கடந்த 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரர்கள் முந்தைய ஆண்டுகளில் இருந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இல்லை என்று உலக மகிழ்ச்சி அறிக்கையில் (World Happiness Report) தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையின் பட்டியலில் சிங்கப்பூர் நான்கு இடங்கள் இறங்கி 34வது இடத்தில் முடிந்தது. உலகளவில் 147 இடங்களின் மகிழ்ச்சி விகிதத்தை ஆராயும் அந்த அறிக்கை கடந்த வியாழக்கிழமை (மார்ச் 20) வெளியிடப்பட்டது.
உலக மகிழ்ச்சி அறிக்கை முதன்முதலில் 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு சிங்கப்பூர் 34வது இடத்துக்குக்கீழ் முடித்ததில்லை. முன்னதாக 2017, 2018ஆம் அண்டுகளிலும் சிங்கப்பூர் 34வது இடத்தைப் பிடித்தது.
2023 உலக மகிழ்ச்சிப் பட்டியலில் சிங்கப்பூர் 20வது இடத்தில் முடித்தது. அதன்படி, அது ஆசியாவின் ஆக மகிழ்ச்சியான நாடாக விளங்கியது.
இம்முறை தைவான், சிங்கப்பூரைப் பின்னுக்குத் தள்ளியது. ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம், கேலப் நிறுவனம், ஐக்கிய நாட்டுச் சபை (ஐநா) ஆகியவை வெளியிட்ட இந்த அறிக்கையின் பட்டியலில் தைவான் 27வது இடத்தில் முடித்தது.
மூவாண்டு காலத்துக்கான சராசரி கணக்கெடுப்பைக் கொண்டு அறிக்கை வரையப்பட்டது. சமூக ஆதரவு, சுதந்திரம், தாராள மனத்துடன் இருப்பது, ஊழல் தொடர்பான கண்ணோட்டம் உள்ளிட்ட அம்சங்கள் கருத்தில்கொள்ளப்பட்டன.
பட்டியலின் முதல் சில இடங்களில் மறுபடியும் நோர்டிக் (Nordic) வட்டார நாடுகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது; அதைத் தவிர இதர நோர்டிக் நாடுகளான டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியவையும் நெதர்லாந்தும் முதல் ஐந்து இடங்களுக்குள் முடித்தன.
தென்கிழக்காசிய நாடுகளில் தாய்லாந்து 49வது இடத்தில் முடித்தது, பிலிப்பீன்ஸ் 57வது இடத்தில் முடித்தது, மலேசியா 64வது இடத்தைப் பிடித்தது, இந்தோனீசியா 83வது இடத்தை வகிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
கிழக்கு ஆசியாவில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் பட்டியலில் சில இடங்கள் இறங்கின. முன்னதாக 51வது இடத்தில் முடித்த ஜப்பான் 55வது இடத்துக்கு இறங்கியது, தென்கொரியா 52லிருந்து 58 இடத்துக்குத் தள்ளப்பட்டது, சீனா 60லிருந்து 68வது இடத்துக்கு இறங்கியது.
அமெரிக்கா, இதுவரை இல்லாத அளவில் 24வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. ஆறாவது இடத்தைப் பிடித்த கோஸ்டா ரிக்காவும் 10வது இடத்தைப் பிடித்த மெக்சிகோவும் முதன்முறையாக முதல் 10 இடங்களுக்குள் முடித்தன.