மலாய் நற்பணிச் செயற்குழுவின் அறப்பணி அர்ப்பணிப்பில் தமிழர்

மக்களுக்கு சேவை புரிய இனம், சமயம், மொழி போன்றவை ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என்கிறார் தாம்சன்-மேரிமவுண்ட் மலாய் நற்பணிச் செயற்குழுவின் துணைத் தலைவராக தொண்டூழியப் பணியில் ஈடுபட்டு வரும் திரு எல்வின் தாசன், 38.

சமூகத் தொண்டராக வட்டாரவாசிகளின் மனதில் இடம்பிடித்திருக்கும் இவர், 15 ஆண்டுகளாக தொண்டூழியப் பணிகளின்வழி பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

முழுநேர சமூகப் பணியாளராக விவேகத்துடன் பணியாற்றும் திரு எல்வின், தனது நேரத்தையும் முயற்சியையும் அறப்பணிக்காக அர்ப்பணித்து உள்ளார்.

ஒரு சிங்கப்பூர் தமிழரான இவர் ஏன் மலாய் நற்பணிச் செயற்குழுவில் சேர்ந்தார் என்று கேட்டதற்கு, “இந்தக் கேள்வியைப் பலரும் என்னிடம் கேட்டனர். இதனை ஆச்சரியத்தைத் தரக்கூடிய ஒன்றாக நான் பார்க்கவில்லை. தாம்சன்-மேரிமவுண்ட் மலாய் நற்பணிச் செயற்குழுவில் என்னைத் தவிர்த்து பிற இந்திய, சீன உறுப்பினர்களும் உள்ளனர்.

“மக்களுக்கு சேவை புரியும்பொழுது இன, சமய, மொழி வேறுபாடுகளைக் கருத்தில்கொள்ளக்கூடாது. பிறருக்கு உதவும் வாய்ப்பு எந்த வகையில் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி விவேகத்துடன் செயல்படுவதே சிறந்தது. எங்களது நற்பணிச் செயற்குழு மலாய் இனத்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய, சீன மற்றும் பிற இன மக்களுக்கும் சேவையாற்றி வருகிறது,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார் திரு எல்வின்.

இவருக்கு சமூக அறப்பணியின் மீதான ஆர்வம் சிறு வயதிலேயே இருந்து வந்தது.

“எனது தந்தை ரத்த தானம் செய்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். பல்கலைக்கழக நாட்களின்போது நானும் முதல் முறையாக ரத்த தானம் செய்தேன். அதற்குப் பிறகு சமூகத்திற்கு உதவ மேலும் பல வழிகளைத் தேட தொடங்கினேன். சமூக மன்றங்களிலும் நிலையங்களிலும் தொடங்கிய எனது அறப்பணி இப்போது விரிவடைந்திருக்கிறது,” என்றார் இவர்.

கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கும் திரு எல்வின் குழுவினர் கைகொடுத்துள்ளனர்.

நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் குடும்பங்கள், உதவி தேவைப்படும் முதியோர், உடற்குறையுடையோர் என பலதரப்பட்ட குடியிருப்பாளர்களை நாடி இவரது குழுவினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

சிரமமான நேரங்களில் நிதி ஆலோசனை வழங்குவது, உணவு வழங்குவது, தகவல் தொழில்நுட்ப ஆற்றல் இல்லாதவர்கள் தொடர்ந்து இணைந்திட வழிவகுப்பது என பல அர்த்தமுள்ள நடவடிக்கைகளைச் செய்து வருகிறது திரு எல்வினின் செயற்குழு.

இவரும் இவரது குழுவினரும் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை குடியிருப்பாளர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.

உணவு வழங்குவது ஒருபுறம் இருக்க, திரு எல்வின் குழுவினர் குடியிருப்பாளர்களுக்கு நிதியுதவித் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வையும் தகவல்களையும் பகிர்ந்து அவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.

“மக்கள் எங்களை நாடி வருவதைவிட நாங்கள் அவர்களை நாடிச் சென்று உதவி புரிய முயற்சி எடுத்து வருகிறோம். பலரும் சிறந்த முறையில் உதவி பெற இந்த அணுகுமுறை வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

“சமூகத் தொண்டு புரிவதன் மூலம் பல பின்னணியைச் சேர்ந்த சமூகத்தினரைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைக்கிறது. இது என்னை ஒரு சிறந்த மனிதராக செயலாற்ற ஊக்கமளிக்கிறது,” என்றார் திரு எல்வின்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!