இன்று தமிழ் முரசு நிறுவனர் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பிறந்தநாள்.
சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் பெற்ற பெரும் பேறு கோ.சாரங்கபாணி.
தமிழ் முரசு, தமிழர் பேரவை (அன்றைய தமிழர் பிரதிநிதித்துவ சபை), தமிழர் திருநாள், தமிழ்க் கல்விக் கழகம், எழுத்தாளர் பேரவை என்று பல வழிகளிலும் செயல்பட்டு சிங்கப்பூரில் தமிழ் மக்களும் தமிழ்மொழியும் உயர்ந்து, உச்சம் பெற உருக்கொடுத்தவர்.
இலக்குகளோடு பெருங் கனவுகளை இந்நாட்டுத் தமிழ் மக்கள் மனங்களில் விதைத்த சமூகத் தலைவர்; இன்றுவரையில் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தை ஒன்றிணைத்திருக்கும் தானைத் தலைவர்.
20.4.1903 ஆண்டு தமிழகத்தின், திருவாரூரில் பிறந்த தமிழவேள் கோ.சாரங்கபாணிக்கு இன்று வயது 123.
கோ.சாரங்கபாணி தமது 21வது வயதில் 1924ஆம் ஆண்டு சிங்கப்பூரில் காலடி எடுத்து வைத்தார். சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் 16.3.1974 அன்று இறுதி மூச்சை நிறுத்தும்வரையில் சிங்கப்பூரராகவே வாழ்ந்தார்.
இந்நாட்டில் வாழ்ந்த 50 ஆண்டு காலமும் இந்நாட்டின் தமிழ் மக்களின் வளர்ச்சி, முன்னேற்றம், உயர்வு பற்றியே சிந்தித்தார், செயல்பட்டார்.
அவர் தொடங்கிய தமிழ் முரசு, செயற்கை நுண்ணறிவு யுகத்தில் புதுவிசையோடு நூற்றாண்டை நோக்கி வெற்றிகரமாகப் பயணிக்கிறது.
தமிழவேள் தொடங்கிய தமிழ்ப் பணிகள் வேர்விட்டு பெருமரமாகத் தழைத்து நிற்கின்றன. தமிழ்மொழி விழாவில் இம்முறை தமிழ் முரசின் வருங்காலத் தலைமுறையினர் நிறைவு நிகழ்ச்சியைப் படைக்கின்றனர். சிங்கப்பூரில் தமிழ்மொழி, தமிழ் முரசின் வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் இதுவே அடையாளம்.
தமிழ் மொழி விழா கொண்டாடும் இத்தருணத்தில் கோ.சாரங்கபாணியின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் இந்நாட்டில் வாழும் எல்லாத் தமிழர்களும் எண்ணிப் பார்ப்பது சிறப்பு. அவரை நினைவுகூர்வது தமிழ்ச் சமூகத்தின் கடமை.
தமிழ்மொழி விழா கொண்டாடும் வேளையில், தமிழர் வாரம் குறித்து கோ.சாரங்கபாணி 7.8.1941 அன்று தமிழ் முரசில் எழுதிய தலையங்கத்திலிருந்து சில பகுதிகளை இன்று வாசிப்பது, நம் இலக்குகளைச் செவ்வனே சிந்தித்து வகுத்துக்கொள்ள உதவும்.
“... எப்பொழுதும் “தமிழர்கள் எல்லாம் தமிழர்களே” என்ற ஐக்கியம் நிறுவும்படி ஒவ்வொரு தமிழரும், தமிழர் வாரத்தில் பிரசாரம் செய்ய வேண்டும்.
... தமிழ்க் கல்வியறிவில்லாத மனைவிகளையும் மக்களையும் சகோதர, சகோதரிகளையும் பெற்ற குடும்பத் தலைவர்கள் அவர்களுக்குத் தமிழ்க் கல்வியை அளிக்க தமிழர் வாரத்திலிருந்து தொடங்கிவிடுவதென உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்க் கல்வியறிவில்லாத தமிழ்த் தொழிலாளிகளையும் ஏனையோரையும் ஆங்காங்கு தொண்டர்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு இராப் படிப்பு வசதிகள் கிடைக்க தமிழர் வாரத்தில் ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட வேண்டும்.
... தமிழர்கள் எல்லாம் தமிழர் வாரத்தில் “தமிழர்”களாகவே திகழவேண்டும். தமிழிலேயே அவர்கள் சிந்திக்க வேண்டும்; தமிழிலேயே உரையாட வேண்டும். ஆங்கிலத்தைக் கலந்து தமிழ் மொழியைச் சித்திரவதை செய்யும் பெரும் பாதகத்தை விட்டொழித்தேன் என அவர்கள் பிரதிக்கினை செய்துகொள்ள வேண்டும். நான் முதலில் தமிழன்; பிறகுதான் மற்ற இனத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணத்தை ஒவ்வொரு தமிழனும் கொள்ள வேண்டும்.
தமிழர் வாரம் தமிழுக்காக மகத்தான சேவை புரியச் சந்தர்ப்பம் அளிக்கும் ஒரு “பரிசுத்த” வாரமாகும். இவ்வாரத்தை ஒவ்வொரு தமிழனும்- முஸ்லிமாயிலும் இந்துவாயினும் புத்தராயினும் ஜெயினராயிலும் - பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழர் வாரத்தில் தமிழ்ப் பெருமக்கள் ஒன்றுதிரண்டு வேலை செய்வார்களானால்... இறுதியில் தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்துக்கு மணி முடிசூட்டி, எதிர்காலத் தமிழ்த் தோன்றல்கள் தலை நிமிர்ந்து, உலக மக்களின் முன் அணியில் இடம்பெறுவர்.”

