காட்டுத்தீ: பேரிடரால் பேரழிவு

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இடைவிடாது எரிந்துவரும் காட்டுத்தீ ஏற்படுத்திய பாதிப்புகள் எண்ணிலடங்கா! 28 மனித உயிர்கள், 2,000 வீடுகள், பல மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு, பில்லியன் விலங்குகள் என இழப்புகளும் ஏராளம். ‘என்று தணியும் இந்தத் துயரம்’ என ஆஸ்திரேலிய மக்கள் ஏங்கித் தவித்து வரும் சூழலில், அந்நாட்டில் வசித்து வரும் சிங்கப்பூரர்களிடம் அந்தப் பேரிடர் குறித்தும் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் கேட்டறிந்தது தமிழ் முரசு நாளிதழ்.

கென்னத் ரமேஷ் வின்சென்ட், 37

பெர்த் நகரின் புறநகர்ப் பகுதியில் வசிப்பதால் காட்டுத்தீ காரணமாக அவ்வப்போது ஏற்படும் புகைமூட்டத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் சிங்கப்பூரரும் ஆஸ்திரேலிய நிரந்தர வாசியுமான திரு கென்னத். தீ பரவாமல் தடுப்பதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் கட்டுப்பாடான வழியில் புதர்களை எரித்துவிடுவது வழக்கம். கோடைக் காலத்தின்போது அந்த ‘பேக் பர்னிங்’ நடவடிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் மக்கள் அதிகம் வாழும் இடங்களில் தீ பரவாமல் தடுக்க முடியும் என்கிறார் இவர். பெரிய அளவிலான காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். சிங்கப்பூரில் தேசிய சேவையாற்றியபோது புக்கிட் தீமா தீயணைப்பு நிலையத்தில் பிரிவுத் தளபதியாகச் செயல்பட்ட அனுபவம் கொண்ட இவர், ஆஸ்திரேலியாவில் தன்னார்வ தீயணைப்பு ஊழியராகத் தம்மையும் இணைத்துக்கொண்டுள்ளார். இந்தப் பேரிடர் காலகட்டத்தில் ஆஸ்திரேலியர்களுக்குத் தம்மால் முடிந்த உதவியைச் செய்ய விரும்புவதாகக் கூறினார். தீயணைப்புப் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பாளர்களை எண்ணி தமது மனம் கலங்குவதாகக் கூறுகிறார் நான்கு குழந்தைகளின் தந்தையான திரு கென்னத்.

வெற்றிச்செல்வி சிங்காரம், 63

தீச்சம்பவங்களைப் பற்றி நினைத்தாலே மனம் பதைபதைப்பதாகக் கூறுகிறார் சிட்னியில் குடும்பத்தாருடன் வசிக்கும் மாணவர் தங்குவிடுதி அதிகாரி திருமதி வெற்றிச்செல்வி சிங்காரம், 63. ஆஸ்திரேலியாவில் 31 ஆண்டுகளாக வசித்துவரும் இவர், இப்படி ஒரு பேரிடரை இதுவரை கண்டதே இல்லை என்கிறார். தீயணைப்பு வீரர்கள் முழுமூச்சாகச் செயல்பட்டு வருவதாகக் கூறிய இவர், ஆயினும் காற்று பலமாக வீசுவதால் தீயைக் கட்டுப்படுத்த அவர்கள் திணறி வருவதாகச் சொன்னார். விடாது எரிந்து வரும் காட்டுத்தீயால் தமது வசிப்பிடமே வெப்பமாக இருப்பதாகக் குறிப்பிட்ட இவர், தங்களுக்கான உடைமைகளைத் தயார்நிலையில் வைத்துள்ளாராம். உணவுப்பொருட்கள் விலையேற்றம் கண்டுள்ளதாகக் கூறிய இவர், ‘Fire near me’ எனும் செயலி, விழிப்புடன் இருக்க உதவுவதாகக் குறிப்பிட்டார்.

ஸ்ரீதரன் விஜயகுமார், 39

இம்முறை ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறுகிறார் மெல்பர்னில் வசித்துவரும் பொறியாளர்
திரு ஸ்ரீதரன் விஜயகுமார். ஏராளமான நிலங்கள் எரிந்துவிட்டன; விவசாயமும் பயணத்துறையும் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளன; காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் பலருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது என்கிறார் இவர். கடுமையான வெப்பம் காரணமாக சில பகுதிகளில் தானாக தீப்பிடித்துக்கொண்டதாம். தமது வட்டாரத்தையும் புகைமூட்டம் விட்டுவைக்கவில்லை என்ற இவர், அதனால் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அதேவேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக இவர் சொன்னார். இந்த நெருக்கடியான சூழலில் இருந்து விடுபட விக்டோரியா மாநிலமும் ஒட்டுமொத்த நாடும் பெருமுயற்சி எடுத்து வருகிறது என்ற இவர், மக்களும் நல்லதொரு தீப்பாதுகாப்புத் திட்டத்தை வைத்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ராஜேஸ்வரி, 25

காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பது, ஒருவேளை தீப்பிடித்துவிட்டால் அதைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமே என ஒதுங்கிவிடக் கூடாது என்கிறார் பெர்த் நகரில் குழந்தைப் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து வரும் குமாரி ராஜேஸ்வரி. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இவர் ஊக்குவிக்கிறார். ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்தான் என்று பொதுமைப்படுத்தாமல், அந்நாட்டு மக்களின் துயரைத் தங்களுக்கு ஏற்பட்ட துன்பமாகக் கருதவேண்டும் என்பது இவரது எதிர்பார்ப்பு. காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் எல்லாருக்கும் பாதுகாப்பான சுற்றுச்சூழலைக் கட்டிக்காப்பது குறித்தும் அவர்களுக்குக் கற்றுத் தரலாம். இப்போது ஏற்பட்டுள்ள பேரிடரையும் அதைக் கட்டுப்படுத்துவதில் இருக்கக்கூடிய சிரமங்களையும் பார்க்கும்போது, நெருக்கடிகால, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் மறுஆய்வு செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இவர் கருதுகிறார்.

ஜொவென் ஜோனதன், 34

புதர்த்தீயால் கடந்த சில மாதங்களாக சிட்னி நகரில் கடும் புகைமூட்டம் நிலவுவதாகவும் அதனால் தாமும் குடும்பத்தினரும் ‘என்-95’ போன்ற முகக்கவசங்களை அணிய வேண்டியுள்ளது என்றும் கூறினார் பல்கலைக்கழக விரிவுரையாளரான முனைவர் ஜொவென் ஜோனதன். புகைமூட்டம் சில வேளைகளில் அவசர மணிகளை இயக்கிவிடுவதாகக் குறிப்பிட்ட திருமதி ஜொவென், அதனால் மக்கள் பலமுறை கட்டடங்களில் இருந்து வெளியேறி புகை சூழ்ந்த வெளிப்புறங்களில் நிற்க நேரிடுவதாகவும் சொன்னார். புகைமூட்டத்தைச் சமாளிப்பது குறித்த வழிமுறைகளை ஊடகங்களின் மூலம் தெரிந்துகொண்டு, மக்கள் தங்களால் இயன்றவரை நிலைமையைச் சமாளிப்பதாகத் தெரிவித்தார். காட்டுத்தீயால் ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்த இவரின் நான்கு வயது மகள், மக்களுக்கு உதவ ஆர்வமாக இருக்கிறாராம்.

மெஹ்ரீன், 20

ஆஸ்திரேலியாவின் நியூகாசல் நகரில் உள்ள ‘நியூகாசல் பல்கலைக்கழகத்தில்’ மருத்துவக் கல்வி பயின்றுவரும் தனது உடல்நலன் குறித்து சிங்கப்பூரில் உள்ள தன் பெற்றோர் அதிக கவலையடைந்துள்ளதாகக் கூறுகிறார் குமாரி மெஹ்ரீன். கட்டுக்கடங்காத காட்டுத்தீயால் அங்கு ஏற்பட்டுள்ள காற்றுத் தூய்மைக்கேடுதான் அதற்குக் காரணம். காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 300ஐத் தாண்டியதாகவும் அதனால் தமது பல்கலைக்கழகம் ஒருநாள் மூடப்பட்டதாகவும் இவர் சொன்னார். இதையடுத்து, தமது பல்கலைக்கழகமும் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசும் காற்றுத் தூய்மைக்கேடு குறித்தும் அதிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக இவர் குறிப்பிட்டார். காட்டுத்தீயால் ஆஸ்திரேலியாவின் அழகான நீல வானத்தைப் பார்ப்பதே இப்போது அரிதாகவுள்ளதாகச் சொல்லி வருத்தப்பட்ட இவர், அடுத்து தண்ணீர்ப் பற்றாக்குறைப் பிரச்சினை வருமோ என்று மக்கள் அஞ்சுவதாகவும் சொன்னார்.

கருத்து, படங்கள் திரட்டு: கி.ஜனார்த்தனன், எஸ்.வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!