புத்தம்புது தொழில்நுட்பங்களைக் கைக்கொள்வோம், அதிலெல்லாம் தமிழ் வளர்ப்போம்

ஒவ்வோர் ஆண்டும் தமிழ்மொழி மாதத்தின் நிகழ்ச்சிகள் அதிக எண்ணிக்கையில் மேடையேறுகின்றன. இவ்வாண்டு,  47 நிகழ்ச்சிகள் இடம்பெற்றன என்று வளர்தமிழ் இயக்கத்தின் இணையத்தளம் கூறுகின்றது. 

கதை, கவிதை, நாடகம், பேச்சு, புதிர், மாறுவேடப் போட்டிகள், இலக்கியப் புலனாய்வு, செயற்கை நுண்ணறிவு வழி தமிழ், புத்தக வெளியீடுகள் என பன்முக வேடந்தரித்து வந்த தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள், இளையவர் முதல் முதியவர்வரை பலரையும் ஈர்க்க இந்த ஆண்டின் விழா முயற்சி செய்திருக்கிறது. ஓரளவில் வெற்றியும் கண்டிருக்கிறது.

அரசியல் மொழி அங்கீகாரத்திற்கும், பள்ளிகளில் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படுவதற்கும் அப்பால்,  மொழிப் பயன்பாட்டைத் தொடர்வதற்கும் வளர்ப்பதற்கும் தகுந்ததொரு கட்டமைப்பாக வளர்தமிழ் இயக்கம் அமைந்துள்ளது.

பள்ளிகளுக்கு அப்பால், குடும்பச் சூழல்களைத் தாண்டி, தமிழைப் புழங்கவும் தமிழில் சிறக்கவும் இந்நாட்டு மக்களுக்கு உள்ள முனைப்பிற்கு அடித்தளமாய் அமைகிறது, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழ்மொழி மாதம். 

சிங்கப்பூரில் தமிழ்மொழியை வாழும் மொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் நிலைபெறச் செய்வதோடு, அனைத்து வயதினரையும் தமிழால் ஒன்றிணைத்து, சிங்கப்பூரில் தமிழ்மொழியை ஓங்கச் செய்யும் வளர்தமிழ் இயக்கத்தின் தலையாய நோக்கம் விண்ணை அளக்கும் காரியம்.

கடந்த 18 ஆண்டு காலச் செயல்பாட்டில் நிகழ்ச்சிகளைப் பெருக்குவதிலும், பலதரப்பினரையும் பங்கேற்கச் செய்வதிலும் வளர்தமிழ் இயக்கம் அதன் இலக்கை எட்டியுள்ளது. 

ஒரு மாத காலம் தமிழைப் பேசியும் களித்தும் மகிழ்ந்து இன்று நிறைவுவிழாவைக் கொண்டாடும் தருணத்தில், அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தமிழை வாழச் செய்வது குறித்துச் சிந்திப்பது, இந்த விழாவின் தலையாய கடமை.  

தமிழ் பேசாதவர்களைப் பேச வைப்பது, தமிழ் எழுதத் தெரியாதவர்களுக்கு தமிழ் எழுத்தறிவிப்பதும், வாசிக்க முடியாதவர்களுக்கு வாசிப்பு இன்பத்தைத் தருவது, எழுத முடிவோரை எழுத வைப்பது போன்றவற்றில் சமூகமும் அமைப்புகளும் அடுத்து கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு மனிதனின் அடையாளங்களில் அவன் பெயரைத்தாண்டி, நாட்டைத்தாண்டி, மொழியும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. மொழிவழிதான் பண்பாடும் பாரம்பரியமும் வரையறுக்கப்படுகின்றன. 

சிங்கையில் குடியேறிய நம் முன்னோர்கள் இந்நாட்டில் தமிழ் மொழியைத் தக்க வைத்துக் கொள்வதில் முனைப்பாய் இருந்ததோடு, எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்வதில் பயம்கலந்த உணர்வோடு செயல்பட்டார்கள். சிறுபான்மை மக்களுக்கே உரித்தான பயம் அது. சிங்கப்பூரில் இன்று தமிழ்ப் பேச்சும் படிப்பும் ஊடகங்களும் தமிழ் சார்ந்த இத்தனை நடவடிக்கைகளும் வளங்களோடு வளம்பெற்று இருப்பதற்கு தனிமனிதர்கள் பலருக்கும் அரசாங்கத்திற்கும் நன்றிசொல்வதோடு, அதன் தொடர்ச்சியாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் வாழும் சந்ததியினருக்கு உள்ளது.

தமிழ் பேசுவதும் எழுதுவதும் படிப்பதும் தமிழ் மொழி விழாக் காலத்தையும் கடந்து, தமிழ் மக்கள் வாழ்வோடு இணைந்ததாக ஆக்குவதில் தமிழர் ஒவ்வொருவரும் பங்காற்ற முடியும். ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற மற்ற விழாக்களிலும் தமிழ் மொழி ஓங்கி ஒலிக்க வேண்டும். 

வீட்டில் தமிழ்ப் பேச்சு குறைந்துகொண்டே வரும் சிங்கப்பூர்ச் சூழலில் தமிழ் மாணவர்கள் தமிழில் அதிகம் பேசுவதற்கு ஆசிரியர்களுடன் பெற்றோரும் மற்றவர்களும் முயற்சி செய்வது முக்கியம்.

தமிழர்கள் சந்திக்கையில் தமிழில் உரையாட வேண்டும். இந்த யோசனைகள் புதியன அல்லவென்றாலும் அவ்வப்போது நமக்கு நாமே நினைவுபடுத்திக்கொள்வது நல்லது.

அதிவேகமாய் மாறிவரும் தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்பத் தமிழ்மொழி நடைபோடவேண்டும். வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் வழி தமிழ்ப் பயன்பாடு அதிகரிக்கவேண்டும். வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொண்டிருக்கும் மெய்நிகர், செயற்கை நுண்ணறிவுத் தளங்களில் தமிழ் ஊடுருவ வேண்டும். இத்தளங்களில் தமிழ் எழுத்துகள் உருப்பெருவதில் இருக்கும் சிரமங்களைக் களைய வேண்டும். தமிழ் இலக்கியங்கள் இத்தளங்களில் இயற்றப்பட வேண்டும்.

நம்மில் பலரும் தமிழில் தட்டச்சு செய்யப் பழகவேண்டும். தமிழில் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும். மின் அஞ்சல் அனுப்பவேண்டும். பரந்த இணைய உலகில் தமிழர்களாய் உலாவர வேண்டும்.

இத்தனையும் செய்தோமானால், வாழும் மொழியாய், பயன்பாட்டு மொழியாய், தமிழால் ஒன்றித்து தமிழை ஓங்கச் செய்யலாம்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்!” - மகாகவி பாரதியார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!