொண்டு இத்தொகுப்பிற்கு நிறைவு வடிவத்தை அளித்திடும் பணியில் இணைந்திருந்தார் குமாரி சைனப்.
“ஏறத்தாழ 800க்கும் அதிகமான செய்திகள் இருந்தன. ஒவ்வொன்றிற்கும் தேவையான சுட்டிகள், படங்கள், தரவிணைப்பு இடுதல், எனப் பல்வேறு அம்சங்களைப் புகுத்தி, அவை துல்லியமாக உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்,” என்றார் அவர்.
எந்தவொரு குறிப்பும் தவறுதலாக மீண்டும் இடம்பெறாததை உறுதிசெய்தல் என, இதற்காக ஏறக்குறைய 800 மணி நேரங்களுக்கு அதிகமாகவே எடுத்தது என்று விளக்கினார் திருவாட்டி சைனப்.
ஆழமான பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாக்க முடிவது பெரும்பேறு
பல மணிநேர வேலை, கண்சிமிட்டாமல் கணினி திரையில் கவனத்துடன் மின்தொகுப்புகளை வடிவமைக்க வேண்டும். என்றாலும் இந்தச் சவால்கள் தமது மனத்திற்கு ஏன் மிகவும் பிடித்துள்ளது என்றும் தெரிவித்தார் அவர்.
“சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்’ திட்டத்தில் பணியாற்றுவது மிகவும் அர்த்தமுள்ள மனத்திற்கு நிறைவானதொன்றாகக் கருதுகிறேன். இங்குள்ள தமிழ்ச் சமூகத்தின் செழிப்பான பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பேணிட, அவர்களின் குரல்கள், கருத்துக்கள், பங்களிப்புகளை ஆவணப்படுத்திட இதை ஒரு வாயிலாக எண்ணுகிறேன்,” என்றார் அவர்.
மேலும் கல்வியாளர்கள், ஆய்வறிஞர்கள், சமூகத்தினர் என அனைவருக்குமான நீடித்த நிலையான வளத்தை உண்டாக்கும் இம்முயற்சியில் இணைந்திருப்பது மதிப்புமிக்கது என்றார் சைனப்.
சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் பொக்கிஷமாய், தமிழ் மக்களுக்கான முதல் இருமொழிக் கலைக்களஞ்சியமாய் மின்தளத்தில் தோற்றுவிக்கப்படும் இந்தக் கலைக்களஞ்சியத்திற்கு தொழில்நுட்பம் மிகப் பெரிய அடையாளத்தை வழங்கியுள்ளது.
முன்னதாக இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆதரவு குறித்துத் தெரிவித்தார் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் தலைவரும் தொகுப்பின் துணை ஆசிரியருமான து. அழகிய பாண்டியன்.
‘‘பெறப்பட்ட தகவல் அவ்வளவு சரியாகப் படவில்லை என்று தோன்றும்போது, வேறுசில தரவுகளைப் பார்த்துவிட்டோ அல்லது வேறு சிலரைக் கேட்டுவிட்டுதான் அந்தத் தகவலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
‘‘ஒருவேளை எங்களையும் மீறித் தவறான தகவல் இருந்தால், அது நிரூபிக்கப்பட்ட உடனேயே, மாற்றிவிடுவோம்.
‘‘மின்தளத்தில் இருப்பதாலும் இது வாழும் கலைக்களஞ்சியமாகத் திகழப்போவதாலும், அவற்றை மாற்றுவது எளிது,’’ என்றார் திரு பாண்டியன்.
காலச்சுவடுகளை உயிர்ப்பித்த புகைப்படங்கள்
வார்த்தை, வடிவம், தரவுகள் எனப் பலவும் சங்கமித்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் பேழையான இக்கலைக்களஞ்சிய வடிவமைப்புப் பணியில் புகைப்படங்கள் வழியாக அவற்றை மேலும் மிளிரச் செய்த கைவண்ணத்தின் சொந்தக்காரர் திரு முகம்மது ஷாஃபி, 40.
தேசிய நூலக வாரியத்தின் ‘கலை, பொதுப் பிரிவின்‘ நூலகரான திரு ஷாஃபி அந்த நெடும் பயணத்தில் தாம் சந்தித்த சவால்கள் குறித்துப் பேசினார்.
“ஒருசில நிகழ்வுகள்குறித்த பின்னணி விவரங்கள் முழுமையாகக் கிடைக்காத பட்சத்தில் அதன் தொடர்பில் கிடைத்த வரலாற்றுப் படங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்தல் மிகப்பெரிய சவாலாக இருந்தது,” என்றார் ஷாஃபி.
அக்காலத்திற்கு உயிர்கொடுக்கும் புகைப்படங்களைத் தெரிவு செய்யும் இக்கலைக்குத் துல்லியமும், அர்ப்பணிப்பும், வரலாற்றைப் பாதுகாத்திடும் வாஞ்சையும் இன்றியமையாதது, என்ற ஷாஃபி, படங்களைத் தொகுக்கும் பணி என்றபோதும், ‘‘அறியப்படாத நிகழ்வை வருங்கால தலைமுறையின் பார்வைக்கு அருகாமையில் கொண்டுவரும் இம்முயற்சியும் ஓர் கலைதான்,’’ என்று குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் மாதத்தில் வெளியீடு காணவுள்ள சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம், சிங்கப்பூரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவாகும் முதல் கலைக்களஞ்சியம் எனும் சிறப்பைப் பெறவுள்ளது.

