புதிய, அரிய மரபுடைமை கண்காட்சி

சிங்கப்பூருக்கு வருகை தந்த முன்னோடிகளில் ஒருவரின் பெயரை இங்குள்ள பலரிடம் கேட்டால், பெரும்பாலானோர் 19ஆம் நூற்றாண்டில் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்சுடன் சிங்கப்பூருக்கு வந்த வணிகர் நாராயண பிள்ளையின் பெயரைத்தான் சொல்வர்.

ஆனால், பழமையான நினைவுச்சின்னமான ‘சிங்கப்பூர் கல்’ (Singapore stone) குறித்து வெளியான அண்மைய தகவலின்படி நாராயண பிள்ளை வாழ்ந்த காலத்திற்கு முன்பாகவே சிங்கப்பூருக்கும் தமிழர்களுக்கும் இடையே 11-13ஆம் நூற்றாண்டுகளில் தொடர்புகள் உள்ளதெனக் காண்பிக்கிறது புதியதொரு கண்காட்சி.

‘சோழமண்டலக் கரை முதல் மலாக்கா நீரிணை வரை: நம் தமிழ் மரபு குறித்த மறுபார்வை’ என்ற இந்தக் கண்காட்சி, இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியின் முதல் பாகம், பண்டைக்காலத் தென்கிழக்காசியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் நீண்ட பயணத்தைப் பற்றி அமைந்துள்ளது.

சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் தமிழ் சமூகத்தினரின் வரலாறு, கலாசாரம் பங்களிப்பு ஆகியவற்றை ஒட்டி அமைந்தது இக்கண்காட்சியின் இரண்டாம் பாகம். 19ஆம் நூற்றாண்டு முன்னோடிகளையும் சிங்கப்பூரில் வாழ்ந்துவந்த பழம்பெரும் தமிழ்க் குடும்பங்களைப் பற்றியும் இக்கண்காட்சி மக்களுக்குத் தெரிவிக்கும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் வெவ்வேறு இந்திய சமூகங்களைப் பற்றி கண்காட்சி மூலம் தெரிவித்து வந்த இந்திய மரபுடைமை நிலையம், இவ்வாண்டு முதன்முறையாக தமிழர்களின் பெருமைகளை எடுத்துரைத்துள்ளது.

இக்கண்காட்சிக்காக உலகநாடுகளின் அரும்பொருளகங்கள் தங்களின் கலைப்பொருட்களை இரவலாக கொடுத்துள்ளன.

அத்துடன் முதன்முறையாக கலைப்பொருட்களின் முப்பரிமாண ஒளிப்படங்களைக் காட்டும் மின்னிலக்கக் காட்சிகளும் இக்கண்காட்சியில் இடம்பெறுவதாக கண்காட்சியின் காப்பாளரான திருவாட்டி நளினா கோபால், 35, கூறினார்.

நடராஜர் சிற்பம்

கி.பி. 12ஆம் நூற்றாண்டு, சோழர் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த வெண்கல நடராஜர் சிற்பமும் கண்காட்சியில் இடம்பெறுகிறது. இந்துக்கள் வணங்கும் தெய்வங்களில் ஒருவரான சிவபெருமானின் தாண்டவ ரூபத்தைக் காண்பிக்கும் இதுபோன்ற வெண்கலச் சிற்பங்கள், கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்து செதுக்கப்பட்டு வந்தன. அதைத் தொடர்ந்து பல்லவர் காலத்திலும் நடராஜ சிற்பங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டன.

‘மொஹிதீன் பக்ஸ் மணி’

ஒரு கப்பல் மணியின் இந்த உடைந்த பகுதி கண்காட்சியில் இடம்பெறுகிறது. தமிழ்நாட்டில் செய்யப்பட்ட இந்த மணியில் ‘மொஹிதீன் பக்சுடைய கப்பலுடைய மணி’ எனத் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மணி 17, 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த மணி நியூசிலாந்தில் 1841ல் கண்டுபிடிக்கப்பட்டது.

மௌரி இன மக்கள் இந்த மணிப்பகுதியைச் சமைக்கும் பாத்திரமாக பயன்படுத்தியதை அங்குச் சென்ற சமயபோதகர் வில்லியம் கொலென்சோ கண்டுபிடித்தார். புயல்மழையால் வீழ்த்தப்பட்ட மரத்தின் வேருக்கடியில் இந்த மணியைத் தங்களின் முன்னோர்கள் கண்டுபிடித்ததாக அங்கிருந்த மக்கள் அவரிடம் கூறினராம்.

நியூசிலாந்தை நோக்கிச் சென்ற ‘மொஹிதீன் பக்ஸ்’ கப்பல் குறித்து எந்த ஆவணமும் இதுவரை கிட்டவில்லை.

சிங்கப்பூர்க் கல்

அவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க சின்னங்களில் சிங்கப்பூர்க் கல்லும் ஒன்று. 11ஆம் நூற்றாண்டு வரை பழமை வாய்ந்ததாகக் கூறப்படும் இந்த மர்மக் கல்லின் சில பகுதிகளைக் காட்டும் முப்பரிமாண ஒளிப் படங்கள் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கடலுடன் சிங்கப்பூர் ஆறு இணையும் பகுதியில் முன்பு இருந்த இந்தக் கல்லை பிரிட்டிஷார் வெடிக்கச்செய்ததாகக் கூறப்படுகிறது.

கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் உறுதியாக எந்த மொழிக்குரியவை என்று தெரியாவிட்டாலும் இவை ஜாவா மக்கள் பயன்படுத்திய காவி எழுத்துருக்கள் என்று வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு பல ஆண்டுகளின் ஆய்வுகளை ஒன்று திரட்டி இந்தக் கண்காட்சியைப் படைத்துள்ளதாக நளினா கூறினார்.

‘’இக்கண்காட்சிக்காக ஓர் ஆண்டுக்கு மேல் திட்டமிட்டோம். மலேசியா, இந்தியா, இந்தோனீசியா போன்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 230க்கும் மேலான கலைப்பொருள்களை இங்கு காணலாம்.

“தமிழர்கள் தங்களது அடையாளத்தைக் கண்டறிந்து பெருமை கொள்ளும் சமயம் இது. அதுமட்டுமல்லாமல், மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இக்கண்காட்சிக்கு வருவதால் தமிழர்களின் வரலாற்றை விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளாகத் துடிப்புமிக்கதாகவும் பன்முகத்தன்மை உடையதாகவும் திகழ்ந்து வருவதை அவர்கள் புரிந்துகொள்ளலாம்,” என்றார் திருவாட்டி நளினா.

நேற்று முன்தினம் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் கண்காட்சியைத் தொடங்கி வைத்ததுடன், கண்காட்சியைப் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கவிருக்கும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். 59 வயது வரையிலான வெளிநாட்டினருக்கு $6. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு $4. ஆறு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.

இதற்கிடையே இந்திய மரபுடைமை நிலையத்தின் கலாசார விழா ஐந்தாவது ஆண்டாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இரண்டு வாரயிறுதிகளில் பல அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழர்களின் ஆடை அலங்காரம், நுண்கலைகள், வரலாறு, விழாக்கள் ஆகியவற்றைக் காண்பிக்கும் நிகழ்ச்சி அம்சங்கள் இதில் இடம்பெறும்.

இன்று நேரடி கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய சமையல் வகுப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அடுத்த வாரயிறுதியில் (நவம்பர் 30ஆம் தேதியும் டிசம்பர் ஒன்றாம் தேதியும்) கைவினைப் பொருட்களைச் செய்யும் பயிலரங்கு, காப்பாளரின் வழிகாட்டலுடன் கண்காட்சி, நேரடி கலைநிகழ்ச்சி மற்றும் இசைநிகழ்ச்சிகள், தமிழர் அடையாளம் மற்றும் எதிர்கால இலக்கு தொடர்பான கலந்துரையாடல் போன்ற அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்–நி–கழ்ச்–சி–கள் குறித்து மேல் விவ–ரங்–கள் அறிந்–து–கொள்ள www.indianheritage.org.sg எனும் இணை–யப்–பக்–கத்–திற்–குச் செல்–ல–வும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!