கிறிஸ்துமஸ் மரம்

“கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் நட்சத்திரத்தை வைக்கக் கடைசி பையனைத்தான் கூப்பிடுவேன். அவன்தான் கொஞ்சம் உயரமா இருப்பான்” எஸ்தரின் முகத்தில் ஒளிரும் மகிழ்ச்சியை கன்னல் ரசித்தாள்.

தனித்தனித் தாளில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த நான்கடி உயர கிறிஸ்துமஸ் மரத்தின் பாகங்களை இணைத்ததும், அதன் இலைகளையும், கிளைகளையும் நன்கு விரித்துவிட்டார். கலர் பந்தை மாட்டியதும் பைக்குள் இருந்த ’கேண்டி’ குச்சியை வெளியே எடுத்தார். “ஓ மை காட். என் பசங்களுக்கு இதை மரத்தில் மாட்டிவைக்க சண்டை போடுவதும் அழுவதும்…” தொடர்ந்து பேசவிடாமல் தடுக்கும் கண்ணீரை ‘டிஷ்யுவால்’ ஒத்தியெடுத்தார். எஸ்தரின் சோகத்தில் தானும் கலங்குவதை வெளிக்காட்டவில்லை கன்னல்.

நான்கு மாதங்களுக்கு முன் ஒரு தொண்டூழியராக எஸ்தர் வீட்டிற்குச் சென்றிருந்தாள். தனித்து வாழும் மூத்தோர் வீடுகளைத் தேடிச் சென்று சுத்தம் செய்யும் சுய உதவிக் குழுவில் ஈராண்டுகளாகத் தொண்டூழியம் செய்து வருகிறாள் கன்னல். “தொடக்கக் கல்லூரிப் படிப்பு முடியும்வரை இதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வச்சுடு!” என்ற பெற்றோரிடம் “பிளீஸ்….. மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளில் மட்டும்தானே அவர்களுடன் போறேன். நிச்சயமா படிப்பை விட்டுடமாட்டேன்,” என்றாள். எப்பொழுதும் பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டும் மகளின் விருப்பத்திற்கு மறுப்புக் கூறவில்லை பெற்றோர்.

காமன்வெல்த் சாலையில் இருக்கும் சிலரது ஓரறை அடுக்குமாடி வீடுகளில் சுத்தம் செய்யும் வேலை முடிந்ததும் எஸ்தர் வீட்டிற்கு முதல் முறையாகச் சென்றாள் கன்னல்.

சிறிய சாப்பாட்டு மேசையும் இரண்டு நாற்காலிகளும் சுவரோடு ஒட்டியபடி கிடந்தன. அவள் சென்றிருந்த மற்ற வீடுகளைப்போலச் சாமான்கள் தரையெங்கும் கிடக்கவில்லை. அடர்த்தியான கறை படிந்த சுவரைத் தேய்க்க ஆரம்பித்தாள். அந்த வேலை முடிந்ததும் தரையில் போட்டிருந்த பாய் மீது படர்ந்திருந்த தூசியைக் கூட்டியெடுத்தாள். கைகழுவும் இடத்திற்கு அடியிலிருக்கும் குப்பைத் தொட்டிக்குள் குப்பையைப் போடுவதற்கு அதன் கதவைத் திறந்ததும் உள்ளேயிருந்து ஒரு கரப்பான்பூச்சி வெளியே ஓடி வந்தது. “அய்யோ…” என்று பயத்துடன் அங்கிருந்து நகர்ந்தாள். “நீ வச்சுடு நான் போடுறேன்,” என்ற எஸ்தரிடம் “இல்ல போட்டுட்டேன்” என்றாள் கைகளைக் கழுவியபடி. அவளுடன் சென்றிருந்த மற்றொரு தொண்டூழியரின் கைகளால் கழிவறை பளிச்சென்று சிரித்தது.

“தேங்க்ஸ் மை டியர்” என்று கனிவுடன் இருவர் நெற்றியிலும் முத்தமிட்டு மகிழ்ந்தார். கன்னலுடன் இருந்தவர் தனக்கு வேறொரு வேலை இருப்பதாகக் கூறிவிட்டுக் கிளம்பினார். சன்னலுக்கு அருகே கிடக்கும் கட்டிலில் படுத்திருப்பவரைப் பரிவுடன் பார்த்தாள் கன்னல். போர்வை விலகிக் கால் பாதம் தெரிவதைப் பார்த்துச் சரியாகப் போர்த்திவிட்டாள்.

“நேரம் கிடைக்கும்போது வந்துட்டுப் போ” நெஞ்சோடு அணைத்து எஸ்தர் கூறும்போது மறைந்துவிட்ட தன் பாட்டியை நினைத்துக்கொண்டாள். பருத்த தேகத்துடன் கைலியும், மேல் சட்டையும் அணிந்திருந்தார். “சரி….. பாட்டி!” என்றவளை உச்சிமுகர்ந்தார்.

“எங்கே அங்கிளைக் காணும்?” அவள் வாங்கி வந்திருந்த ’கறி பாப்’பை ஒரு தட்டில் வைத்து மேசை மீது வைத்தாள்.

“அதுக்கு வேல. பாவம் என்ன மாதிரி அதுக்கும் யாருமில்ல.”’கறி பாப்’பை வாய் மென்றது.

“அவரு உங்க மகன் இல்லையா?” ஆச்சரியத்துடன் கண்கள் விரிந்தன.

“இல்ல” என்றவரின் கண்கள் சட்டென்று ஈரமாகியது. அதைச் சற்றும் எதிர்பார்க்காத கன்னல் மெல்ல அவரின் தோளில் தட்டிக் கொடுத்தாள்.

“எனக்கு மூணு பசங்க இருந்தும், அவங்களைப் பிரிஞ்சு இருபது வருசத்துக்கு மேல ஓடிட்டு.”

“என்ன இருபது வருடங்களுக்கு மேலா?” துணுக்குற்றவள் எஸ்தரின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். நாற்காலியில் அமர்ந்திருந்தவர் மெல்ல எழுந்து சென்று படுக்கையில் கால்களை நீட்டிவிட்டார். கன்னல் நாற்காலியை அவருக்குப் பக்கமாக நகர்த்தினாள். சாளரம் வழியே தெரியும் கருமை படர்ந்திருக்கும் வானத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டார் எஸ்தர்.

“இராப்பகலா தோ பாயோவில இருந்த ஒரு தொழிற்சாலையில என் வீட்டுக்காரரும், நானும் வேலை பார்த்தோம். எங்க மூணு பசங்களையும் நல்லபடியா படிக்க வச்சோம். என் வீட்டுக்காரருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது.

ஞாயிற்றுக்கிழமைகளில் ’நொவீனா’ தேவாலய வழிபாட்டைத் தவறவிடமாட்டார். ஏசுவின் கருணையால பெரியவன் படிச்சு முடிச்சதும் வேலைக்குப் போக ஆரம்பிச்சான். ஒரு வருசத்துக்குள்ள எங்கச் சொந்தக்காரப் பெண்ணை அவனுக்குக் கல்யாணம் முடிச்சு வச்சோம். ஏழு மாசம் வரைக்கும் ஒரு பிரச்சினையும் இல்லாமத்தான் இருந்தது. ஒருநாளு மனைவி கூட படம் பார்த்துட்டு ரொம்ப லேட்டா வீட்டுக்கு வந்தான்.

“இனிமே இப்படி நடந்துக்காதேனு ஒரு வார்த்தைதான், அதுவும் தன்மையாகத்தான் சொன்னாரு” மௌனம் துன்பத்தைத் தாலாட்டியது.

“அப்புறம் என்ன ஆச்சு?”

“அவனுக்கு எப்பவும் மூக்குமேல கோபம் வரும். அப்படித்தான் செய்வேனு” குரலை மட்டும் உயர்த்தி பேசல்ல. அதையே சண்டையா மாத்தி மனைவியுடன் கிளம்பிட்டான். கை, காலை பிடிச்சு மன்றாடினேன். “தெரியாம சொல்லிட்டேன். மன்னிச்சுடுனு அவங்க அப்பா சொன்னாரு” எதையும் கேட்காமல் “இனி உங்க முகத்துல முழிக்க மாட்டேனு போய்ட்டான்” மறுநாளே ஓர் ஆளை அனுப்பி அவன் வாங்கியிருந்த பெரிய கலர் டிவியையும் எடுத்துக்கிட்டான். டிவி என்ன டிவி புள்ளையே வீட்டைவிட்டுப் போயிட்டான். அழுதுகிட்டே கிடந்தேன். அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மீண்டு வரும்போது மெல்லிய விசும்பல் கேட்டது, “அழாதீங்க” என்றாள் கன்னல்.

“இரண்டாவது பையன். உடன் வேலை பார்க்கும் வேறு இனப் பெண்ணைத்தான் கட்டிக்கப் போறேன்னு கண்டிஷனா சொன்னான். அதைக் கேட்டதும் மார்பைப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்தவர்தான் கடைசிவரை ஒரு நோயாளியாகவே இருந்துட்டுப் போயிட்டார்.” கண்ணீரை உறிஞ்சிய ‘டிஷ்யுவை’ மேசை மீதிருக்கும் நெகிழிப் பைக்குள் வைத்தார். “அவங்க அப்பா இறந்த செய்தியைக் கேட்டுட்டுக் குடும்பத்தோட வந்தவங்க அவருடைய நாற்பதாம் நாளு பூசைக்கு வரவேயில்ல” உருக்கத்துடன் ஜெபம் செய்து கொண்டிருந்தார்.

“உங்க மூணாவது பையன்?”

“அவனா? வெளியூரில் படிக்கப் போறேன்னு போனான். எப்படியும் மாசத்துக்கு ஒருதரம் அழைச்சுப் பேசிக்கிட்டுத்தான் இருந்தான். அதற்கு அப்புறம் ரெண்டு வருசமா கூப்பிடுறதே இல்ல. அவனுக்கு என்ன ஆச்சோன்னு தவிச்சுக்கிட்டு இருந்தேன். தெரிஞ்சவங்க மூலமா செய்தி வந்தது, சிங்கப்பூருக்குத் திரும்பி வர விருப்பமில்லையாம். அங்கேயே இருக்கப் போறானாம். “ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமேனு” புலம்பி அழுதுகிட்டே கிடந்தேன். அப்படியே கிடக்க முடியுமா? என் வீட்டுக்காரருக்கு மருந்து மாத்திரை வாங்க காசு வேணுமே. நான் பெத்த பிள்ளைங்க எங்க இருந்தாலும் நல்லா இருந்தா சரிதான்னு மனச தேத்திக்கிட்டு பழையபடி வேலைக்குப்போக ஆரம்பிச்சேன்.” அவரின் கைகளை வாஞ்சையுடன் வருடினாள் கன்னல்.

“இயேசு மக்களுக்கு நன்மையை மட்டுமே போதித்தார். ஆனா, இயேசுவைச் சாத்தான்கள் சிலுவையைச் சுமக்க வைச்சாங்க. அந்தக் கொடுமையை நினைச்சதும் எனக்கு நடந்ததெல்லாம் துன்பமே இல்லனு சமாதானமாகிடுவேன்.” சில கணங்களை மௌனம் விழுங்கியது.

“வேலை பார்த்து வந்த தொழிற்சாலையையும் இழுத்து மூடிட்டாங்க. எதோ கையில இருந்ததை வச்சு காலத்தை ஓட்டினேன். அப்போதான் கூட்டாளி ஒருத்தி அவ சாப்பாட்டுக் கடையில வேல பார்க்கக் கூப்பிட்டா. காலையில போனா ராத்திரி பத்து மணியாகிடும். தட்டுகளைக் கழுவிப் போட்டேன். கூட்டிப் பெருக்கினேன். அங்கேயே சாப்பிட்டுக்கிட்டேன். அதற்கு அப்புறமா ‘என்.டி.யூ.சி.’யில வேலைக்குப் போயிட்டுயிருந்தேன். அப்போதான் சர்க்கரை நோயோட கொலஸ்ட்ராலும் சேர்ந்து வந்துடுச்சு. ரொம்ப நேரம் நின்னு வேல பார்க்கச் சிரமமா இருந்தாலும் போயிட்டு இருந்தேன். என்ன செய்றது பசி எடுக்குதே,” என்று நிறுத்தியவர் எதையோ யோசித்தார்.

“இந்த வயசுலேயும் கர்த்தர் கருணையாலதான் நல்லா இருக்கேன். அதோட நம்ம ஊருல, வயசானவங்களுக்கு நல்லாவே செய்றாங்க,” சிலுவை போட்டுவிட்டுக் கழுத்தில் தொங்கும் இயேசுவை முத்தமிட்டு மகிழ்ந்தார்.

“இங்க அறைக்குள்ளேயே அடஞ்சு கிடக்காம பெரும்பாலான நேரத்தை ’நொவீனா” தேவாலயத்துலதான் செலவழிச்சேன். கடவுளிடம் மனமுருகி வேண்டவும், பாதிரியாரிடம் மனக்குறைகளைச் சொல்லி அழவும் செய்வேன். ஆண்டவருக்குத் தொண்டு செய்ய ஒரு வாய்ப்புக் கொடுத்தாரு. பாதிரியின் கருணையால ஆண்டவரின் கிருபையால திருவிழாக்களோடு ஞாயிறு பூசைகளிலும் ’பைபிள்’ வாசிக்கிற குழுவில் இருக்கிறேன்.” எஸ்தர் தண்ணீர் அருந்துவதைப் பார்த்ததும் கன்னல் தனது பைக்குள் இருந்த தண்ணீர்ப் போத்தலை வெளியே எடுத்துத் தானும் அருந்தினாள்.

“அப்படினா அவர் யாரு?” கட்டிலைக் காட்டினாள்.

“அவனை ’நொவீனா’விலதான் சந்திச்சேன். தேவனை வணங்கியதும் அங்கிருக்கிற பூங்காவில் உட்கார்ந்திருப்பேன். செடி கொடிகளிலிருந்து வீசும் தூய்மையான காற்றை சுவாசிக்கும்போது இதமாயிருக்கும். அப்படித்தான் இரண்டு வருசத்துக்கு முன்னால டேவிட்டை பார்த்தேன். எப்பவும் சோக முகத்தோட மாதா முன்னால மண்டியிட்டு வணங்குவதைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். ஒருநாளு “தம்பி என்ன நடந்தது?” என்று கேட்டதும் ஒரே அழுகை. அவனைத் தேற்றி விசாரிக்கும்போது வேலை இடத்துல பிரச்சினைன்னு சொன்னான். அப்புறமா தான் காதலிச்ச பெண் வேறொருவரை மணந்துக்கிட்டான்னு சொல்லி ஒப்பாரி வைச்சான். அவ வேறொருவனைக் கல்யாணம் கட்டி அழகா குடும்பம் நடத்துற மாதிரி நீயும் ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கன்னு ஆறுதலா பேசி அழுகையை நிறுத்தினேன். அவளைத் தவிர வேறொரு பெண்ணுடன் திருமணக் கோலத்தில் தேவாலயத்துக்குள்ள நடந்து வரமாட்டேன்னு ஐம்பது வயசுல இருக்கிறவன் சொல்லிட்டான். “சரி உன் விருப்பம்னு சொல்லிட்டு வந்துட்டேன். நாலு மாசத்துக்கு அப்புறம் மீண்டும் அவனைப் பார்த்தேன். அதே அழுது வடியும் முகத்தோடு இருந்தான்.

“இப்ப என்ன ஆச்சுன்னு கேட்டேன். அவன் அம்மாவோட கேலாங் பாருவில் இருந்திருக்கிறான். இந்த வீடு மாதிரி அதுவும் முதியோர்களுக்காக கொடுக்கப்பட்ட சிறிய வீடு. அம்மா இறந்ததும் வீட்டைக் காலி செய்யச் சொல்லிட்டாங்க, யாரும் தங்க இடம் தரல்ல. எங்கப் போறதுனு தெரியாம புளோக் அடியில தூங்கிட்டு இருக்கேன்னு சொன்னான்.” விறுவிறுவென்று கூறியவருக்கு மூச்சு வாங்கியதும் நிறுத்திவிட்டு சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தார். “இங்க என்னோட இருந்த அம்மணி சிரம்பானில் இருக்கும் அவ மகன் வீட்டோட போயிட்டா. பெத்த பிள்ள மாதிரி என் கூடவே இருக்கிறான்னு வீடமைப்புக் கழகத்துக் கிட்ட அனுமதி கேட்டு தங்க வச்சு இருக்கேன். தண்ணிக் காசும் கரண்டுக் காசும் கட்டிடுறான். முடிஞ்சா எதையாவது சமைச்சு வப்பேன். வந்து சாப்பிடுவான்,” என்றார்.

சுவரில் மாட்டியிருக்கும் கனிவான இயேசு எஸ்தரைப் பார்த்துச் சிரித்தபடி இருந்தார். கன்னல் அவரின் பரிவு பாசத்தால் நெகிழ்வுடன் அமர்ந்திருந்தாள். கைப்பேசியில் அன்னை அனுப்பியிருந்த வாட்ஸ் அப்-பை பார்த்ததும் விரைவில் வருவதாகப் பதில் அனுப்பினாள்.

அப்போது அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தில் மாட்டியிருக்கும் கேண்டி குச்சி, கலர் பந்தொன்று ஒவ்வொரு பொருளையும் கண் கலங்கியபடி தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார் எஸ்தர். பிள்ளைகள் தன்னை விட்டுச் சென்றதும் கிறிஸ்துமஸ் திருநாளில் மரம் வைத்து அலங்கரிப்பதை விட்டுவிட்டார். தேவாலயத்தில் கிறிஸ்துமசை கொண்டாடுவதோடு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் மரத்தைப் பார்த்துப் பூரிப்போடு சிலுவை போட்டுக்கொள்வார்.

ஆனால், இன்று கன்னலுடன் அவரும் சேர்ந்து அலங்கரித்த கிறிஸ்துமஸ் மரத்தை நெருக்கமாக அணைத்து முத்தமிட்டார். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தவள் எதுவும் பேசவில்லை.

கைச்செலவுக்குப் பெற்றோர் கொடுத்திருந்த பணத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பினாள். நான்கடி உயரத்தில் உள்ள ஒரு மரத்தை ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் கொடுத்திருந்தாள். அதை அலங்கரிக்கத் தேவையான பொருள்களை வாங்குவதற்குப் பெற்றோர் உதவினார்கள்.

அலங்காரம் செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தை மேசையின் நடுவில் நகர்த்தி வைத்து அழகு பார்த்தார். அதையே பார்த்துப் பார்த்து மெய் சிலிர்த்தவரின் கண்களைக் கண்ணீர் நிறைத்தது. “இயேசு சொன்னதைத்தான் நீ செஞ்சு இருக்கே. ஒரு மனிதன்தான் இன்னொரு மனிதனுக்கு உதவ முடியும், உன்னை மாதிரி!” என அன்புடன் அரவணைத்தார். “தேவனின் கருணை உன்னுடன் இருக்கும்,” என்றவர் கன்னலிடம் ஒரு சிறிய பரிசை நீட்டினார். ஆச்சரியத்துடன் பெற்றுக்கொண்டவள் உடனே பரிசைச் சுற்றியிருந்த கலர் தாளைப் பிரித்துப் பார்த்தாள். சிறிய கண்ணாடி கிண்ணத்திற்குள் சாவி கொடுத்தால் சுழலும் கிறிஸ்துமஸ் மரம் இருந்தது. “வாவ்….” என்றபடி அதையே கூர்ந்து பார்த்தாள்.

“அப்போ எனக்கு பதிமூணு வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அந்த வருடம் வந்த கிறிஸ்துமஸ்க்கு வீட்டுல மரம் வக்கல்ல. ஏன் மரம் இல்லனு கேட்டு அழுதேன். நாங்க இருந்தது சாங்கி வட்டாரம். கிறிஸ்துமஸ்க்கு முன்னால பெய்த மழை எங்க அத்தாப்பு வீட்டையும் சாமான்களையும் சேதம் பண்ணிடுச்சு. உடனே புதுசா மரம் வாங்க பணம் இல்லனு அப்பா வருத்தமா சொன்னாரு. எனக்கும் நடந்தது எல்லாம் தெரிந்திருந்தும் எதைப்பத்தியும் கவலப்படாம கிறிஸ்துமஸ்க்கு மரம் இல்லன்னா சாப்பிடமாட்டேன்னு சொல்லி அழுதேன். பாவம் அப்பா. பத்து பிள்ளைங்க, அம்மான்னு எல்லாருக்கும் மூணு வேள சாப்பாடு கொடுப்பதே பெரிய விசயம். “உனக்கு மட்டும் என்ன இப்படியொரு அடம்?” என்று அம்மா திட்டினார். “பரவாயில்ல அவள விடு”னு அப்பா கூறினார். கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் ’சான்டா கிளாஸ்’ அனுப்பியதுனு இத கொடுத்துச் சிரிக்க வைச்சார். அப்பா நினைவா பத்திரமா வச்சுருக்கேன். மனசு சங்கடப்படும்போது இத எடுத்து பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும். என் பசங்களுக்குக்கூட இதத் தர நினைச்சது கிடையாது. ஆனா, உன் அன்புக்கு இதவிட வேற எதையும் வாங்கிக் கொடுக்க நினைக்க....” நா தழுதழுத்தது.

“நீங்க எதையும் நினைக்காதீங்க. எனக்குப் பிடிச்சு இருக்கு.” துள்ளலுடன் கூறினாள்.

“அறியாத வயசுல அப்பாவைப் படுத்தியதுதான் இப்போ நானும்… கன்னங்கள் நனைந்தன.

அப்போது கண்ணாடிக் கிண்ணத்தின் சாவியை முடிந்தவரை முடுக்கிவிட்டாள். அது ஒலிக்கவில்லை. மீண்டும் ஓரிரு முறை முயற்சி செய்ததும் ’கிறிஸ்துமஸ்’ மெட்டு ஒலிக்க ஆரம்பித்ததும் கிறிஸ்துமஸ் மரம் சுழல ஆரம்பித்தது. கன்னல் கைதட்டி ஆரவாரம் செய்தாள்.

“வி விஷ் யூ மெரி ’கிறிஸ்மஸ்’” மென்மையாக ஒலித்தது.

எஸ்தர் அவருக்கு எதிரே இருக்கும் சுவரில் புன்னகைக்கும் இயேசுவின் படத்தைப் பார்த்து “நன்றி தேவா!” என்றவர் கண்ணீரோடு கன்னலை கட்டி அணைத்தார்.

“வி விஷ் யூ மெரி கிறிஸ்மஸ்” இரண்டொரு நிமிடங்களில் நின்றதும் மீண்டும் சாவியை முடுக்கினாள். அது இசைக்கவில்லை.

“புது பேட்டரி போடணும்” பைக்குள்ளிருந்து பணத்தை எடுத்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.

எஸ்தர் கண்களை மூடி கைகளை இணைத்தபடி இயேசுவைப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

மலையரசி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!