பொங்கோலின் முதல் தீயணைப்பு நிலையம் அடுத்த ஆண்டு செயல்படும்

அடுத்த ஆண்டின் மத்திக்குள் பொங்கோல் வட்டாரத்தின் முதல் தீயணைப்பு நிலையம் செயல்படத் தொடங்கும்.

அப்பகுதியின் அக்கம்பக்கப் போலிஸ் நிலையத்துடன் சேர்ந்து, 151 பொங்கோல் சென்ட்ரல் எனும் முகவரியில் தீயணைப்பு நிலையம் செயல்படும்.

சுமார் 9,500 சதுர மீட்டருக்கு மேலான பரப்பளவு கொண்ட ஐந்து மாடி கட்டடத்தில் அமையவிருக்கும் இந்தத் தீயணைப்பு நிலையம், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 23வது நிலையமாகும். அதே கட்டடத்தில் செயல்படவிருக்கும் அக்கம்பக்கப் போலிஸ் நிலையம், சிங்கப்பூர் போலிஸ் படையின் 35வது நிலையமாகும்.

தீயணைப்புப் படையினர் பயிற்சி பெறுவதற்குத் தேவையான வசதிகள் அந்த வளாகத்தில் அமைந்திருக்கும். சமூகப் பிணைப்பிற்கான இடவசதி இரண்டாம் தளத்தில் அமைக்கப்படும்.

பொங்கோல் வட்டாரத்தின் அதிவேக வளர்ச்சிக்குப் புதிய தீயணைப்பு நிலையம் அவசியமானது என்று கூறினார் உள்துறை, தேசிய வளர்ச்சிக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் குமாரி சுன் ஷுவெலிங். குறிப்பாக, 50 ஹெக்டர் பரப்பளவில் பொங்கோல் மின்னிலக்க வட்டாரம் உருவாக்கப்படவிருப்பதாகச் சென்ற ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

தீயணைப்பு, போலிஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நடும் விழாவில் அவர் பேசினார்.  

பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான குமாரி சுன் ஷுவெலிங்குடன் சக உறுப்பினரான அமைச்சர் இங் சீ மெங்கும் விழாவில் கலந்துகொண்டார்.