பிரபல தற்காப்புக் கலை வல்லுநரும் உலகப் புகழ்பெற்ற நடிகருமான ஜாக்கி சான் (Jackie Chan) பெய் சுன் பொதுப்பள்ளிக்கு ஜூலை 7ஆம் தேதி வருகை தந்தார்.
தோ பாயோ வட்டாரத்தில் அமைந்துள்ள அப்பள்ளியின் தொடக்கநிலை 4 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 900 மாணவர்களிடம் அவர் கலந்துரையாடினார்.
மேலும், சிங்கப்பூர் ஒலிம்பிக் அறநிறுவனம் - பீட்டர் லிம் உபகாரச் சம்பளம் (SOF-Peter Lim Scholarship) பெற்ற 21 வுஷூ தற்காப்புக் கலை இளையர்களையும் ஜாக்கி சான் நேரில் சந்தித்து ஊக்கமளித்தார்.
லிம் குடும்ப அறநிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சியில், தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங், பிஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சக்தியாண்டி சுபாத், சாய் யின்சுவோ ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஜாக்கி சான் மாணவர்களுக்கு வழங்கிய அறிவுரை
மாணவர்களிடையே பேசியபோது, சவால்களை எதிர்கொள்வது, மீள்திறன், இலக்குகளை நோக்கித் தொடர்ந்து பயணிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தைத் திரு ஜாக்கி சான் பகிர்ந்து கொண்டார்.
மேலும், “கடினமாக உழையுங்கள். கனவுகள் நனவாகாமல் போகலாம். ஆனால், கனவுகள் இல்லாமல் உங்களால் நிச்சயமாக வெற்றிபெற முடியாது,” என அவர் அறிவுறுத்தினார்.
மாணவர்கள் தங்களுடைய பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு, அதன்படி நடக்க வேண்டும் எனக் கூறிய திரு ஜாக்கி, யாரேனும் சாலையைக் கடக்க சிரமப்பட்டால் அவர்களுக்கு உதவுவது, பொது இடங்களில் கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவது போன்ற சிறிய அளவிலான அறப்பணிகளிலும் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
ஜாக்கி சானின் தீவிர ரசிகரான தமது தந்தையின் மூலமாக அவரது திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்து வந்ததாகவும் இன்று அவரை நேரில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பெய் சுன் பொதுப்பள்ளியில் தொடக்கநிலை ஐந்தில் பயிலும் மாணவியான அயிலா தேன்நிலா அய்யாபிள்ளை தெரிவித்தார்.
மேலும், “ஜாக்கி சானின் விடாமுயற்சியைப் பார்த்து நான் பெரிதும் வியக்கிறேன். ஹாலிவுட் திரைப்படங்களில் சிறப்பான முறையில் நடிப்பதற்காகவே அவர், ஆங்கில மொழியைக் கற்றுக்கொண்டார். அவரது இந்தக் கடின உழைப்பு எனக்குள் பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என அந்த மாணவி மகிழ்ச்சியுடன் கூறினார்.

