போராட்டங்களுக்கு முடிவுகட்டும் முக்கிய பொறுப்பை ஐபிஎஸ் முனிராஜுக்கு வழங்கினார் உ.பி.முதல்வர்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. 

அதிலும், அலிகர் மாவட்டம் இந்தப் போராட்டங்களில் முன்னிலை வகிக்கிறது. 

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அதேபோல, அலிகரின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தப் போராட்டங்களை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவர உ.பி மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

அதன் காரணமாக, அலிகர் மாவட்ட எஸ்.எஸ்.பி-யாக இருந்த ஆகாஷ் குலாட்டி என்பவருக்கு, டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி முனிராஜ் (படம்), அலிகர் மாவட்ட எஸ்.எஸ்.பி-யாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

முனிராஜின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்து வரும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் முக்கியப் பணியை முனிராஜுக்கு வழங்கியுள்ளார்.

முனிராஜ், உ.பி., சிறப்புக் காவல் படையான மொரதாபாத் 24வது பட்டாலியன் தளபதியாக இருந்தார்.

பத்து ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள். 12 பணி மாற்றங்கள். அதிகபட்சம் ஓர் இடத்தில் பணியாற்றியது ஒன்றரை ஆண்டு. 

குறைந்தபட்சம் பணியாற்றியது 12 மணி நேரம். பிஜேபி ஆளும் உ.பி.யில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மீதே எப்.ஐ.ஆர் போட்டு, கைதாணை பிறப்பித்தவர். 

உ.பி.யில் தாதா முதல் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் வரை அஞ்சி நடுங்கவைக்கும் ஒரே போலிஸ் அதிகாரி முனிராஜ்தான். 

இந்து, முஸ்லிம் பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டுவந்ததால் இவர் இரண்டு மதத்தைச் சார்ந்த மக்களாலும் ‘சிங்கம்’ என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.