மாணவர் நல்வாழ்வு, வெற்றிக்கு கொரோனா கற்றுத்தரும் பாடம்

சாண்ட்ரா தேவி, மூத்த கல்வித்துறை செய்தியாளர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்


சிங்கப்பூரர்களின் கல்விமுறை அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என சிலர் எண்ணினாலும், பிள்ளைகளின் பின்புலத்தைப் பொறுத்தே அவர்களது கல்வி வாய்ப்புகள், வளங்கள், ஆதரவு ஆகியவை அமைகிறது என்பதே உண்மை.

மாணவர்களுக்கு இடையிலான இந்த ஏற்றத்தாழ்வு, பள்ளிகளின் தற்காலிக மூடல், இல்லம் சார்ந்த கற்றல் ஆகியவற்றால் அதிகரித்துள்ளது.

இல்லம் சார்ந்த கற்றல் குறித்து அதிக ஆவல் காட்டும் மாணவர்கள் வசதியுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இரு பிள்ளைகளும் தங்களது பெற்றோருடன் உருவாக்கி வரும் செயலிகளைப் பற்றி ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருந்தனர்.

தமது தாயாருடன் வீட்டுக்குள்ளேயே மூலிகைத் தோட்டம் அமைப்பது பற்றி 12 வயது சிறுவன் ஒருவன் பேசிக்கொண்டிருந்தான்.

ஒரு சில மாணவர்களின் பெற்றோர், தங்களது பிள்ளைகளுக்குத் துணைப்பாட வகுப்புகளையும் கணிதப் போட்டி யையும் இணையம் வழி நடத்த பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியரை அணுகியுள்ளனர்.

வசதி குறைந்தோரின் நிலையோ முற்றிலும் வேறு. வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களில் சிலர், வேலையிழந்த பெற்றோரையும் உணவுப் பற்றாக்குறையையும் நினைத்து கவலை அடைகின்றனர்.

வேலையிழந்த தம் தந்தை, “எப்போதும் கோபித்துக்கொண்டும் தாயாரிடம் எப்போதும் கத்திக்கொண்டும் இருக்கிறார்,” என்று 10 வயது சிறுவன் தெரிவித்தான்.

அச்சிறுவனின் 12 வயது அண்ணன் அவனுக்கும் அவர்களது எட்டு வயது தங்கைக்கும் இணையம் வழி கற்றலில் உதவுகிறான்.

இத்தகைய இடைவெளிகளைக் குறைக்க நாம் என்ன செய்யலாம்? கிருமிப் பரவலால் ஏற்பட்ட நெருக்கடி நிலையிலிருந்து நாம் மீண்டு வரும்போது, கல்வியமைப்பு குறித்த கண்ணோட்டம் மாறினால் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் நலனும் வெற்றியும் அவர்களது பள்ளிக்கு அப்பாற்பட்ட சூழலையும் பொறுத்துள்ளன என்பதை இந்தக் கிருமிப்பரவல் காட்டியுள்ளது.

வசதி குறைந்த பிள்ளைகளை முன்னேற்ற நாம் அவர்களது வாழ்க்கையை முழுமையாக ஆராயவேண்டும். ஆறு வயது வரையிலான பிள்ளைகளுக்காக அரசாங்கம் உருவாக்கிய ‘கிட்ஸ்டார்ட்’ திட்டம், இந்த முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றி அவர்களது வாழ்க்கையில் நல்ல தொடக்கத்தைக் காணவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.

இந்தத் திட்டம் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படவேண்டும். அத்துடன், இந்தப் பிள்ளைகளுக்கு உதவும் சமூக ஊழியர்கள், அவர்கள் பள்ளிகளுடன் கைகோத்துச் செயல்படவேண்டும்.

ஏற்கெனவே பிள்ளைகளின் கற்றலுக்குப் பொறுப்பேற்கவேண்டிய பள்ளிகள், அவர்களது குடும்பத்தினருக்குப் போதிய உணவு கிடைக்க உதவி செய்வது, பெற்றோர்களின் வேலைப் பிரச்சினை அல்லது குடும்பத் தகராறு ஆகியவற்றையும் கவனிக்கவேண்டுமா என்பது குறித்து சிலர் கேள்வி எழுப்பலாம். எனினும் இதற்கு மாற்று வழி இல்லை.

தேவைப்படும் குடும்பங்களுக்குப் பள்ளிகளும் அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டினால்தான் அக்குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வெற்றி அடைவதற்கான வாய்ப்பு உள்ளது.

பிள்ளைகளுக்குப் பெற்றோரே முதல் பராமரிப்பாளர்கள் என்பதால் அவர்களுக்கு அளிக்கப்படும் உதவி பிள்ளைகளைச் சேரும்.

பள்ளிகளில் நலவாழ்வு அதிகாரிகளைப் பணியில் அமர்த்த கல்வியமைச்சு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. இருந்தாலும் பள்ளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வளங்கள் கொடுக்கப்படவேண்டும்.

வறுமைச் சூழலில் உள்ள பிள்ளைகளை மீட்கவேண்டும் என்றால் இத்தகைய உதவி நீண்ட காலத்திற்குச் செய்யப்படவேண்டும்.


மின்னிலக்க இடைவெளி

இணையம் வழி கற்றலுக்கான உதவிகளை எடுத்துக்கொள்வோம். பள்ளிகளின் மூடலை அரசாங்கம் அறிவித்த பின்னர் வீடு சார்ந்த கற்றலுக்கான தயாரிப்பு நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டன.

எந்த மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் ‘டேப்லெட்டு’களும் தேவைப்பட்டன, வீட்டில் அவர்களுக்குச் சரியான இணைய இணைப்புகள் உள்ளனவா என்பதைப் பள்ளிகள் ஆராயத் தொடங்கின.

ஏப்ரல் மாதத்தின் இறுதிக்குள் 1,200க்கும் அதிகமான இணையத்தொடர்புக்கான ‘ரவுட்டர்’ கருவிகளும் 20,000க்கும் மேற்பட்ட மடிக்கணினிகளும் டேப்லெட்டுகளும் பிள்ளைகளுக்கு இரவலாக கொடுக்கப்பட்டன.

இதனை நிரந்தரமாகவும் நீண்டகால அடிப்படையிலும் செயல்படுத்த வேண்டும். ஏனெனில் 21ஆம் நூற்றாண்டில் கல்விக்குத் தொழில்நுட்பம், இணையத்தள வசதியும் இன்றி அமையாதது. உலகளவில் அடுத்த நோய்ப்பரவல் வரும் வரையிலோ அல்லது தானாக நடக்கும் என்றோ விட்டுவிடக்கூடாது.

தகவலும் தொடர்புத் தொழில்நுட்பமும் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையையும் புரட்டிப்போட்டுள்ளன. சிக்கலான மின்னிலக்கத்துறையைப் பயன்படுத்த முடியாத மாணவர்களும் ஊழியர்களும் பொருளியல், சமுதாய, கலாசார வாழ்வில் முழுமையாகப் பங்குகொள்ள முடியாது. முறையான திறன்கள் இல்லாமல், இளையர்கள் எதிர்காலத்தில் வேலை தொடர்பான சவால்களைச் சமாளிக்க முடியாது.

பள்ளிகள் மூடப்பட்டபோது, அவற்றில் சில தங்கள் பிள்ளைகளுக்காக மடிகணினி பெற்றுக்கொள்ள வந்த பெற்றோருக்குப் பயிற்சி அளித்தன. அப்பொழுது, அவர்களின் பிள்ளைகள் வீட்டிலிருந்து கல்வி கற்க எவ்வாறு உதவலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

இதை மேலும் பல பள்ளிகள் தொடர்ந்து செய்ய வேண்டும். அதேவேளையில், பள்ளிகளில் வசதிகுறைந்த பிள்ளைகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவை அந்தப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வசதியாக, பள்ளிகள் திறந்தே இருந்தன. வீட்டில் படிக்கக்கூடிய வசதிகள் இல்லாத சில பிள்ளைகள் பள்ளிகளுக்குச் சென்று பயிலும் வசதியும் வழங்கப்பட்டது.

சிங்கப்பூரில் வசதிகுறைந்த குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் உதவிசெய்யக்கூடிய பல சமுதாய சேவை அமைப்புகள் உள்ளன.

இவை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுடனும் கல்வி அமைச்சுடனும் இணைந்து தங்களுக்கிடையேயான திட்டங்களை ஒன்றிணைத்து ஒருமுகப்படுத்த வேண்டும். இது மாணவர்களுக்கான பலன்களை மேலும் அதிகரிக்கும்.

மின்னிலக்க வசதி, உணவு ஒருபுறம் இருக்க, பிள்ளைகள் அவர்கள் வாழ்வில் வெற்றிபெற பெற்றோர் அவர்களை முறையாக வளர்க்க வேண்டும். இதில், பெற்றோரின் கவனிப்புக்கு ஈடுகொடுக்கும் திட்டங்களுடன், வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்குக் கிடைக்கும் சூழல்களும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பல தொடக்கப்பள்ளிகளில் உள்ள மாணவர் பராமரிப்பு நிலையங்கள் சிறந்த சேவையை ஆற்றுகின்றன. இங்கு, மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதுடன், அவர்களின் வீட்டுப் பாடத்தைக் கண்காணிப்பது போன்றவற்றுடன் மற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் மாணவர்களின் குறைகளுக்கும் செவிசாய்க்கப்படுகின்றன. இந்தப் பராமரிப்பு நிலையங்களை மேலும் அதிகரிக்கலாம்.

கொரோனா கிருமித்தொற்று காலத்தில் நாம் இவற்றையெல்லாம் மேம்படுத்த பழகிக்கொள்ளலாம். பள்ளிகளுக்கு அப்பால், பிள்ளைகளின் வாழ்விலுள்ள ஏற்றத்தாழ்வுகள் புதியவை அல்ல.

இவற்றை காலங்காலமாக கல்வியாளர்களும் சமூக அமைப்புகளும் நன்கு அறிந்துள்ளனர்.

இப்பொழுது என்ன நடந்திருக்கிறது என்றால் ஊடகங்களில் வரும் தலைப்புச் செய்திகள், இந்த உண்மை நிலவரத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. இந்த ஏற்றத்தாழ்வுகளைத் தீர்க்க அவசர நடவடிக்கை தேவை என்பதை இவை உணர்த்தியுள்ளன. சிங்கப்பூர் குடிமக்கள் அனைவரும் முழு ஆற்றலை வெளிப்படுத்தி முன்னேற வேண்டும் என்ற இலக்கை அடைய வேண்டுமானால் இதை நாம் செய்தாக வேண்டும்.

கொள்ளை நோயால் ஏற்படக்கூடிய பொருளியல் மந்தநிலை இதை அவசரகதியில் நமக்கு உணர்த்தியுள்ளது.


மேலும் செய்திகளுக்கு

தமிழ் முரசு மற்றும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கைக்கணினித் தொகுப்பு சந்தாதாரராகுங்கள்

மேல் விவரங்களுக்கு: tmsub.sg/tm

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!