இரண்டு கொள்ளை சம்பவங்களின் தொடர்பில் 29 வயது ஆடவர் கைது

ஹவ்காங் அவென்யூ 7, ஜாலான் சுல்தான் ஆகிய பகுதிகளில் இரண்டு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 29 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்ற செவ்வாய்க்கிழமை 27 வயதான பெண்மணியின் ஆபரணம், பணம் ஆகியன ஹவ்காங் அவென்யூ 7ல் கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் செய்தார். சென்ற வெள்ளிக்கிழமை ஜாலான் சுல்தானில் 31 வயதுப் பெண்மணியிடமிருந்து நகை, பணம் கொள்ளையடிக்கப் பட்டதாகவும் புகார் பெறப்பட்டது. இவ்விரு கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டதாகக் கருதப்படுபவரது அடையாளம் ஒரே மாதிரியாக இருந்ததாக போலிஸ் அறிக்கை நேற்று தெரிவித்தது. தங்ளின் பிரிவு போலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகு நேற்று முன்தினம் இரவு 8.10 மணியளவில் அங் மோ கியோ அவென்யூ 6ல் ஆடவர் ஒருவரைக் கைது செய்தனர்.