சிங்கப்பூரைத் தனித்தன்மையுடன் மிளிரச் செய்த தலைமகன்

சிங்கப்பூரின் பிரதமராக 20 ஆண்டுகள் சீரிய சேவையாற்றி பொறுப்பை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கிறார் திரு லீ சியன் லூங். சிங்கப்பூருக்கே உரிய தனித்துவத்துடன் இந்தத் தலைமைத்துவ மாற்றம் இடம்பெறுகிறது. 

தற்போது தேசிய சேவையாற்றும் ஆண்கள், உயர்கல்வி முடித்து பணியில் சேர்ந்து வேலைசெய்யும் இளம் பெண்கள் முதலியோர் லீ சியன் லூங்கை மட்டுமே பிரதமராகப் பார்த்தவர்கள். நவீன சிங்கப்பூரின் தந்தை எனக் கொண்டாடப்படும் லீ குவான் யூவின் மகனாக, மக்கள் செயல் கட்சியின் இளம் உறுப்பினராக, ராணுவ அதிகாரியாக, அமைச்சராக, துணைப் பிரதமராக சிங்கப்பூர் மக்கள் பார்த்து வியந்தவர் திரு லீ. ஏழு வயது முதலே தந்தையும் சிங்கப்பூரின் முதல் பிரதமருமான திரு லீ குவான் யூவுடன் சிங்கப்பூரின் வளர்ச்சியையும் அரசியல் போக்குகளையும் பார்த்து வளர்ந்தவர்.

சிங்கப்பூர் ஆயுதப்படையின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்று உயர்கல்வியில் உச்சதேர்ச்சி அடைந்து ராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய அவர், 1984ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் டெக் கீ தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 

வர்த்தக, தொழில் அமைச்சர், தற்காப்பு இரண்டாம் அமைச்சர், நிதியமைச்சர் என பல அமைச்சுகளில் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூரின் இரண்டாம் பிரதமராக திரு கோ சோக் டோங் பொறுப்பேற்றபோது, அடுத்த தலைமுறைத் தலைவராக அடையாளம் காணப்பட்டு துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார். 14 ஆண்டுகள் துணைப் பிரதமராகப் பணியாற்றிய அனுபவத்துடன் பிரதமராக 2004ஆம் ஆண்டு பொறுப்பை ஏற்றபோது திரு லீக்கு வயது 52.

இந்த இருபது ஆண்டு காலத்தில் உலகளவிலும் நாடளவிலும் பல முக்கிய திருப்புமுனைகளில், மைல்கல்களில் அவர் மாபெரும் பங்கை ஆற்றியுள்ளார். அவர் சந்தித்த சவால்கள் எண்ணிலடங்கா. உலகமயமாதலைத் தழுவிய உலக நாடுகள் மத்தியில் பொருளியலைத் திறந்துவிட்டு முதலீடுகளை சிங்கப்பூர்பால் ஈர்த்தார். சிங்கப்பூரின் பொருளியல் என்றுமே போட்டித்தன்மை மிக்கதாக இருப்பதை உறுதிசெய்தார்.

இந்தியாவுடனான நல்லுறவுக்கு திரு கோ சோக் டோங் அமைத்த வலுவான அடித்தளத்தில், இருநாட்டு உறவை உயர்நிலைக்கு கட்டி வளர்த்தார். திரு கோ முன்னெடுத்த இந்தியா-சிங்கப்பூர் முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை 2005ஆம் ஆண்டு கையெழுத்திட்டு நடப்புக்குக் கொண்டுவந்தார். இந்தியாவுடன் பொருளியல் உடன்பாடுகள், முதலீடுகள், தொழில்துறை, ராணுவப் பயிற்சிகள், கல்விப் பரிமாற்றங்கள், வான்வெளி உடன்பாடுகள், பயணிகள், சரக்குப் போக்குவரத்து, கலை, கலாசாரம் என பரந்துபட்ட பங்காளித்துவத்தைக் கொண்டிருக்கும் முன்னணி நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இன்று திகழ்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2004-2005ஆம் நிதி ஆண்டில் 6.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அந்தத் தொகை 2022-2023ஆம் நிதி ஆண்டில் 35.6 பில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவானது. சிங்கப்பூரை நுழைவாயிலாகக் கொண்டு ஆசியான் வட்டார நாடுகளுடன் இந்தியாவுடனான உறவுகளை வளர்க்க சிங்கப்பூர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. 

ஜி20, ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்னாட்டு அமைப்புகளின்மூலம் பலதரப்பு உறவுகளை வளர்த்தது, ஆசியான் மூலம் வட்டார ரீதியான உறவுகள் மேம்பட்டது, பல நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை உருவாக்கி, கட்டிக்காத்து, வளர்த்தது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்பட்ட அமெரிக்கா-வடகொரியா தலைவர்களின் சந்திப்பை செம்மையுடன் சிங்கப்பூரில் நடத்திக்காட்டிய பெருமைக்குரியவர். சீன அதிபர் ஸி ஜின்பிங்-தைவானின் அன்றைய அதிபர் மா யிங்ஜியோ சந்திப்பும் 2015ல் சிங்கப்பூரில் நடந்தது. பொதுத் தூதர் டாமி கோ குறிப்பிட்டதுபோல ஆசியாவின் ஜெனிவா என்ற பெயரை சிங்கப்பூர் பெறுவதற்கான காரணம் திரு லீயின் தலைமைத்துவம்.  

சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளையும் திட்டங்களையும் தீட்டியவர். உடனடித் தேவைகளுடன், அடுத்தடுத்த தலைமுறைகளையும் கருத்தில் கொண்டு திட்டங்களை வகுக்கும் பருந்துப் பார்வை அவருக்கு இருந்தது.  

அடுத்த நூற்றாண்டில் கடல்நீர் மட்டம் உயர்ந்தால், சிங்கப்பூரைப் பாதுகாக்க தீவைச் சுற்றி நில எல்லைகளின் உயரத்தை உயர்த்துவது, அதன் அங்கமாக மரின் பரேட் பகுதியில் கிழக்குக் கடற்கரைக்கு முன்னரே கடல் தூர்க்கப்பட்டு ‘நீண்ட தீவு’ லாங் ஐலண்ட் உருவாக்கப்படுவது என்று பருவநிலை மாற்றத்திற்கும் நீடித்த நிலைத்தன்மைக்கும் முக்கியத்துவம் அளித்தார். 

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு என்ற குறளுக்கேற்ப சிறந்த தலைவனுக்கானவற்றை பிரதிபலிப்பதாக அவரது தலைமைத்துவமும் கொள்கைகளும் இருந்தன. 

அனைவரையும் உள்ளடக்கிய பொருளியல் வளர்ச்சி தேவை என்பதை நன்குணர்ந்து சமுதாய அரவணைப்பை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள் பல அவரது காலத்தில் அறிமுகம் கண்டுள்ளன. குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் 2005ல்  அறிமுகமான காம்கேர் நிதி தொடங்கி, வேலைநலன் துணை வருமானத் திட்டம், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் என காலத்திற்கேற்ப மக்களுக்குத் தேவையான வகையில் அவை செயல்படுத்தப்பட்டன. 

நாட்டின் நிறுவனத் தலைவர்களும் முன்னோடித் தலைமுறையினரும் அமைத்த அடித்தளத்தில் சிங்கப்பூர் அடைந்த முன்னேற்றம் வியப்புக்குரியது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2004ல் அமெரிக்க டாலர் மதிப்பில் 27,608ஆக இருந்தது. 2022ல் அந்தத் தொகை 82,807 அமெரிக்க டாலராக பதிவானது. 

உலகளாவிய பொருளியல் மந்தநிலை, கொவிட்-19 நோய்ப் பரவல், லிட்டில் இந்தியா கலவரம், வெளிநாட்டுத் திறனாளர்களின் வருகை, தாதியரின் தலையங்கி விவகாரம், 377ஏ சட்ட திருத்தம் என நாட்டின் சவால்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகாத உறவு, அமைச்சரின் ஊழல் என மக்கள் செயல் கட்சியிலும் அவர் சந்தித்த சவால்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் அவர் சமாளித்து எதிர்கொண்ட விதம் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் பாதிப்பு ஏற்படாவண்ணம் நுட்பமாகவும் வெளிப்படையாகவும் இருந்தது. 

துரிதமான தொழில்நுட்ப வளர்ச்சியும் பல கலாசாரங்களின் சங்கமமும் இளம் தலைமுறையினரின் சிந்தனைகளும் எதிர்பார்ப்புகளும் மிகவும் வித்தியாசமானதாக வெளிப்பட்டது. சமூக ஊடகத்தின் பயன்பாடு அரசியல் களத்தை மாற்றியது. அரசியல் தலைவர்கள் சமூக ஊடகத்தின் வாயிலாக மக்களுடன் இணைந்திருக்கவேண்டிய மாற்றத்தை அவரும் அவரின் சகாக்களும் அரவணைத்தனர்.   

அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை என்ற வள்ளுவனின் குறளைப் பறைசாற்றும் வகையில் அறத்தை உணர்ந்தவராக, சொல்லாற்றலுடன், செயல்திறனுடன் உள்ள தலைவராக விளங்கிய திரு லீ, அறம் சார்ந்த வழிகளில் அந்த சவால்களை எதிர்கொண்டார். 

இன, சமய நல்லிணக்கம், இருமொழிக் கொள்கை போன்றவற்றுக்கு திரு லீ கவனம் செலுத்தினார். தலைமைத்துவ புதுப்பிப்பு அவர் சிந்தனையில் எப்போதும் இருந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் வெவ்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற புதுமுகங்கள் அறிமுகம் கண்டனர். அரசியல் அனுபவமும் சாணக்கியமும் அடுத்த தலைவரை, அதுவும் 4ஜி குழுவினர் அனைவரும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் முடிவாகவும் சிங்கப்பூரர்கள் பலரும் விரும்பும் தெரிவாகவும் கண்டெடுத்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் வீட்டின் தலைமகனாகவும் அவர் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் சமாளித்தார். இருமுறை புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தார். முதல் மனைவியின் மறைவால் பாதிக்கப்பட்டார். தாய், தந்தை இருவரையும் இழந்து வாடிய நிலையிலும் தன் பணிகளைத் தொய்வின்றிச் செய்தார். தந்தை திரு லீயின் மறைவுக்குப் பின் ஆக்ஸ்லி வீட்டு விவகாரம் உடன்பிறப்புகளை எதிர்த்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளியது. எத்தகைய சூழலிலும் மனம் தளராமல் செயல்பட்டார்.

நாட்டின் தலைவராக, அனைத்து மக்களையும் அரவணைத்து எல்லாரது உயர்வையும் மேன்மையையும் கருத்தில்கொண்டு செயல்பட்டார். 

இனி மூத்த அமைச்சராக திரு லாரன்ஸ் வோங்கின் அமைச்சரவையில் மதியுரைஞராக இளம் தலைவர்களின் வழிகாட்டியாக, திரு லீ தொடர்ந்து சேவையாற்ற உள்ளது சிங்கப்பூரின் தலைமைத்துவத்துக்குள்ள சிறப்பு.   

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!