மரணம் விளைவிக்கும்  ஓட்டுநருக்கு கடும் தண்டனை

பொறுப்பற்ற முறையிலோ மற்ற வர்களுக்கு ஆபத்தை விளைவிக் கக்கூடிய வகையிலோ வாகனம் ஓட்டுபவர்களுக்கு தண்டனை அதிகரிக்கப்படவுள்ளது. குறிப்பாக மரணம் அல்லது கடுமையான காயங்கள் விளைவித்தால் கடுமையான தண்டனையை எதிர்நோக்கக்கூடும். மீண்டும் மீண்டும் குற்றம் புரியும் வாகன ஓட்டுநர்கள் கூடிய சீக்கிரம் வாகனம் ஓட்டும் உரிமையை இழப்பதுடன் நீண்ட காலத்துக்கு வாகனம் ஓட்ட அவர்களுக்குத் தடைவிதிக்கப்படலாம் என்று உள்துறை இரண்டாம் அமைச்சரான திருவாட்டி ஜோசஃபின் டியோ நேற்று நாடாளுமன்றத்தில் அறி வித்துள்ளார்.

தண்டனையின்போது அதி காரிகள் எதையெல்லாம் கருத் தில் கொள்வார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்களை சாலைப் போக்குவரத்து திருத்த மசோதாவின்  இரண்டாவது வாசிப்பின்போது அமைச்சர் முன்வைத்தார். திருத்தப்பட்ட சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ், எத்தகைய சூழ்நிலை களில் நீதிமன்றங்களுக்கும் போக்குவரத்து போலிசுக்கும் அதிகாரம் வழங்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார். 

புதிய சட்ட திருத்தத்தின்படி, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் குற்றங்களை அதிகாரிகள் அபாயகரமாக ஓட்டுவது, பொறுப்பற்ற முறையில் ஓட்டுவது என இரு பிரிவுகளின்கீழ் வகைப்படுத்துவர். இந்தக் குற்றங்கள் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதைப் பொறுத்து தண்டனை இடம்பெறும். இதில், மரணம் விளைவிப்பது, கடுமையான காயங்கள் விளைவிப்பது, உயிரைப் பறிக்கக்கூடிய அளவுக்குக் காயங்கள் ஏற்படுத்துவது போன்ற குற்றங்களுக்கு தண்டனை அதிகமாக இருக்கும்.

(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

இந்த இரு பிரிவுகள் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டு வேறுபடுத்தப்படும். முதலாவதாக, ஓட்டுநர் மற்றவர்களை அபாயத்துக்கு உள்ளாக்கும் விதத்தில் அல்லது அவர்கள் பதில் நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு வாகனத்தை ஓட்டுவது முக்கிய அம்சமாகக் கருதப்படும். உதாரணமாக வாகனப் போக்குவரத்துக்கு எதிரான திசையில் வாகனத்தை ஓட்டுவது, அல்லது ஒரு தடத்திலிருந்து இன்னொரு தடத்துக்கு எவ்வித முன்னெச் சரிக்கையுமின்றி மாறுவது.இரண்டாவது, எந்தவகையி லும் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டக்கூடிய நிலையில் இல்லை என்று தெரிந்தும் வாகனம் ஓட்டுவது. உதாரணமாக, தொலைபேசியில் பேசிக்கொண்டு அல்லது தூரத்துப் பார்வை சரியில்லாத போதும் மூக்குக்கண்ணாடி அணியாமல் ஓட்டுவது போன் றவை ஆபத்தான போக்குகள் எனக் கருதப்படும்.

இறுதியாக, வரிக்கோடு சாலைக் கடப்பை நெருங்கும் போது, கூடுதல் முன்னெச் செரிக்கை நடவடிக்கை எடுக்கா தது அல்லது வேகத்தைக் குறைக்கத் தவறுவது.

“தண்டனையை முடிவுசெய்யும் போது, எத்தகைய சூழ்நிலையில் குற்றம் இழைக்கப்பட்டது என்பது கருத்தில்கொள்ளப்படும்,” என்று  மனிதவள அமைச்சருமான ஜோசஃபின் டியோ கூறினார்.

பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது முக்கிய கவலைக்குரிய ஒன்றாக இருப்ப தால் சாலைப் போக்குவரத்து திருத்த மசோதா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக  அமைச்சர் ஜோசஃபின் டியோ குறிப்பிட்டார். மரணம் விளைவிக்கும் சாலை விபத்துகளின் எண் ணிக்கை கடந்த ஐந்தாண்டு களில் 20 விழுக்காடு குறைந் துள்ளபோதிலும், பொறுப்பற்ற முறையில் வாகனமோட்டுவோர் குறித்த கடிதங்களின் எண் ணிக்கை இதே ஐந்தாண்டு காலத்தில் 70% அதிகரித்துள்ள தாக அவர் சுட்டினார்.

தற்போதைய தண்டனைகள் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் குற்றங்களுக்கான, குறிப் பாக மரணம் அல்லது நிரந்தர  உடல் ஊனத்தை ஏற்படுத்தும் குற்றங்களுக்கான தண்டனைகள் சற்றும் போதுமானதாக இல்லை என்றார் அமைச்சர்.  உதாரணமாக, முதல்முறை யாக ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை விளைவிப்பவர் தற்போது அதிக பட்சமாக ஐந்தாண்டு சிறையை எதிர்நோக்குகிறார். புதிய சட்டத்தின்படி இது எட்டாண்டு களாக அதிகரிக்கப்படுகிறது. 

முதல்முறை குற்றம் புரிபவரோ அல்லது மீண்டும் குற்றம் புரிபவரோ 10 ஆண்டுகள் வாகனம் ஓட்டும் தகுதியை இழப்பதுடன் உடனடியாக வாகனம் ஓட்டத் தடைசெய்யப்படுவதுடன் அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்படும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதற்கும் தண்டனைகள் கடுமையாகின்றன.  “மோசமான விபத்துகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இது உள்ளது,” என்று குறிப்பிட்டார் அமைச்சர் ஜோசஃபின்.மதுபோதையில் வாகனம் ஓட்டிய விபத்தில் உயிரிழப்பு ஏற் பட்டால், குற்றம் புரிந்தவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் குறைந்தது 12 ஆண்டுகள் வரை வாகனமோட்ட தடையும் விதிக்கப்படலாம். 

மீண்டும் குற்றம் புரிபவருக்கு 19 ஆண்டுகள் வரை சிறையுடன் ஆயுள் முழுவதும் வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்படலாம்.

அபாயகரமாக ஓட்டுவது, பொறுப்பற்ற முறையில் ஓட்டுவது ஆகிய இரு வகையான குற்றங் களையும் முடிவு செய்வதில் பல்வேறு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும். பொறுப்பற்ற முறையில் வாகனமோட்டுபவர் களை உடனடியாகத் தடைசெய்ய நீதிமன்றத்துக்கும் போக்குவரத்து போலிசுக்கும் அதிகாரம் வழங் கப்படும் என்று திருவாட்டி ஜோசஃபின் தெரிவித்தார். தற்போதைய சட்டப்படி, இத்தகைய வாகனமோட்டிகள் குற்றம் நிரூபிக்கப்படும்வரை வாகனம் ஓட்டலாம் என்றார் அவர்.