செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்ள இளையர்களுக்கு நிபுணர்களின் ஆலோசனைகள்

செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்ள இளையர்களுக்கு நிபுணர்களின் ஆலோசனைகள்

5 mins read
வேலைவாய்ப்புச் சந்தையில் மாற்றத்தை எதிர்கொள்ளும் இளையர்
58ae5551-e46c-4b53-87e7-8e78b1073eb6
மனிதர்களுக்கான பணிகளைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திறன்கொண்ட இயந்திர மனிதக்கருவி மேற்கொள்ள, பின்னணியில் கடற்கரையில் ஒருவர் ஓய்வெடுக்கும் கற்பனைக் காட்சி. - படம்: ஜெய் கோப்பல்மேன்

சிங்கப்பூரின் வானளாவிய வணிக வளாகமொன்றில் நேர்காணலுக்காக நம்பிக்கையுடன் அடியெடுத்து வைத்தார் 23 வயது சந்தோஷிவா நடராஜன். அவர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் இளங்கலைப் பட்டக்கல்வி மாணவர்.

அங்கு அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, “செயற்கை நுண்ணறிவுக்கு (ஏஐ) அப்பால் இந்த நிறுவனத்திற்கு உங்களால் எந்த வகையில் தனித்துவமாகப் பங்களிக்க முடியும்?” என்பதுதான்.

எதிர்பாராத இந்த வினா, தொழில்நுட்ப அறிவைத் தாண்டி ஒரு மனிதராகத் தன்னைச் சுயபரிசோதனை செய்ய அவருக்குத் தூண்டுகோலாக அமைந்தது.

தொழில்நுட்பம் அன்றாடப் பணிகளில் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில், வேலைவாய்ப்புச் சந்தையின் எதிர்பார்ப்புகள் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன என்பதை இந்தக் கேள்வி ஆழமாக உணர்த்துகிறது.

வேலைவாய்ப்புச் சந்தையின் நடுவமாகத் திகழும் சிங்கப்பூர் மத்திய வர்த்தக வட்டாரம்.
வேலைவாய்ப்புச் சந்தையின் நடுவமாகத் திகழும் சிங்கப்பூர் மத்திய வர்த்தக வட்டாரம். - படம்: எஸ்பிஎச் மீடியா

நவீன அலுவலகச் சூழலில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அளப்பரிய நன்மைகளை வழங்கியுள்ளது. ஒரு காலத்தில் பல ஊழியர்கள் ஒன்றிணைந்து, பல மணிநேரம் வியர்வை சிந்திச் செய்த சிக்கலான பணிகளையும் தகவல் பகுப்பாய்வுகளையும் இன்று ‘ஏஐ’ தொழில்நுட்பம் கணப்பொழுதில் பிழையின்றிச் செய்து முடிக்கிறது.

அதன்மூலம் நிறுவனங்களுக்குக் கணிசமான நேரம் மிச்சமாகிறது. அத்துடன் ஊழியர் பற்றாக்குறை போன்ற சவால்களைச் சமாளிக்கவும் அது கைகொடுக்கிறது.

சேவைகளையும் அன்றாடச் செயல்பாடுகளையும் மேம்படுத்தப் பயன்படும் அதிநவீன ஏஐ  தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி மனித இயந்திரங்கள்.
சேவைகளையும் அன்றாடச் செயல்பாடுகளையும் மேம்படுத்தப் பயன்படும் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி மனித இயந்திரங்கள். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள், தகவல்களைத் துல்லியமாகத் திரட்டித் தரும் அசுர ஆற்றல் கொண்டவை; ஆனால் வெறும் தகவல்கள் மட்டுமே வியாபார வெற்றியைத் தந்துவிடாது என்று கூறப்படுகிறது.

இயந்திரங்கள் தகவல்களை மட்டுமே வழங்கும்; அந்தத் தகவல்களைக் கொண்டு வாடிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு ஏற்பவும் அறநெறியோடும் சரியான வணிக முடிவுகளை எடுக்க மனிதர்கள் கட்டாயம் தேவை என்ற கருத்தும் வலியுறுத்தப்படுகிறது.

சீனாவின் குவாங்சூ நகரில் உள்ள ‘ஐரூடெக் டெக்னாலஜி’ நிறுவனத்தில் அண்மையில் வைக்கப்பட்டிருந்த செயற்கை நுண்ணறிவு குறித்த இருவழித் தொடர்புத் திரை.
சீனாவின் குவாங்சூ நகரில் உள்ள ‘ஐரூடெக் டெக்னாலஜி’ நிறுவனத்தில் அண்மையில் வைக்கப்பட்டிருந்த செயற்கை நுண்ணறிவு குறித்த இருவழித் தொடர்புத் திரை. - படம்: புளூம்பெர்க்

இங்குதான் மனித குலத்துக்கே உரித்தான ‘இரக்க உணர்வு’, ‘புத்தாக்கச் சிந்தனை’, ‘சூழலறிந்து செயல்படும் நுண்மாண் நுழைபுலம்’ முதலியவை ஈடு இணையற்ற மூலதனமாய் உருவெடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனை முதலீட்டு நிபுணர்களுக்கு நிதிக் கல்வியை வழங்கும் ‘சிஎஃப்ஏ இன்ஸ்டிட்யூட் 2025’ன் ஆய்வு முடிவுகள் ஆணித்தரமாகப் பறைசாற்றுகின்றன. சிங்கப்பூர்ப் பட்டதாரிகளில் 96 விழுக்காட்டினர் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைக் கையாள்வதில் அசைக்க முடியாத தன்னம்பிக்கை கொண்டிருப்பதாக அவை சுட்டின.

மேலும் செயற்கை நுண்ணறிவுத் திறன் தங்களுக்குப் போட்டித்தன்மையை அளிப்பதாக 59 விழுக்காட்டினர் கருதுகின்றனர். இருப்பினும் அவை அனைத்தையும் தாண்டி, ‘மென்திறன்களே’ தங்களுக்கு வேலைவாய்ப்பில் நிகரற்ற அனுகூலத்தை வழங்குவதாக 66 விழுக்காட்டினர் ஆழமாய் நம்புவதும் ஆய்வில் தெரியவந்தது.

“கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்பு, வீட்டிலிருந்தே வேலை செய்யும் கலாசாரத்தால் மனிதத் தொடர்புகள் குறைந்து, ‘ஜென் ஸி’ இளையர்களிடம் தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவமும் மென்திறன்களும் சற்றுக் குறைந்ததாகக் கூறப்பட்டது.

“சக மனிதர்களுடன் இணக்கமாகச் செயல்படவும் இயந்திரங்களுக்குச் சரியான கட்டளைகளைப் பிறப்பிக்கவும் தகவல்தொடர்புத் திறனே இன்று தலையாயது,” என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி பாஸ்கரன் குறிப்பிடுகிறார்.

செயற்கை நுண்ணறிவு, சிங்கப்பூரைப் போன்றே உலக அளவிலும் ஒரு மிகப் பெரிய மோகமாக உருவெடுத்துள்ளது.

“நாம் இதனைப் புறக்கணிக்க முடியாது. மாறாக, இதனைப் பழகிக்கொண்டு நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு என்பது நாம் பயிற்றுவித்த கணினி நெறிமுறை மட்டுமே. “மனிதர்களுக்கே உரித்தான உணர்வுகளையும் பணியிடங்களில் வெளிப்படும் உணர்வுபூர்வமான மனிதப் பிணைப்பையும் செயற்கை நுண்ணறிவால் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது,” என்று வேலைதேடுவோருக்கு வழிகாட்டும் முன்னணி ஆலோசனை நிறுவனமான ‘அல்விகோர்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் முத்துசாமி கூறுகிறார்.

‘அல்விகோர்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் முத்துசாமி.
‘அல்விகோர்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் முத்துசாமி. - படம்: ரமேஷ் முத்துசாமி

தொழில்நுட்பத்தை ஒரு போட்டியாளராக எண்ணாமல், அதனைத் திறம்படக் கையாளும் முதலாளிகளாக இளையர்கள் மாற வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

மாறும் அளவுகோல்கள்: மதிப்பெண்களை விஞ்சும் செயல்முறைத் திறன்

கல்வித் தகுதியையோ தொழில்நுட்பச் சான்றிதழையோ மட்டுமே நம்பியிருக்கும் காலம் மலையேறிவிட்டது. வணிகமும் தொழில்நுட்பமும் அதிவேகமாக உருமாறி வருகின்றன.

ஒரு குறிப்பிட்ட மென்பொருளோ சமூக வலைத்தள நெறிமுறையோ கிட்டத்தட்ட ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் முற்றிலுமாக மாறிவிடுகிறது. இத்தகைய வேகமான சூழலில், பழையன கழித்துப் புதியன புகுத்திச் ‘சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளும் திறனே’ ஒருவரைப் பணியில் நிலைநிறுத்தும் அரணாகச் செயல்படுகிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்தும்போது, அவர்களின் ஏட்டு அறிவைவிட நிறுவனத்தின் கலாசாரத்தோடு ஒன்றிப்போகும் தன்மை, சிக்கல்களைத் தீர்க்கும் திறன், புதியனவற்றைக் கற்றுக்கொள்ளும் தணியாத ஆர்வம் முதலியவற்றுக்கே தலையாய முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

“செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் அதிவேகமாக மாறிவருவதால், ஒரு குறிப்பிட்ட கருவியை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள நான் முயல்வதில்லை.

“மாறாக, தெளிவான கட்டளைகளைக் கொடுப்பது, ஆழமாகச் சிந்திப்பது, முடிவுகளைச் சரிபார்ப்பது ஆகியவற்றின் மூலம் அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவே முயற்சி செய்கிறேன்.

“இதன் மூலம் ஒரே தளத்தில் முடங்கிவிடாமல், காலத்திற்கேற்ப என்னால் விரைவாக மாற முடிகிறது,” என்று கப்ளான் பல்கலைக்கழகத்தில் குற்றவியல், உளவியல் துறையில் பயிலும் மாணவி திவ்யா ஸ்ரீ பிள்ளை கூறுகிறார்.

அரசாங்கத்தின் முயற்சிகளும் எதிர்காலத் தயார்நிலையும்

“உயர்கல்வி நிலையங்கள் தொழில்துறையினருடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவுத் திறன்கள், துறைசார் பயிற்சிகள், புத்தாக்கச் சிந்தனை, படைப்பாற்றல், தகவல்தொடர்பு போன்ற அடிப்படைத் திறன்களை உள்ளடக்கிய வகையில் பாடத்திட்டங்களை மேம்படுத்தி வருகின்றன,” என மனிதவள அமைச்சு, இவ்வாண்டு (2026) பிப்ரவரியில் தெரிவித்தது.

மேலும், “2025ஆம் ஆண்டின் நிச்சயமற்ற பொருளியல் சூழலைக் கருத்தில்கொண்டு, இளம் பட்டதாரிகள் தொழில்முறை அனுபவத்தின் மூலம் நிரந்தர வேலை பெறுவதை எளிதாக்க ‘கிரிட்’ பயில்நிலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது,” என்றும் அமைச்சு விளக்கம் அளித்தது.

‘கிரிட்’ திட்டத்தின்கீழ் இளம் பட்டதாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ‘தேல்ஸ் சொல்யூஷன்ஸ் ஏ‌ஷியா’ நிறுவனத்திற்குச் சென்றிருந்த மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (வலமிருந்து மூன்றாமவர்).
‘கிரிட்’ திட்டத்தின்கீழ் இளம் பட்டதாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ‘தேல்ஸ் சொல்யூஷன்ஸ் ஏ‌ஷியா’ நிறுவனத்திற்குச் சென்றிருந்த மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (வலமிருந்து மூன்றாமவர்). - படம்: மனிதவள அமைச்சு

இவற்றுடன், பட்டதாரிகள் பணிச் சூழலில் நேரடியாகச் செயற்கை நுண்ணறிவுத் திறன்களைப் பயன்படுத்தச் ‘செயற்கை நுண்ணறிவுத் தொழிற்பயிற்சித் திட்டம்’ போன்ற வேலைவாய்ப்பு சார்ந்த முயற்சிகளையும் அரசாங்கம் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

அதே வேளையில், தற்போதைய இளம் தலைமுறையினர் தங்களின் இலக்குகளுக்கு ஏற்ற பாதையைத் தாங்களே செதுக்கிக் கொள்கின்றனர்.

“அரசாங்க நிதியுதவி பெறும் தொழிற்பயிற்சிகளைவிட, எனது நீண்டகால இலக்குகளோடு நேரடித் தொடர்புடைய பிற தொழிற்பயிற்சிகளிலும் திட்டங்களிலுமே நான் அதிகக் கவனம் செலுத்துகிறேன்,” எனவும் மாணவி திவ்யா ஸ்ரீ பிள்ளை குறிப்பிடுகிறார்.

தொடர் கற்றலே வெற்றியின் திறவுகோல்

“பட்டதாரிகள் குறுகிய கால வேலைவாய்ப்புத் திறன்களை மட்டுமே நம்பியிருக்காமல் நீண்டகால அடிப்படையில் தங்களை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று பேராசிரியர் மார்க் சோங் வலியுறுத்துகிறார்.

நார்த்பாயின்ட் சிட்டி வணிக வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றிருந்த செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வகுப்புகளுக்கான விளம்பரம்.
நார்த்பாயின்ட் சிட்டி வணிக வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றிருந்த செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வகுப்புகளுக்கான விளம்பரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“இளையர்கள் தங்களின் உண்மையான ஆர்வம் எதிலுள்ளது என்பதை முதலில் சுயபரிசோதனை செய்து கண்டறிய வேண்டும். ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ வழங்கும் வேலைவாய்ப்பு வழிகாட்டிக் குறிப்புகளையும் தொழில்முறை ஆலோசகர்களின் கருத்துகளையும் கேட்டு இலக்குகளைத் தீர்மானிக்க வேண்டும்.

இவ்வாண்டு (2026) பிப்ரவரி 13ல் சாண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற NTUC வேலைவாய்ப்புக் கண்காட்சி. திறன் மேம்பாடு, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ நிதியுதவி குறித்த ஆலோசனைகளை வழங்கும் ‘லைஃப்லாங் லேர்னிங்’ கூடம்.
இவ்வாண்டு (2026) பிப்ரவரி 13ல் சாண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற NTUC வேலைவாய்ப்புக் கண்காட்சி. திறன் மேம்பாடு, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ நிதியுதவி குறித்த ஆலோசனைகளை வழங்கும் ‘லைஃப்லாங் லேர்னிங்’ கூடம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“எந்தத் துறையாக இருந்தாலும் சரி, கடினமாக உழைப்பதும் தொடர்ந்து திறன்களை வளர்த்துக்கொள்வதும் மனிதர்களோடு பழகுவதுமே உங்களை வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லும்,” என்று திரு.ரமேஷ் முத்துசாமி அறிவுறுத்துகிறார்.

“செயற்கை நுண்ணறிவை வெறும் கருவியாகப் பார்க்காமல், நமது மென்திறன்களை மேம்படுத்தும் வழிகாட்டியாகவும் பயன்படுத்தலாம். நமக்கான தனிப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கச் செயற்கை நுண்ணறிவிடம் ஆலோசனைகளும் பெறலாம்,” என்பதைத் திரு.கிருஷ்ணமூர்த்தி பாஸ்கரன் வலியுறுத்துகிறார்.

இறுதியாக, புதிய வேலைவாய்ப்புச் சந்தையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு பட்டதாரியும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய வினா இதுதான்:

“எல்லாவற்றையும் ‘செயற்கையாக’ உருவாக்கிக்கொள்ள முடிகின்ற இந்த அதிநவீன யுகத்தில், உங்களின் ஈடு இணையற்ற ‘உண்மையான’ மனிதப் பண்புகளை நீங்கள் எவ்வாறு முதலீடு செய்யப் போகிறீர்கள்?”

குறிப்புச் சொற்கள்