சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு

பருவங்கள் மாறி மாறி வருகையில் ஏதோ ஓர் இடத்தில் தொடங்கி மறுபடியும் அவ்விடத்தையே அடைகிறது என்பதைக் கண்கூடாக அறிய முடிகிறது. தொடக்கமென்பது ஒரு மறுமலர்ச்சியை, புத்துணர்வை, மகிழ்ச்சியைக் கொடுக்ககூடியதாக அமைவதையே மனம் விரும்புகிறது. குளிர்காலம் முடிந்து, தாவரங்கள் துளிர்க்கும் காலம், மலர்கள் பூக்கும் காலம், ஆதவனின் கதிர்கள் பூமிக்கு இதமான வெப்பத்தைப் பரப்பும் காலம் இளவேனிற்காலம். அதுவே தொடக்கமெனப் பல்லாண்டு காலமாய் மனத்தில் தோன்ற சித்திரையே முதல் மாதமானது. நம் கலாசாரத்திற்குத் தெரிந்தது இம்மாதங்கள்தாம். இதனைத் தவிர்த்து, ராசிகளின் அடிப்படையில் மாத வரிசைகள் அமைவதும் உண்டு. அவையும் சித்திரை மாதத்தில்தான் தொடங்குகின்றன. 

சூரியன் மே‌‌ஷ ராசியில் புகுவதைச் சித்திரையின் முதல் நாளெனக் கொண்டு அதுவே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டுள்ளது. தமிழ் இலக்கண, இலக்கியப் படைப்புகளான தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேலை, நெடுல்நல்வாடை ஆகியவை சித்திரை மாதத்தையே முதல் மாதமெனக் குறிப்பிடுகின்றன.

தமிழ்நாட்டைத் தவிர்த்து, இந்தியாவின் பல மாநிலங்களும் சித்திரை முதல் தேதியில், அதாவது ஆங்கிலத் தேதி ஏப்ரல் 14ஆம் தேதிவாக்கில் தங்களின் புத்தாண்டைக் கொண்டாடுகின்றன. கேரளா, பஞ்சாப், ஒடிசா, பீகார், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா எனப் பல உதாரணங்கள். அதனையும் தாண்டி, இந்தியப் பண்பாடு பரவிய இலங்கை, தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, லாவோஸ் எனப் பல நாடுகளும் அதே நாளையே புத்தாண்டாகக் கொண்டாடுகின்றன. இந்நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், சித்திரையையே முதல் மாதமாகவும், புத்தாண்டு தொடங்கும் நாளாகவும் குறிப்பிடுகின்றன.  

சித்திரை முதல் தேதி தமிழர்களின் மரபார்ந்த வகையில் புத்தாண்டன்று என்பதற்கான மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 100 ஆண்டு காலத்திற்கு முன்புதான் எழுந்தது. இதற்கு மூல காரணம், திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கைத் தமிழர்களுக்கு முதன்மையாக்கும் முயற்சியே. அத்துடன், திருவள்ளுவர் நாள் வைகாசி அனு‌‌ஷத்திலிருந்து தை முதல் தேதிக்கு மாற்றப்பட்டது. அதனால், 2008ல், திமுக அரசு தை முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று ஆணை பிறப்பித்தாலும் 2011ல், அதிமுக அரசால் அந்த ஆணை ரத்து செய்யப்பட்டது.

அறுவடைக் காலத்தில் விவசாயிகள் இயற்கைக்கும் தங்கள் வளங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதுமே தைப்பொங்கல் கொண்டாடுவதின் நோக்கம். அந்நாள் தமிழ்ப் புத்தாண்டாக திடீரென மாறாது.  

தைப்பொங்கலை தமிழ்ப் புத்தாண்டென 1921ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி கூட்டத்தில் மறைமலை அடிகளார் கூட்டிய அறிஞர் குழுவில் பேசப்பட்டதாகவும், சங்க இலக்கியங்களின் ஆய்வின் அடிப்படையில், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறினர். ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்த பலர் சங்க இலக்கிய வரிகள் தை மாத நீராட்டு விழாவையே குறிப்பிடுகின்றன அன்றி தமிழ்ப் புத்தாண்டைப் பாடவில்லையென்று சாதித்தினர். மேலும், 1921ல் அத்தகைய ஒரு கூட்டம் நடைபெற்றதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை என்றும் வாதிட்டனர்.

ஆண்டுக்கணக்கும், அதன் பெயர்களும் இனம் தொடர்பானவையா, சமயம் தொடர்பானவையா? இனப் பண்பாடும் பாரம்பரியமும் சமயத்திற்கு முந்தியவை. ஒரே மாநிலப் பரப்பில் வாழ்ந்தவர்கள் கிட்டத்தட்ட அதே பாரம்பரியத்தையும் கடைப்பிடித்து வந்தனர். சமயக் கோட்பாடுகள் உலகளாவிய அளவில் பரவத்தொடங்கியதற்குப் பிறகு மாற்றங்கள் துரிதமாயின. வேறு சமய சம்பிரதாயங்களைச் சாரத் தொடங்கியவர்கள், அந்த சமயம் பூர்வீகமாகக்கொண்ட ஆண்டுக் கணக்குகளை பின்பற்றத்தொடங்கினர். இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. 

இப்போதுள்ள ஆண்டுப் பெயர்களும், மாதப் பெயர்களும் வடமொழிச் ‌சொற்கள் ஆதலால் அவற்றை ஒதுக்க வேண்டும் எனும் வாதம் சரியாகத் தோன்றவில்லை. தமிழ்-சமஸ்கிருத வாதங்களை இங்கே கொண்டுவரவேண்டியக் கட்டாயம் இல்லை. அப்படியே, இணையான தமிழ் மாதப் பெயர்களும் அதே வரிசையில் வருவதால், சித்திரைதான் முதல் மாதம் என்பது மாறப்போவதில்லை. 

கடந்த சில நூற்றாண்டுகளாக உலகமனைத்தும் ஆங்கில அல்லது ஐரோப்பிய மாதக் கணக்கினைப் பின்பற்றுவதற்கு இனமோ சமயமோ காரணமன்று. ஏறக்குறைய 400 ஆண்டுகள் உலகளாவிய அளவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் தாக்கமே ஆகும். அதனைப் பின்பற்றுவதன் மூலம் தமிழர்கள் எவரும் ஆங்கிலேயர்களாக மாறிவிடவில்லை.

சிங்கப்பூருக்கு, சுமார் 200 ஆண்டுகள் புலம்பெயர்ந்த இந்தியர்களில் தமிழர்கள் அதிக அளவில் இருந்தனர். பணி செய்துவிட்டுத் திரும்பிவிட வேண்டும் என எண்ணியவர்களைத் தமிழ்நாட்டு சிந்தனைக் கூறுகளும், அரசியல் மாற்றங்களும் பாதித்தவண்ணம் இருந்தன. தமிழ்நாடு காலப்போக்கில் மாறியிருந்தாலும், கடந்த காலம் அவ்வப்போது நம்மை அலைக்கழித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதன் பிரதிபலிப்புத்தான் தமிழ்ப் புத்தாண்டா அல்லது சித்திரைப் புத்தாண்டா எனும் கேள்வி.

நாம் பல ஆண்டு காலமாக இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும் இதுவரை தைப்பொங்கல் அன்று புத்தாண்டு வாழ்த்துகள் கூறிப் பார்த்ததில்லை. ஜனவரியில் வரும் ஆங்கிலப் புத்தாண்டை ஜனவரிப் புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் சொல்வதில்லை. அப்படியிருக்க நம் புத்தாண்டைமட்டும் சித்திரைப் புத்தாண்டு என அழைப்பது விசித்திரமான கூற்று. 

இந்தியர்களில் பலரும் சித்திரை மாதத்தில், அதாவது ஏப்ரல் மாத மத்தியில், அவரவர் புத்தாண்டுகளைக் கொண்டாடி வருகின்றனர். பஞ்சாபியர்கள் வைசாக்கியையும், தெலுங்கர்கள் யுகாதியையும், மலையாளிகள் விஷுவையும், பங்ளாதேஷ் நாட்டவர்கள் போய்ல பாய்‌‌‌ஷாக்கையும்  கொண்டாடும்போது, தமிழர்கள் நாம் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட தயக்கம் காட்டத் தேவையில்லை.

சங்ககால இலக்கியங்கள் உடனிருக்க, இச்சித்திரை முதல் தேதியில் எங்களின் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!