தேசிய சேவையின்போது காயமடைந்த உள்ளூர் நடிகரின் நிலை மேலும் மோசம்

தேசிய சேவையின்போது காயமடைந்த உள்ளூர் தொலைக்காட்சி நடிகர் அலோய்ஷியஸ் பாங் வெய் சியோங்கின் நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு மற்றுமோர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

நியூசிலாந்தில் ராணுவப் பயிற்சியின்போது காயமடைந்த 28 வயது ‘கார்பரல் ஃபர்ஸ்ட் கிளாஸ்’ (சிஎஃப்சி) பாங்கின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. அவர் இப்போது நியூசிலாந்திலுள்ள வைக்காட்டோ மருத்துவமனையில் இருக்கிறார்.

‘சிஎஃப்சி’ பாங்கிற்குச் சிறப்பான பராமரிப்பை வழங்க டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் டியோ லி சர்ங், நியூசிலாந்து மருத்துவக் குழுவுடன் பணியாற்றுவார் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. 

இதற்கிடையே அலோய்‌ஷியசின் நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் ஆகியவை செயலிழந்துவிட்டதால் அவற்றுக்குச் செயற்கை செயல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

தன்னுரிமை நடிகராகப் பணிபுரியும் அலோய்‌ஷியசை ‘நூன்டாக்மீடியா’ நிறுவனம் நிர்வகிக்கிறது. மீடியாகார்ப் நிறுவனத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பணியாற்றியுள்ளார்.