நோயற்று வாழ மாசற்ற காற்று

மனிதன் உயிர் வாழத் தேவையானவற்றுள் இன்றியமையாதது காற்று. இன்று நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா எனக் கேட்டால் ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.உலகில் பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 93 விழுக்காட்டினர் நச்சுக் காற்றை சுவாசித்து வருகின்றனர் என்றும் இது அவர்களின் சுகாதாரத்திலும் வளர்ச்சி யிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அண்மையில் ஜெனீவாவில் நடந்த காற்றுத் தூய்மைக்கேடு குறித்த முதலாவது அனைத்துலக மாநாட்டில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதை இலேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக ஆண்டிற்கு ஏழு மில்லியன் பேர் இறக்கின் றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. மாசடைந்த காற்று ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சுகாதாரத்திற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

நச்சுக் காற்றைச் சுவாசிப்பது நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல உடல் நலக் கோளாறுகளுக்கு வித்திடுகிறது. காற்றுத் தூய்மைக்கேட்டிற்கு முதன்மை யான காரணமாகக் கூறப்படும் தொழில் நிறுவனங்களுக்கும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நச்சுக்காற்றைச் சுவாசிப்பதன்மூலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் பணிக்கு வர முடியாமல் போனால் மனித உழைப்பில் இழப்பு ஏற்படுகிறது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு, பொருளியலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு புதுடெல்லி உள்ளிட்ட பல இந்திய நகரங்களே சான்று.

எப்போதும் இல்லாத அளவிற்கு டெல்லி யில் காற்றுத் தூய்மைக்கேடு நிலவி வரு வதால் இரு வாரங்களுக்குத் தொழில் நிறு வனங்கள் இயங்கத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

தீபாவளிப் பண்டிகைக்குப் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்ததால் பல இடங்களில் பட்டாசு விற்பனை படுமந்தமாக இருந்ததாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இது பட்டாசு தயாரிப்பை நம்பி வாழ்வோருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத் தலாம்.

தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் காற்றுத் தூய்மைக்கேட் டிற்கு இன்னொரு முக்கிய காரணம். வீட்டுக்கு வீடு தானியக்க வாகனங்கள் நின்றாலே அந்த நாட்டை வளர்ச்சியடைந்த நாடாகக் கூற முடியாது. அப்படி வாகனம் வாங்க வசதியிருந்தும் எந்த ஒரு நாட்டில் மக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துகிறார்களோ, அதுதான் உண்மை யிலேயே வளர்ச்சியடைந்த நாடாக இருக்க முடியும்.

அதற்கேற்ப, கார் பயன்பாடு குறைந்த நாடாக சிங்கப்பூரை மாற்ற நமது அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சாலைகளில் மின்சாரப் பேருந்துகள் இயங்க ஆரம்பித்து விடும்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் மின்சா ரத்தால் செயல்படும் சாதனங்களின் பயன் பாடு கூடியுள்ளதால் மின்னாற்றலின் தேவை யும் பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடு தலையும் ஏற்படுத்தாத சூரிய சக்தி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறிப்பிடும்படியான வளர்ச்சியை எட்டவில்லை.

மக்கள்தொகை கூடக் கூட தொழில் வளர்ச்சியும் நிச்சயம் வேண்டும். ஆனால், அது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக் காத வகையில் இருப்பதற்கான மாற்று வழி களை ஆராயவேண்டும்.

சுற்றுச்சூழலைக் காக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களும் கைகொடுக்கவேண்டும். அத்துடன் அவர்கள் தங்களது தேவைகளைக் குறைத்துக் கொண்டு, வளங்களை, வசதிகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இதைச் சாத்தியமாக்க இயலும்.

போத்தல் நீரைப் போல, போத்தலில் அடைத்து வைத்து தூய காற்றைச் சுவாசிக் கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாது. நாளும் நல்ல காற்றைச் சுவாசித்து, நலமுடன் வாழ்வதோடு எதிர்காலத் தலை முறையினருக்கும் நீர், நிலம், காற்று, ஒலி என எங்கும் எதிலும் மாசில்லா, தூய உலகை விட்டுச்செல்ல கடப்பாடு கொள்வோம்.