பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய 6 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு; ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்

1 mins read
c2c5dc01-e0be-41cd-8b6e-106b5a331fd7
படம்: ஊடகம் -

பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் இன்று (டிசம்பர் 29) தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒருவருக்கு அத்தகைய புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களில் 116 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவர்களது பரிசோதனை மாதிரிகளை ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐசிஎம்ஆர்) 6 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா கிருமித்தொற்று இருப்பதை உறுதி செய்தது.

பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்குத் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உருமாறிய கொரோனா கிருமித்தொற்று கண்டவருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அத்தகைய புதிய வகை கொரோனா கிருமித்தொற்று தமிழகத்தில் பரவும் வாய்ப்பு குறைவு எனவும் திரு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்