அமெரிக்க நீதிமன்றத்தில் புரோச்செஸ் அடுத்த மாதம் விசாரிக்கப்படுவார்

சிங்கப்பூரிலிருந்து பத்திரங்களைத் திருடியது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளை மிக்கி ஃபெரேரா புரோச்செஸ் மறுத்துள்ளார். சிங்கப்பூரின் எச்ஐவி தரவுத்தளத்திலிருந்து தகவல் கசிந்த சம்பவத்துடன் தொடர்புடைய புரோச்செஸ் அமெரிக்காவின் கென்டாக்கி மாநில நீதிமன்றத்தில் இவ்வாறு கூறினார்.

நீதிமன்றம் அவரது வழக்கை  மே 7ஆம் தேதி விசாரிக்கும். இந்த விசாரணை கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று அமெரிக்காவின் அரசாங்க வழக்கறிஞர் டிமிட்ரி ஸ்லாவின் தெரிவித்தார்.

எச்ஐவி தரவுத்தளத்திலிருந்து நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததற்கு புரோச்செஸ் காரணம் என்று சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு ஜனவரி மாதம் தெரிவித்தது. மோசடி, போதைப்பொருள் குற்றங்களுக்காக சிங்கப்பூரில் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னர், புரோச்செஸ் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். 

சிங்கப்பூர் அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது, எச்ஐவி தரவுத்தளத்திலுள்ள விவரங்களை வெளியிடப்போவதாக மிரட்டும் மின்னஞ்சல்களை அனுப்பியது ஆகியவற்றின் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் புரோச்செஸ் மீது சுமத்தப்பட்டுள்ளன. அடையாளப் பத்திரங்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததாக அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டும் உள்ளது.

இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் 250,000 டாலர் அபராதமும் அவருக்கு விதிக்கப்படலாம்.