சுடச் சுடச் செய்திகள்

ஆய்வு: பட்டயக் கல்வி முடித்தவர்களுக்கு தொடக்க சம்பளம் அதிகரித்தது, வேலைவாய்ப்பும் மேம்பட்டது

பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் பட்டயக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டு சிறந்த வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும் முந்தைய தொகுதி மாணவர்களைவிட அவர்களின் தொடக்க சம்பளம் அதிகரித்ததாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பட்டயக் கல்வியை முடித்த ஆறு மாதங்களில் ஊழியரணியில் சேர்ந்த மாணவர்களில் 90.7 விழுக்காட்டினர் நிரந்தர அல்லது பகுதிநேர வேலையில் சேர்ந்தனர் அல்லது தன்னுரிமை தொழில் செய்தனர் என்று இன்று வெளியிடப்பட்ட வேலை நியமன ஆய்வு தெரிவித்தது.

2018ஆம் ஆண்டு தொகுதியினர் ஊழியரணியில் சேர்ந்த எண்ணிக்கையைவிட இது 1.2 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம். பட்டயக் கல்வியை முடித்து வேலையில்லாதவர்களின் விகிதம் 2018ல் இருந்த 10.5 விழுக்காட்டிலிருந்து கடந்த ஆண்டு 9.3 விழுக்காடாக குறைந்தது. அதேவேளையில், பகுதிநேர அல்லது தற்காலிக வேலை செய்தவர்களின் விகிதமும் 26.4 விழுக்காட்டிலிருந்து 25.5 விழுக்காடாக குறைந்தது.

நன்யாங், நீ ஆன், ரிபப்ளிக், சிங்கப்பூர், தெமாசெக் ஆகிய ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகள் இந்த ஆய்வை நடத்தின. பட்டயக் கல்வியை முடித்து முழுநேர வேலையில் சேர்ந்தவர்களின் இடைநிலை மொத்த மாதச் சம்பளம் கடந்த ஆண்டு $2,400ஆக இருந்தது. 2018ல் அச்சம்பளம் $2,350ஆக பதிவாகியிருந்தது. சுகாதார அறிவியல் துறை மாணவர்களே தொடர்ந்து ஆக அதிக இடைநிலை மொத்த மாதச் சம்பளமாக $2,600 பெற்றனர். இரண்டாவது நிலையில் வந்த பொறியியல் மாணவர்களின் சம்பளம் $2,470ஆக இருந்தது. தகவல், மின்னிலக்கத் தொழில்நுட்ப துறை அல்லது மானுடவியல், சமூக அறிவியல் துறை மாணவர்களின் சம்பளம் $2,450ஆக இருந்தது.

பட்டயக் கல்வி முடித்த 11,598 மாணவர்களில் 8,685 மாணவர்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர். அவர்கள் இறுதித் தேர்வை எழுதி ஆறு மாதங்கள் கழித்து, கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அவர்களது வேலை நிலவரம் குறித்து கேட்டறியப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள் தமக்கு உற்சாகம் அளிப்பதாக வர்த்தக, தொழில்; கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட் இன்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.
“கல்வியை முடித்த சிங்கப்பூரர்களுக்கு வலுவான பொருளியல் சிறந்த வேலைகளை வழங்குகிறது. அதேவேளையில், சிறந்த கல்வி முறை நமது பொருளியலுக்குத் திறன் பெற்ற ஊழியரணியை உருவாக்குகிறது,” என்றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon