வாய்ப்புகளையும் வளங்களையும் சரியாகப் பயன்படுத்தி சாதிப்போம்

எல்லா நன்மைகளும் பெற்றிருக்கும் சிங்கப்பூரில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள்.

பாலர் பள்ளி முதல் பிள்ளைகளுக்குச் சுவையாகத் தமிழ் சொல்லித் தர அரசாங்கமே எல்லாவிதத்திலும் முயற்சி எடுக்கிறது; ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கிறது; துணைப்பாடக் கருவிகளை உருவாக்குகிறது; வெளிப்புற நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்கிறது.

ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அடிக்கடி தமிழ் நூல்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழ் முரசு, வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட தமிழ் ஊடகங்கள், பாரம்பரியமான ஊடகங்களை மேம்படுத்தி வரும் அதேநேரத்தில், இணையம், சமூக ஊடகங்கள், செயலி என புதிய புதிய ஊடகங்களிலும் தடம் பதிக்கின்றன.

நவீனமயமும் பன்முகத்தன்மையும் பல பண்பாடுகளின் தாக்கமும் பெருக பெருக மொழி, பண்பாடு குறித்த அக்கறையும் அறிவும் சிங்கப்பூர்த் தமிழ் மக்களிடம் வளர்கிறது.

சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அரசாங்கம் பல்வகையில் ஆதரிக்கிறது. மக்கள் ஆதரவும் ஆர்வமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். புவியியல் அமைப்பிலும் தமிழகத்துக்குப் பக்கத்தில் நாம் இருக்கிறோம். இவை யாவும் மொழியையும் பண்பாட்டையும் தக்கவைக்க, தழைக்க வைக்க பெரும் வசதி[Ϟ]களாக உள்ளன. அதே நேரத்தில் உலகளவிலும் தொடர்புடையவர்களாக, பன்மயமான மொழி, பண்பாட்டு அறிமுகத்தையும் பெறுகிறோம். இரண்டிலும் உள்ள நன்மைகளை அறுவடை செய்யும் சாதகமான இடத்தில் வாழ்கிறோம்.

காலப்போக்கில் இந்த நாட்டில் தமிழ் மொழிப் புழக்கம் அற்றுவிடுமோ என்ற அச்சத்தைத் துடைத்தெறியும் ஆணித்தரமான ஆதாரமாக, சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை அண்மையில் நடத்திய ஆய்வு உள்ளது.

உயர்நிலைப் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை பயிலும் 120 மாணவர்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 94 விழுக்காட்டினர் அன்றாடம் தமிழ் பேசுவதாகக் கூறியுள்ளனர். 60 விழுக்காட்டினர் அவ்வப்போது வாசிப்பதாகவும் கூறியிருந்தனர்.

தமிழ்மொழி விழாவையொட்டி அவ்வமைப்பு ஆண்டுதோறும் நடத்தும் ‘யுத்தம்’ தமிழ் இலக்கியப் போட்டியில், இந்த ஆண்டின் அங்கங்களில் ஒன்றாக அந்த ஆய்வு இடம்பெற்றது.

தமிழ் வாழுமா, வளருமா என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை. ஆனால், கவனமாக இருப்பது முக்கியம். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நல்ல தமிழையும் செறிந்த பண்பாட்டையும் கடத்தும் பொறுப்பு நமக்கு உள்ளது.

‘யுத்தம்’ ஆய்வில் பங்கேற்றோரில் பெரும்பாலோர் தமிழ்ப் படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், சமூக ஊடகங்கள் வழியாகவே தமிழுடன் தொடர்பில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இந்திராணி ராஜாவும் தொலைக்காட்சி, யூடியூப் காணொளிகள், சமூக ஊடகத் தளங்கள் போன்றவை மூலம் இளம் பிள்ளைகளைத் தமிழ்மொழியோடு தொடர்புபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுவே யதார்த்தம். இன்றைக்குப் பிள்ளைகளையும் பெரியவர்களையும் மூத்த குடிமக்களையும் இவையே தமிழோடு தொடர்புபடுத்துகின்றன.

எனினும், உலகளாவிய இந்த இணைய வெளியில் எதைக் கொள்ள வேண்டும், எதைத் தள்ள வேண்டும் என்பதில் தெளிவு தேவைப்படுகிறது.

பெருமிதங்களையும் உண்மைத் தகவல்களையும் பிரித்துப் பார்க்கும் அறிவு, பல இன, சமய சமூகத்தில் வளரும் பிள்ளைகளுக்கு முக்கியமானது. பல முரண்பாடான கருத்துகளை அவர்கள் தவிர்க்கலாம். மழைக்குப் பெருகும் ஈசல்கள்போல வந்த வேகத்தில் மடிந்துவிடும் உணர்ச்சித்தூண்டல்களால் உடனடித் தாக்கங்களால் பயனில்லை.

வருங்காலச் செழிப்புக்கான சிந்தனைத் தெளிவை வளர்க்க சிலவற்றில் கவனம் செலுத்தலாம்.

சமூக ஊடகங்கள், தமிழ்ப் படங்கள் என்பதைத் தாண்டி இளம் தலைமுறையினரை ஈர்க்க வேண்டிய உத்திகளைச் சிந்திக்கலாம்.

பண்பாட்டு நடவடிக்கைகள் எல்லாரையும் சென்று சேர்வதாக, எல்லாரும் பயனடைவதாக இருப்பதை உறுதிசெய்வது;

போட்டிகள், பரிசுகளிலிருந்து விலகி வந்து, நீண்ட கால இலக்கைக் கொண்ட திட்டங்களாக நிகழ்ச்சிகளை உருவாக்குவது;

பேசுவதற்கும் எழுதுவதற்கும் அப்பால், செயற்கை நுண்ணறிவு, வடிவமைப்பு, கலைகள், விற்பனை, விளம்பரம், வணிகம் போன்ற திறன்கள்வழி மொழி வளர்ப்பது என்பன போன்ற வழிகளில் யோசிக்கலாம்.

வெவ்வேறு திறன்கள் கொண்ட, பல்வேறு நிலைகளைச் சேர்ந்த, வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்ட சிங்கப்பூர்த் தமிழ் மக்கள் மொழியால் இணைந்திருக்கவும், பண்பாட்டால் உயர்வு பெறவும் அத்தனை வளங்களையும் எல்லா வாய்ப்புகளையும் சிங்கப்பூர் வாரி வழங்குகிறது. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி ஒரு சமூகமாக மேன்மேலும் உயர்வுபெறும் அறிவார்ந்த தன்மை நம்மிடம் உண்டு.

தமிழின் அருமையையும் பெருமையையும் எக்காலத்துக்கும் பாதுகாக்கும் பொறுப்பையும் நாம் உணர்ந்துள்ளோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!