பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் பிரியங்கா

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது உறவினர்களையும் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. அப்போது தங்கள் சொந்த நிலத்தை காலி செய்ய மறுத்ததற்காக 10 பேர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆதரவு கூற காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநில கிழக்குப்பகுதி பொறுப்பாளரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா நேற்று முன்தினம் சென்றார். 

நாராயண்பூர் எனும் பகுதியில் பிரியங்கா காரைத் தடுத்து நிறுத்திய போலிசார் அங்குச் செல்ல அனுமதி இல்லை எனக் கூறியுள்ளனர். 

கலவரத்தில் ஈடுபட்டவர்களைச் சந்திக்காமல் போகப் போவதில்லை எனக் கூறிய பிரியங்கா காந்தியை போலிசார் விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு காங்கிரஸ் தொண்டர்களுடன் விடிய விடிய அவர் தர்ணாவில் ஈடுபட்டார். 

இதையடுத்து கலவரத்தில் பாதிக்கப்பட்ட இருவரது உறவினர்கள், விருந்தினர் விடுதிக்குச் சென்று பிரியங்காவைச் சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் வருவேன் என்றார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றார் பிரியங்கா.

இதற்கிடையே, நேற்று காலை மருத்துவமனைக்குச் சென்ற பிரியங்கா காந்தி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியங்காவைக் கைது செய்து இடையூறு தந்திருப்பது பாஜக அரசாங்கத்தின் பாதுகாப்பற்ற தன்னிச்சையான அதிகாரப் போக்கையே வெளிப்படுத்தியுள்ளதாக அவரது சகோதரர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியைத் திணிக்க பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் தமிழ்மொழியை மட்டுமல்ல தமிழகத்தையே விழுங்கிவிடுவார்கள். இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார் புதுவை முதல்வர் நாராயணசாமி.

25 Aug 2019

புதுவை முதல்வர்: விழித்திராவிடில் தமிழ்மொழியை விழுங்கிவிடுவர்