உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முதல்படி

வாரத்தில் ஆறு நாட்கள் பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார் 62 வயது திருவாட்டி ந.கி.கிருஷ்ணவேணி.
இரவு நேர வேலை என்பதால் வீடு திரும்பியதும் ஓய்வு எடுத்து வீட்டுப் பணிகளைச் செய்து விட்டு மறுபடியும் வேலைக்குத் திரும்புவது இவரின் இயல்பு வாழ்க்கை.

தம் மூன்று பிள்ளைகளும் திருமணமாகி இல்லற வாழ்க்கையைத் தொடங்கிவிட்டனர். 
ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களையும் பேரப்பிள்ளைகளை­யும் திருவாட்டி வேணி சந்திப்பார்.

சில மாதங்களுக்கு முன், இவர் வீட்டில் இருக்கும் சமயம் பார்த்து, மூத்தோர் தலைமுறை (Silver Generation) அலுவலகத் தொண்டூழியர்கள் இவரது அடுக்குமாடி வீட்டிற்கு வருகை புரிந்திருந்தனர்.

அரசாங்கக் கொள்கைகளை மூத்தோருக்கு விளக்குவது, சுகாதார சேவைகளையும் நடவடிக்கைகளை­யும் அவர்களுக்குப் பரிந்துரைப்பது, நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு உதவுவது போன்றவற்றில் இத்தொண்டூழியர்கள் ஈடுபடுகின்றனர். 

வீட்டிற்கு வந்த தொண்டூழியர்கள் திருவாட்டி வேணியின் நலத்தை விசாரித்தனர். கண் பார்வை சற்று மங்கலாக இருக்கிறது, வாயின் கீழ் பகுதியில் வலி இருப்பதாகவும் அவர் தொண்டூழியர்களிடம் சொன்னார்.

திருவாட்டி வேணி சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனைக்குச் செல்ல பரிந்துரைத்தனர் அந்தத் தொண்டூழியர்கள்.

பரிசோதனை நடத்தப்படும் விஸ்மா கேலாங் சிராய் இடம் அவர் வசிக்கும் வட்டாரத்தில்தான் உள்ளது. 

‘‘பரிசோதனைக்குச் செல்ல முதலில் சற்று தயக்கமாகத்தான்  இருந்தது. ஏனென்றால் இதுபோன்ற சோதனைகளுக்குச் சென்ற பழக்கம் இல்லை.

அதோடு, பரிசோதனையால் உடலுக்கு ஏதாவது வலி வருமோ என்ற ஐயமும் இருந்தது. இருப்பினும், உடல் நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதிகொண்டிருந்தேன், என் நண்பரையும் இதற்கு அழைத்துச் சென்றேன்,’’ எனக் கூறினார் திருவாட்டி வேணி.

சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனையில் அவரின் கண், காது, பற்கள் சோதிக்கப்பட்டன.
தம் ஐயத்தைப் போக்கும் விதத்தில் எவ்வித வலியையும் அவர் அனுபவிக்கவில்லை என்று குறிப்பிட்ட திருவாட்டி வேணி, தம்மை சோதித்த மருத்துவ நிபுணர்கள் பக்குவமாக அவரிடம் பரிசோதனை முடிவுகளை விளக்கினர் என்று தெரிவித்தார். 
பரிசோதனைக்குப் பிறகு, டான் டோக் செங் மருத்துவமனையின் ‘மொபைல் ஹியரிங்’ (Mobile hearing) பேருந்தில் அடுத்தகட்ட பரிசோதனைக்குச் செல்ல அவர் பரிந்துரைக்கப்பட்டார்.

அதே மருத்துவமனையில் கண், பல் மருத்துவர்களைப் பார்த்து தம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
ஒரே கூரையில் மூன்று பரிசோதனைகளுக்கும் சென்று மிகக் குறைவான கட்டணம் செலுத்தினார் திருவாட்டி வேணி.

முன்னோடித் தலைமுறைத் திட்ட அட்டை வைத்திருப்போருக்கு இந்தப் பரிசோதனை இலவசம். 
‘சாஸ்’ அட்டை வைத்திருப்போர் $2 கட்டணமும் மற்ற தகுதிபெறும் குடிமக்கள் $5 கட்டணமும் மட்டும்தான் செலுத்த வேண்டியிருக்கும். 
தற்போது திருவாட்டி வேணி டான் டோக் செங் மருத்துவமனையில் இதன் தொடர்பில் மேற்கொண்ட பரிசோதனைகளுக்குச் சென்று வருகிறார்.

தமது ‘மெர்டேக்கா’ தலைமுறை திட்ட அட்டையைப் பெறவிருக்கும் திருவாட்டி வேணி, சில பரிந்துரைக்கப்படும் பரிசோதனைகளுக்கு $2 கட்டணம்தான் செலுத்துவதாக இருக்கும். 
‘‘முதுமைக் காலத்தில் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறேன். தொடர்ந்து வேலை செய்வது என் எண்ணம். ஆதலால் உடல் நலத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதனை உடனடியாக சரிசெய்ய கடப்பாடு கொண்டுள்ளேன்,’’ என்றார் திருவாட்டி வேணி. 
திருவாட்டி வேணியைப் போல் 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட அனைத்து சிங்கப்பூரர்களும் சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனைக்குப் பதிந்துகொண்டு பயன்பெறலாம்.
முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெள்ளித்திரைத் திட்டம் என்ற இந்த தேசிய அளவிலான சமூக சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனைத் திட்டம் அறிமுகம் கண்டது.

வயது தொடர்பான செயலாற்றல் சரிவை முன்கூட்டியே கண்டறிவது திட்டத்தின் நோக்கமாகும். 
இவ்வாறு செய்யும்போது முதுமைக் காலத்தில், தொடர்ந்து தரமான வாழ்க்கையை மூத்தோர் அனுபவிக்க முடிகிறது.

தாமதம் வேண்டாம், செயலில் இறங்குங்கள்

வெள்ளித்திரைத் திட்டத்தின் கீழ் உங்கள் வீடமைப்புப் பேட்டையில் நடத்தப்படும் சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனைக்குச் செல்லுங்கள். 
www.projectsilverscreen.sg எனும் இணையத் தளம் மூலமாகவோ அல்லது 1800-650-6060 எனும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தொலைபேசி (AIC hotline) எண் வழியாகவோ விவரம் பெறலாம். 
வார நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரையிலும் சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நீங்கள் மேல்வரும் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். பொது விடுமுறைகளில் தொலைபேசி சேவை இயங்காது.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!