விளையாட்டின் சிறந்த தருணம்: சச்சினுக்கு ‘லாரியஸ்’ விருது

பெர்லின்: 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி வாகை சூடியதும் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரை  அவ்வணி வீரர்கள் தோளில் சுமந்தபடி மும்பை வான்கடே திடல் முழுக்க வலம் வந்தனர். அந்த நிகழ்வை கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த விளையாட்டுத் தருணமாக அங்கீகரிக்கப்பட்டு, சிறப்புமிக்க ‘லாரியஸ்’ விருது சச்சினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெருவாரியாக வாக்களித்ததே இதற்கு முக்கிய காரணம்.

தமது கடைசி, ஆறாவது உலகக் கிண்ணத் தொடரில் அதனை வென்று, நெடுநாள் கனவை நனவாக்கினார் சச்சின்.

கடந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை லூவிஸ் ஹேமில்டனும் (எஃப்1) லயனல் மெஸ்ஸியும் (காற்பந்து) பகிர்ந்துகொண்டனர். அமெரிக்காவின் சீருடற்பயிற்சி வீராங்கனை சிமோன் பைல்ஸ் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது ஜெர்மானிய கூடைப்பந்து வீரர் டிர்க் நொவிட்சிக்கு வழங்கப்பட்டது.