சிங்கப்பூரில் அப்பழுக்கில்லாத அரசியல் நடைமுறை தொடரட்டும்

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, நன்னடத்தையில் இருந்தும் பொறுப்பு, கடமைகளில் இருந்தும் அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வழிதவறி நடப்பது என்பது மிகமிக அரிதானது.

நாட்டின் ஆக உயரிய அரசமைப்புச் சட்ட அமைப்பாகத் திகழும் நாடாளுமன்றம்தான் சிங்கப்பூரின் முக்காலத்திற்கும் முழுப் பொறுப்பான அமைப்பாகும்.

காலவோட்டத்திற்கு, மாற்றங்களுக்கு, சூழ்நிலைகளுக்குத் தேவையான, பொருத்தமான சட்டங்களை இயற்றியும் அவற்றில் திருத்தங்களைச் செய்தும் நாட்டை வழிநடத்திச் செல்வது அந்த மன்றம்தான்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் தரம் தொடக்கம் முதலே மிக உயர்வாக நிர்ணயிக்கப்பட்டு அவை நூற்றுக்கு நூறு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அவற்றைப் பொறுத்தவரை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை.

சிங்கப்பூர் தலைவர்கள், அரசியல்வாதிகள் லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் அத்தகைய செயல்களை அவமானமாகக் கருதுகிறவர்கள். நாடு லஞ்ச ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அதன் நிர்வாக முறை அப்பழுக்கற்றது என்பது உலகம் முழுவதும் தெரிந்த ஒன்று.

சிங்கப்பூர் தனிச்சிறப்புமிக்க நாடாக உலக அளவில் அங்கீகரிக்கப்படுவதற்கு இவைதான் மிக முக்கிய காரணம்.

எந்த அளவுக்குத்தான் எஃகுக் கோட்டையாக இருந்து தரங்கள் மிகக் கடுமையாகக் கட்டிக்காக்கப்பட்டு வந்தாலும்கூட அதன் உறுப்பினர்களில் யாரோ ஒருவர் தனிப்பட்ட முறையில் சில நேரங்களில் தடுமாறிவிடுவது உண்டு. ஆனாலும் சிங்கப்பூரில் இத்தகைய சம்பவங்கள் அத்தி பூத்தாற்போல மிகமிக அரிதானது.

நாடாளுமன்றம் கடந்த புதன்கிழமை மூன்று மணி நேரம் ஒரு விவாதத்தை நடத்தியது.

அமைச்சர் எஸ் ஈஸ்வரனை லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வரும் விவகாரம் பற்றியும் நாடாளுமன்றத்தின் முன்னாள் நாயகர் டான் சுவான் ஜின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி செங் லி ஹுய் இருவருக்கும் இடைப்பட்ட தகாத உறவு குறித்தும் மன்றம் விவாதம் நடத்தியது.

அந்த விவாதம், சிங்கப்பூர் எந்த அளவுக்குத் தனது நிலையில் உறுதியாக இருக்கிறது என்பதைப் பரிசோதிக்கும் ஒன்றாகத் தெரிகிறது.

போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் மீது குற்றம் எதுவும் சுமத்தப்படவில்லை. அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவ்வளவுதான்.

இருந்தாலும் அந்த விசாரணைகூட அரசாங்கத்திற்கு உளைச்சலை ஏற்படுத்தும் சுய சோதனையாக ஆகி இருக்கிறது.

முன்னாள் நாடாளுமன்ற நாயகர் டானும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செங்கும் தங்களுக்கு இடைப்பட்ட தகாத உறவு காரணமாக அரசியலில் தரம் குறைந்து பதவிகளை, பொறுப்புகளை இழந்துவிட்டார்கள்.

சிங்கப்பூர் அரசியல்வாதிகள் என்றாலே அவர்கள் தனிப்பட்ட நடத்தையைப் பொறுத்தவரை உயர் தரங்களைக் கட்டிக்காப்பவர்கள் என்றுதான் மக்களுக்கு இதுநாள்வரை தெரிந்து வந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில், இத்தகைய தகாத உறவு விவகாரம் நாட்டின் அரசியல் நன்னெறிகளில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடக்கூடும் என்று சிங்கப்பூரர்கள் கவலைப்படுவார்கள் என்பது நிச்சயம்.

நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது பேசிய பிரதமர் லீ சியன் லூங், டான்-செங் விவகாரத்தைப் பொறுத்தவரை தான் கொஞ்சம் முன்னதாகவே செயல்பட்டு இருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டார்.

அந்த விவகாரத்தை இரண்டு ஆண்டுகள் கழித்து அம்பலப்படுத்தியதை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், அவர்களின் குடும்பங்களைக் காக்க வேண்டும் என்பதைத் தான் முக்கியமாகக் கருதியதாகக் கூறினார்.

இதில் அநேகமாக, தான் அளவுக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துவிட்டதாகவும் பிரதமர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

கருணையைக் கருத்தில் கொண்டு செயல்பட்டதே இதற்கான காரணமாக இருக்கலாம் என்ற பிரதமர், ஆளும் மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெள்ளத்தெளிவாக ஒரு தகவலை உறுதிபடத் தெரிவித்தார்.

அதாவது, இத்தகைய கருணை காட்டும் அணுகுமுறை எதிர்காலத்தில் இனி கடைப்பிடிக்கப்படாது என்று பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு நடத்திவரும் விசாரணை, தகாத உறவுப் பிரச்சினை இரண்டையும் பற்றி மன்றத்தில் நடந்த மூன்று மணிநேர விவாதம், நாட்டின் நிர்வாக முறை கொஞ்சம்கூட தளர்வின்றி, தயக்கமின்றி சரியாகச் செயல்படுகிறது என்பதற்கான ஓர் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

ஆளும் தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் பல கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டார்கள். அவர்கள் முன்வைத்த சில கேள்விகள் கடுமையானதாகவும் இருந்தன. பிரதமரும் அரசாங்கச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங்கும் கேள்விகளுக்குப் பதில் கூறி விளக்கம் அளித்தார்கள்.

நாடாளுமன்றத்தின் இந்த நடைமுறை தொடர்ந்து மிக வலுவாக இருந்துவர வேண்டும்.

தனிப்பட்டவர்களின் நடத்தை காரணமாக நிர்வாக முறைக்குக் குந்தகம் ஏற்படுகிறது என்றால் இத்தகைய நாடாளுமன்ற நடைமுறையும் நீதித்துறை நடைமுறையும் உடனடியாகத் தலையிட்டு தவறுகளை சரியான முறையில், சரியான வழியில் அகற்றிவிட வேண்டும்.

நாடாளுமன்றத்தின் புதிய நாயகராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு இருக்கின்ற திரு சியா கியான் பெங் இதைத்தான் உறுப்பினர்களிடத்தில் தெளிவுபடுத்தினார்.

உறுப்பினர்கள் தங்களின் சொல்லும் செயலும் தங்களுக்குப் பிறகும் காலத்தால் அழியாமல் இருந்து வரும் என்பதை எப்போதுமே நினைவிற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றம்தான் ஒரு நாட்டின் ஆக உயரிய சட்டபூர்வ அமைப்பு. நாட்டின் எதிர்காலத்தை அரசியல் ரீதியில் உறுதிப்படுத்துவது இப்போதைய நாடாளுமன்றம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைக் கருத்தில்கொண்டு அதன் உறுப்பினர்கள் எள்ளளவும் தவறாமல் உயரிய தரங்களைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதை புதிய நாயகர் நினைவூட்டி இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!