சிங்கப்பூருக்கு இந்தோனீசிய மின்விற்பனை நல்ல விலையைப் பொறுத்தே அமையும்

சிங்கப்பூருக்கு இந்தோனீசிய மின்விற்பனை நல்ல விலையைப் பொறுத்தே அமையும்

படம்: சாவ்பாவ் சீன நாளிதழ்

03 Nov 2026 - 4:40 pm

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியா நிர்ணயிக்கும் சரியான விலையை சிங்கப்பூர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்நாட்டுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யப்படும் என்று இந்தோனீசியாவின் எரிசக்தி, கனிம வளத்துறை அமைச்சர் பஹ்லில் லஹடாலியா திங்கட்கிழமை (நவம்பர் 2) தெரிவித்துள்ளார்.

மின்விலையில் இருநாடுகளுக்கும் இணக்கம் ஏற்படாத நிலையில் உள்நாட்டுத் தேவைகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு 3.4 கிகாவாட் அளவு குறைந்த கரிம மின்சாரத்தை 2035ஆம் ஆண்டுக்குள் இந்தோனீசியா விநியோகிக்கும் என்ற செயல்திட்டத்தின் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜகார்த்தாவில் கையெழுத்தாகின.

சிங்கப்பூரின் வர்த்தக, தொழில்துறை அமைச்சின்கீழ் இயங்கிய எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத் துறை விவகாரங்களுக்கான அப்போதைய அமைச்சராக இருந்த டான் சீ லெங் அதனை அறிவித்திருந்தார். இந்தோனீசிய அமைச்சரின் தற்போதைய கூற்று, அத்திட்டத்துக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

அதிபர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பஹ்லில், மின்சார ஏற்றுமதிக்குத் தயாராக இருந்தாலும் அதனை வாங்குவோர் தமது நாடு நிர்ணயிக்கும் விலையை ஏற்காதபோது உள்நாட்டுத் தேவைகளுக்கே இந்தோனீசியா அதனைப் பயன்படுத்திக்கொள்ளும் என்று விளக்கினார்.

“நாங்கள் எதிர்பார்க்கும் சரியான விலை அமைந்தால், ஏற்றுமதி சாத்தியப்படும். இல்லையெனில் உள்நாட்டுத் தேவைகளுக்கே முன்னுரிமை வழங்குவோம்,” என்று அவர் அரசாங்க ஊடகமான அன்டாராவிடம் கூறினார்.

எரிசக்தி பரிமாற்றச் செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு பஹ்லில், தமது அமைச்சு ஏற்றுமதிக்கான விலையை நிர்ணயம் செய்துவிட்டது என்று தெரிவித்தார். ஆயினும் அதனையும் எப்போது ஏற்றுமதிகள் தொடங்கும் என்பதன் விவரங்களையும் அவர் வெளியிடவில்லை.

இயற்கை எரிவாயு விநியோகம் குறித்தும் எல்லைதாண்டிய புகைமூட்டப் பிரச்சினையாலும் அண்மையில் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் பின்னணியில் அமைச்சரின் இக்கருத்துகள் வெளிவந்துள்ளன.

ஆளும் அரசாங்கத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் கோல்கார் கட்சியின் தலைவரும் ஆகிய திரு பஹ்லில், உள்நாட்டுப் பயன்பாட்டுக்கு மின்சாரம் தேவைப்படுவதால், எதிர்காலத்தில் இந்தோனீசியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாது எனவும் அன்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.

தலைநகர் ஜகார்த்தாவில் நடந்துவரும் கனிமவளங்கள், நிலக்கரி சார்ந்த கண்காட்சி, மாநாட்டு நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு பேசியிருந்தார்.

மின்சார ஏற்றுமதி உரிமங்களை வழங்கும் இறுதி அதிகாரம் எரிசக்தி அமைச்சிடமே உள்ளது என்ற அமைச்சர், வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு உடன்பட வேண்டாம் என்று அந்நாட்டின் முதலீட்டு மேலாண்மை நிறுவனமான ‘தனந்தரா’ அமைப்பிற்கு அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்