ரஷ்யப் படகை விடுவித்தது வடகொரியா

மாஸ்கோ: ஜப்பானிய கடல் பகுதியில் வடகொரிய கடலோர காவல் படையினர் இழுத்துச் சென்ற ரஷ்யப் படகையும் அப்படகில் இருந்த ஐந்து சிப்பந்திகளையும் வட கொரிய அதிகாரிகள் விடுவித்திருப்பதாக ரஷ்ய ஊடகத் தகவல்கள் கூறின. இரண்டு நாட்களுக்கு முன்பு தென்கொரிய கடல் பகுதியிலிருந்து ரஷ்யாவுக்குச் சென்று கொண்டிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகை வடகொரிய கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தி அப்படகை இழுத்துச் சென்றதுடன் அப்படகில் இருந்த ஐந்து சிப்பந்தி களையும் கைது செய்தனர்.

வடகொரியாவின் அச்செயலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று ரஷ்யப் படகையும் சிப்பந்திகளையும் வடகொரியா விடுவித் துள்ளது. தவறுதலாக ரஷ்யப் படகை இழுத்துச் சென்றதாக வடகொரிய அதிகாரிகள் தெரிவித்ததாக ரஷ்யா கூறியுள்ளது.