சரவாக்-சிங்கப்பூர் நல்லுறவு மறுஉறுதி

மலேசியாவிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் நேற்று சரவாக் தலைநகரான குச்சிங்கைச் சென்றடைந்தார். அங்கு அவர் சரவாக் முதல்வர் டாக்டர் அபாங் அப்துல் ரஹ்மான் ஜொஹாரியைச் சந்தித்துப் பேசினார். சிங்கப்பூருக்கும் சரவாக்கிற்கும் உள்ள நல்லுறவை இருவரும் மறுஉறுதி செய்துகொண்டனர்.

சுற்றுப்பயணம், கல்வி, மின்னிலக்கப் பொருளியல் போன்ற துறைகளில் தொடர்ந்து இணைந்து செயல்பட இருவரும் இணக்கம் தெரிவித்தனர். சரவாக் மாநிலத்தின் ஆளுநர் அப்துல் தயீப் மஹ்முட்டையும் துணைப் பிரதமர் டியோ சந்தித்தார். மலேசியாவும் வட்டார நாடுகளும் கண்டு வரும் வளர்ச்சி குறித்து இருவரும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர். இன்று சரவாக்கைச் சேர்ந்த முக்கிய வர்த்தகர்களை திரு டியோ சந்திக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் சாபா மாநிலத் தலைநகரமான கோத்தா கினபாலுவுக்குப் புறப்படுகிறார்.