பொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் மேலும் கடுமையான தண்டனை

பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் வாகன ஓட்டுநர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை மேலும் கடுமையாக்கப்பட உள்ளது. சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் முன்மொழியப்படும் மாற்றங்களின்படி, இவ்வாறு நடந்துகொள்வோருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

போக்குவரத்துக் குற்றங்களின்கீழ் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவாக ஓட்டுவது என்ற இரண்டு புதிய பிரிவுகள் உருவாக்கப்படும் என்று உள்துறை அமைச்சு இன்று தெரிவித்தது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டும் குற்றவாளி அவர் ஓட்டிய விதத்தைக் கொண்டு அவரது குற்றம் எந்தப் பிரிவில் சேர்க்கப்படும் என்பது நிர்ணயிக்கப்படும். மிதமிஞ்சிய வேகத்தில் ஓட்டுநர் சென்றாரா, அருகில் செல்லும் வாகனத்துடன் மிக நெருக்கமாக தனது வாகனத்தை ஓட்டினாரா, வாகன ஓட்டுநருக்குத் தூக்க பற்றாக்குறையா, பாதுகாப்பாக ஓட்டக்கூடிய நிலையில் இருக்கிறாரா அல்லது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரத்தில் அவ்வாறு நடந்துகொள்ளாமல் இருந்தாரா உள்ளிட்ட விவரங்கள் கருத்தில் கொள்ளப்படும்.

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் அடங்கும் இந்த இரண்டு புதிய குற்றங்கள், குற்றவியல் சட்டத்தின்கீழ் அடங்கும் முன்யோசனையின்றி செய்யப்படும் குற்றத்தையும் கவனக்குறைவால் செய்யப்படும் குற்றத்தையும் போல இருக்கும். மேலும், குற்றத்தின் கடுமை நான்கு பிரிவுகளாகக் பிரிக்கப்படும். மரணம், கடுமையான காயம், காயம், உயிருக்கு ஆபத்து விளைவித்தல் ஆகியவை அந்தப் பிரிவுகள். 

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து, ஆபத்தான முறையில் ஓட்டிய குற்றத்திற்காக அதிகபட்சமான சிறைத்தண்டனை காலம் ஐந்து ஆண்டிலிருந்து எட்டு ஆண்டுக்கு அதிகரிக்கப்படலாம். மரணம் அல்லது கவலைக்கிடமான காயம் விளைவித்த குற்றவாளிகளுக்குக் குறைந்தது ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். அந்தக் குற்றத்தை மறுபடியும் புரிவோருக்கான சிறைத்தண்டனை இரட்டிப்பாக்கப்படலாம்.

மேலும், இத்தகைய குற்றவாளிகள் வாகனமோட்ட குறைந்தது எட்டு ஆண்டுகளுக்குத் தடை செய்யப்படுவர். கவனக்குறைவாக ஓட்டும் குற்றவாளிகள் முதல் குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையை எதிர்நோக்குவர். மறுபடியும் இந்தக் குற்றத்தைப் புரிவோருக்கு தண்டனை மேலும் கடுமையாக்கப்படும்.

“வாகனத்தை ஓட்டுவதால் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று ஏற்கெனவே தெரிந்திருக்கும் ஓட்டுநர்கள் அதிக பொறுப்புடனும் அக்கறையுடனும் நடந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் தண்டனைகள் அதிகம் கடுமையாக்கப்பட்டுள்ளன,” என்று உள்துறை அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்தது. 

போதைப்பொருள், மதுபானம் ஆகியவற்றை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் கூடுதல் தண்டனையை எதிர்நோக்குவர்.

அண்மைய ஆண்டுகளில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் ஓட்டுநர்களைப் பற்றிய புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து உள்துறை அமைச்சின் குற்றத்தடுப்பு முயற்சிகள் அதிகரித்துள்ளன.