தாய்லாந்து முத்திரை மோதிரத்தில் ‘அளர் வைரதன்’

தாய்லாந்து முத்திரை மோதிரத்தில் ‘அளர் வைரதன்’

2 mins read
755ee5df-7039-4cd4-9294-9c7d2cc2eede
தாய்லாந்தின் பெட்சாபுரி பகுதியில் அந்நாட்டுத் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் தங்க அணிகலன்களுடன் முத்திரை மோதிரம் உட்பட இரு அரிய தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன - படம்: ரஞ்சித் குமார்

தாய்லாந்தின் பெட்சாபுரி பகுதியில் அந்நாட்டுத் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில், பழங்கால தங்க அணிகலன்களுடன் இரு அரிய தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று முத்திரை மோதிரம்.

தாய்லாந்து முத்திரை மோதிரத்தில் 2,000 ஆண்டுகள் பழைமையான ‘தமிழி’ எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன என்று கல்வெட்டியல் ஆய்வாளர் ரஞ்சித் குமார் தனராஜ் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து முத்திரை மோதிரத்தில் 2,000 ஆண்டுகள் பழைமையான ‘தமிழி’ எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன என்று கல்வெட்டியல் ஆய்வாளர் ரஞ்சித் குமார் தனராஜ் தெரிவித்துள்ளார். - படம்: ரஞ்சித் குமார்

அவற்றில் ஒரு முத்திரை மோதிரத்தில் 2,000 ஆண்டுகள் பழைமையான ‘தமிழி’ எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன என்று கல்வெட்டியல் ஆய்வாளர் ரஞ்சித் குமார் தனராஜ், 42, தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு வெளியே இத்தகைய முத்திரை மோதிரங்கள் கண்டெடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்று சிங்கப்பூரில் மென்பொருள் துறையில் பணியாற்றிவரும் திரு ரஞ்சித் குறிப்பிட்டார்.

புதன்கிழமை (ஜூலை 8) காலை இதுகுறித்து கருத்துரைத்த திரு ரஞ்சித், ‘‘தாய்லாந்தில் கண்டறிந்தவர்கள் இதனை முத்திரை மோதிரமாக பார்க்கவில்லை. ஆயினும், தமிழ்நாட்டில் இவ்வகை மோதிரங்களை பிம்பத் தோற்றத்தில் இடவல மாற்றத்துடன் பார்த்திருப்பதால்,  அதே ‘கண்ணாடிப் பிரதிபலிப்பு’ வடிவிலான அணுகுமுறையில் இந்த கண்டுபிடிப்பையும் அணுகினேன். இதனை நேராக வைத்து ஆய்வு செய்தபோது, அது தலைகீழாகச் செதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

‘‘மேலும் அது புகழ்பெற்ற ‘தமிழி’ எழுத்துவடிவோடு ஒத்துப்போவதும் தெரியவந்தது. எழுத்துகளின் வடிவ ஒப்பீட்டின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த முத்திரை மோதிரத்தில் ‘அளர் வைரதன்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது,’’ என்று ரஞ்சித் விவரித்தார்.

கல்வெட்டியல் ஆய்வாளர் ரஞ்சித் குமார் தனராஜ்.
கல்வெட்டியல் ஆய்வாளர் ரஞ்சித் குமார் தனராஜ். - படம்: ரஞ்சித் குமார்

சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகள் தமிழகத்திற்கு இடையே பல நூற்றாண்டுகளாக நிலவிய கடல்வழி வணிகம், பண்பாட்டுப் பரிமாற்றம், சமயத் தொடர்புகளுக்கு இந்த கண்டுபிடிப்பு மற்றுமொரு வலுவான சான்று என அவர் குறிப்பிட்டார்.

“இந்த அகழாய்வின் கண்டுபிடிப்புகள் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் தமிழர்களின் தடம் ஆழமாகப் பதிந்துள்ளதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தென்கிழக்காசியாவில் தமிழர்களின் நீண்டகால வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தையும் இது தொடங்கியுள்ளது,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“எதிர்காலத்தில் நாம் வரலாற்றை அணுகும் முறை மாற வேண்டும். கம்போடியா வரலாறு, தாய்லாந்து வரலாறு என ஒவ்வொரு நாட்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

‘‘அதற்குப் பதிலாக, இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வரலாறாகவே  பார்க்கப்பட வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.

இதற்கிடையே, ‘‘தென்கிழக்காசிய நாடுகளில் இதுபோன்ற பல வரலாற்றுப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளில் பானை ஓடுகள் உள்ளிட்டவையும் கிடைத்திருக்கின்றன. எனினும், சிங்கப்பூருக்கும் அருகே தாய்லாந்தில் கிடைத்துள்ள தமிழர்களின் ஈராயிரமாண்டு வரலாற்று முத்திரை கண்டுபிடிப்பு தனித்துவமானது,’’ என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் சொ. சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்

“இந்த முத்திரை மோதிரம் குறித்த புகைப்படங்களை இடவல மாற்றம் செய்து திரு ரஞ்சித் அனுப்பினார். அதில் காணப்பட்ட ‘அளர் வைரதன்‘ என்பதில் ‘ன்‘ என்ற கடைசி விகுதி அந்த எழுத்து கட்டாயமாக தமிழிதான் என்பதை உறுதிசெய்ய வழிவகுத்தது. முதன்மைக் கல்வெட்டு ஆய்வாளரும் மூத்த தொல்லியல் வல்லுநருமான முனைவர் மார்க்சிய காந்தியும் இதனை உறுதிப்படுத்தினார்,’’ என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்