300 கிலோ சுறா சிக்கியது

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் வலையில் 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் சிக்கியது. மீன்பிடித் தடைக்காலம் முடிந்ததையடுத்து காரைக்கால் மீனவர்கள் கடந்த மாதம் 29ஆம் தேதி கடலுக்குச் சென்றனர். பெரும்பாலான படகுகள் வியாழக்கிழமை துறைமுகம் வந்து சேர்ந்தன. காரைக்கால்மேடு கிராமத்திலிருந்து சென்றவர்கள் படகிலிருந்து பெரிய சுறா மீன் இறக்கப்பட்டது.

அதை ஏழு பேர் சேர்ந்து இழுத்து படகினுள் போட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். ஏழு அடி நீளத்தில், இரண்டரை அடி அகலம் கொண்ட அந்தச் சுறா 300 கிலோ எடையுள்ளது. சுறா மீனின் இறக்கை வெளிநாடுகளுக்கு மருந்து தயாரிக்க ஏற்றுமதி செய்யக்கூடியவை. அதனால் இறக்கை மட்டும் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். பிடிபட்ட மீன் பால் சுறா வகையைச் சேர்ந்தது. இதை மக்கள் விரும்பி உண்பதுண்டு.