சிங்கப்பூர் புத்தாக்கம்: உலகளவில் சிறந்து விளங்கும் உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்கள்

பாதுகாப்பை வலுப்படுத்தும் தொழில்நுட்பம்

இன்று வங்கி வேலைகளை சுலபமாக திறன்பேசிகளின் மூலமாக பாதுகாப்பாக செய்து முடிப்பதற்கு காரணமான பல தொழில்நுட்பங்களில் ஒன்று, 2011ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் ‘வீ-கீ’ (V-Key) நிறுவனத்தின் தொழில்நுட்பம்.

திறன்பேசிகளின் வழியாக இடம்பெறும் பரிவர்த்தனைகளையும் அவற்றிலுள்ள ரகசிய தகவல்களையும் தீங்கு விளைக்கும் மென்பொருளிலிருந்து பாதுகாக்கும் மெய்நிகர் அறிவார்ந்த அட்டையை இந்த உள்ளூர் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

சிங்கப்பூர், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் காப்புரிமம் பெற்றுள்ள இந்நிறுவன தொழில்நுட்பத்தின் அடிப்படை அம்சங்களைக் கண்டுபிடித்தார் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜோசஃப் கான், 44.

இவரை தவிர, தொழில்நுட்பத்தை மெருகூட்டி, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் அதனை சந்தைப்படுத்தி, தொடர்ந்து அதை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர் நிறுவனத்திலுள்ள 96 தொழிலாளிகள். குறிப்பாக, நிறுவனத்தின் ஆக பெரிய பிரிவான தொழில்நுட்ப பொறியியல் பிரிவை வழிநடத்தும் கரன் சச்தேவா,36, ‘வீ-கீயின்’ தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கேற்ப தயாரித்து கொடுப்பதன் செயல்முறையை பற்றி பகிர்ந்துகொண்டார்.

“வாடிக்கையாளர்கள் பிரச்சினையை எங்களிடத்தில் எடுத்து கூறும்போது அதற்கேற்ற தொழில்நுட்பத்தை எப்படி தயாரிக்க வேண்டும் என்று யோசித்து, முதலில் தேர்ந்தெடுக்கப்படும் யோசனை மேம்படுத்தி, சந்தை நிலவரத்தை கணித்து அதற்கேற்ப யோசனையை மாற்றி அமைத்த பின்னரே யோசனையை பொருளாக மாற்ற தொடங்குவோம்”

“இதுபோன்ற தொழில்நுட்பத்தை சிங்கப்பூரில் தயாரிக்கும் நிறுவனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதனால், சிறிய சந்தையாக இருப்பதால், பொருளை தயாரிக்க தொடங்கிய பின், சந்தையிலுள்ள அதுபோன்ற பொருட்களால் ஏற்படக்கூடிய போட்டித்தன்மையை கணிக்கவேண்டும். இறுதியில் எங்களின் வாடிக்கையாளர்களின் பிரச்சினையை தீர்க்கக்கூடிய பிழையில்லா தொழில்நுட்பத்தை விற்பதில்தான் எங்கள் கவனம் இருக்கின்றது,” என்றார் கரன்.

ஒரு பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்க சுமார் ஆறு மாதங்களிலிருந்து 10 மாதங்கள் வரை ஆகலாம் என்றும், தொடர்ந்து தொழில்நுட்பத்தை உருவாக்கும் செயல்முறையின்போதும் வாடிக்கையாளரின் கருத்துகளை தொடர்ந்து பெற்றுக்கொண்டு அக்கருத்துகளுக்கேற்ப தொழில்நுட்பத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்றும் ஜோசஃப் கூறினார்.

சிறிய சிங்கப்பூர் நிறுவனம் என்பதால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறவேண்டியதன் அவசியத்தை புரிந்துகொண்ட ‘வீ-கீ’, அதன் தொழில்நுட்பத்தின் தரத்தை அங்கீகரிக்கும் முயற்சிகளையும் அதை மேம்படுத்தும் முயற்சிகளையும் வரவேற்றது.

தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப தங்கள் தொழில்நுட்பத்தைப் புத்தாக்க சிந்தனைகளின் உதவியுடன் மெருகூட்டி வரும் ‘வீ-கீ’ நிறுவனம் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் சான்றளிப்பு திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்றது.

அதேபோல, 2014ஆம் ஆண்டில் ‘அண்ட்’ நிதி சேவைகள் குழுமமும் ‘ஐபிவி காப்பிட்டல்’ துணிகர மூலதன முதலீட்டு நிறுவனமும் இணைந்து 12 மில்லியனுக்கான ‘சீரீஸ் பி’ நிதியுதவியை ‘வீ-கீ’ நிறுவனத்திற்கு வழங்கினர்.

மேலும், நிறுவனம் மற்ற நாடுகளுடன் சேர்ந்து செயல்படுவதற்காகவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகவும் தொடர்ந்து ஆதரவளித்துவரும் ‘எண்டர்பிரைஸ்’ சிங்கப்பூருடன் இணைந்து 2020ஆம் ஆண்டில் அதன் ‘ஸ்கேல்-அப்’ (Scale-Up) நடவடிக்கையிலும் ‘வீ-கீ’ நிறுவனம் ஈடுபட்டு வந்தது.

அதே வரிசையில், சிங்கப்பூர் சந்தையை தவிர இந்தியா, மலேசியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் சந்தைகளிலும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் புத்தாக்க முயற்சிகளில் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்திய அரசாங்கத்தை சேர்ந்த பல முக்கிய வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் ‘ஹியூலட் பெக்கார்ட்’ நிறுவனத்துடனும் ‘வீ-கீ’ இணைந்து செயல்பட்டு வருகின்றது.

ஆனால், மற்ற நாடுகளிலுள்ள நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுவதால் சில நேரங்களில் சில மாற்றங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி ரேமண்ட் லீ, 52. ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய கலாசாரம், வேலை நேரங்கள், மொழி ஆகியவற்றிலுள்ள வேறுபாடுகளை அனுசரித்து ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு சிறிது காலம் எடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.

கொவிட்-19 காலகட்டத்தின்போது, மற்ற நாடுகளுக்கு பயணிக்க முடியாததால் முக்கிய வர்த்தக சந்திப்புகளை ஒத்தி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால், முக்கிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை கடந்த ஈராண்டுகளில் அறிமுகப்படுத்த சிரமப்பட்டது ‘வீ-கீ’.

ஆனால், சவால்களை எதிர்கொண்ட அதே கொவிட்-19 காலகட்டத்தில் மின்னிலக்க பரிவர்த்தனைகளின் பயன்பாடு அதிகரித்ததால் ‘வீ-கீயின்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த புதிய மின்னிலக்க வங்கியியல் வாடிக்கையாளர்கள் முன்வந்தனர். இதனால், லாப நட்டங்களை சமாளிப்பதற்கு நிறுவனம் அதிகம் சிரமப்படவில்லை.

வருங்காலத்திலும் சந்தையில் முன்னிலையிலிருப்பதற்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க தொடர்ந்து புத்தாக்க சிந்தனைகளை அறிமுகப்படுத்தக்கூடிய இளையர்களுக்கு ‘வீ-கீ’ நிறுவனம் வேலை வாய்ப்புகளை அளிக்கிறது.
உயர்கல்விக் கழகங்களுடன் இணைந்து இதை செயல்படுத்தும் அதே நேரத்தில் சிறிய நிறுவனங்களுக்கும் வழிகாட்டியாக தொண்டாற்றுகின்றது இந்நிறுவனம்.

புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் முன்னோடி

‘டீப் டெக்’ (deep tech) துறையில் தடம் பதித்து வரும் உள்ளூர் நிறுவனங்களின் ஒன்றான ‘நானோஃபிலிம்’ டெக்னாலஜி இன்டர்நேஷனல் நிறுவனம் (என்டிஐ), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தோற்றம் கண்டு 1999ஆம் அண்டிலிருந்து தனியே இயங்கி வருகின்றது.

அச்சுப்பொறிகள், திறன்பேசிகள், வாகனங்கள் போன்ற இயந்திரங்களிலுள்ள பாகங்களுக்கான பூச்சுகளைத் தயாரிக்கும் இந்நிறுவனம் முனைவர் ஷி சூவால் நிறுவப்பட்டது.

ஃபில்டெர்ட் கத்தோடியம் வெக்கியும் (Filtered Cathodic Vacuum Arc (FVCA) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கும் என்டிஐ நிறுவனத்தின் புரட்சிகரமான தொழில்நுட்பம் அனைத்துலக காப்புரிமம் பெற்றுள்ளது. இதனால், உடல் நீராவி படிவு (Physical Vapour Deposition - PVD) வைரம் போன்ற பூச்சு (Diamond-like-coating - DLC) ஆகிய இரு வகை பூச்சு தொழில்நுட்பத்தில் சந்தையில் முன்னிலையில் இருக்கின்றது நிறுவனம்.

“‘என்டிஐயின்’ தொழில்நுட்பத்திற்கு முன்பு, இயந்திரங்களின் தனித்தனி பாகங்கள் குறுகிய காலத்திலேயே தேய்ந்து விடும். ஆனால், பூச்சு அறிமுகப்படுத்தப்பட்ட பின், பாகங்கள் தொடர்ந்து உரசுவதால் ஏற்படக்கூடிய தேய்வு பெருமளவில் குறையும். இதனால், இயந்திரங்களை கூடுதல் காலத்திற்கு பயன்படுத்த முடியும்,” என்று விளக்கினார் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி லார்ஸ் லீபர்வர்த், 46.

தொடர்ந்து பூச்சை வெவ்வேறு இயந்திரங்களுக்கேற்ப மேம்படுத்துவதற்காக ஆய்வு, மேம்பாட்டுத் திறன்களை மெருகூட்டி வரும் ‘என்டிஐ’, நிறுவனத்தை விரிவாக்கமும் செய்வதில் ஈடுபட்டுள்ளது. தற்போது சீனாவில், ஜப்பான், சிங்கப்பூர், வியட்னாம் ஆகிய நாடுகளில் வெவ்வேறு ஆலைகளை நிறுவனம் நிர்வாகித்து வருகின்றது.

பூச்சை மேம்படுத்தி சந்தைப்படுத்துவதுடன், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய தீங்குகளை குறைப்பதிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகின்றுகின்ற பட்சத்தில், டெட்ராஹெட்ரல் அமார்ஃபஸ் கார்பன் (Tetrahedral Amorphous Carbon - taC)’ கார்பன் பூச்சை அது கண்டுபிடித்தது.

வாகனங்களால் ஏற்படக்கூடிய கரிம உமிழ்வைக் குறைப்பதற்கான முக்கிய தீர்வுகளில் ஒன்றாக 2013ஆம் ஆண்டில் ஜப்பானியச் சந்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கார்பன் பூச்சு வாகனங்களின் பிஸ்டன் வளையங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
நிறுவனங்கள் சுமார் ஐந்து விழுக்காடு வரை எரிபொருள் உமிழ்வை குறைத்ததை அடுத்து, ‘என்டி ஐயின்’ பூச்சு தொடர்ந்து இந்நிறுவனங்களால் இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றது.

புத்தாக்க வழிமுறைகளின் மூலம் பொருட்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டு வரும் ‘என்டிஐ’, சுகாதாரத்தைக் கட்டிக்காப்பதில் மற்றோர் அங்கமாக ‘தெமாசெக்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ஹைட்ரோஜன்’ (Hydrogen) சக்தியை மேலும் பரவலாகப் பயன்படுத்தும் முயற்சியில் ‘சைட்ரோஜன் சக்தி’ (Sydrogen Energy) எனப்படும் திட்டத்தில் 2021ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகின்றது.

தொடர்ந்து, நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பங்குச்சந்தையில் இடம்பெற்று சுமார் $470.1 மில்லியனை ‘என்டிஐ’ திரட்டியது.

தற்போது, ‘எண்டர்பிரைஸ்’ சிங்கப்பூர் அமைப்பும் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் ‘‘என்டிஐ’யுடன் இணைந்து அதன் ஆய்வு மேம்பாட்டு நிலையத்தை தொடங்குவதற்கான ஆதரவு குறித்து பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன. எரிபொருள் மின்கலங்கள், வாகனங்கள், உயிரியல் மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றின் பாகங்களைப் பற்றிய ஆராய்ச்சிகாகவும், தற்போதுள்ள துல்லிய பொறியியல், பல லென்ஸ் வரிசை (multi-lens array), ஆப்டிகல் குறியாக்கிகள் (optical encoders) போன்றவற்றுக்கான மேம்பாட்டுக்காகவும் புதிய ஆய்வு, மேம்பாட்டுக் குழு செயல்படும்.

இன்றைய சவால்களுக்கு எதிர்காலத்தை உருமாற்றுவோம்

என்றும் மாறிக்கொண்டே இருக்கும் வர்த்தகச் சூழலில் சிங்கப்பூர் நிறுவனங்கள் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை ஆராயும் முயற்சிகளில் எதிர்கால பொருளியல் மன்றம் ஈடுபட்டுவருகிறது. துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட் அந்த மன்றத்திற்குத் தலைமை வகிக்கிறார்.

மன்றம் முன்வைத்துள்ள தீர்வுகளில் ஒன்று தொழில்துறை உருமாற்றத் திட்டங்கள்.

துறை சார்ந்த வரைவுத் திட்டங்களான அவை, முக்கியமாக உலகளாவிய வகையில் எவ்வாறு நிறுவனங்கள் விரிவடைய முடியும் எம்பதற்கு வழிகாட்டுவதோடு புத்தாக்கத்திற்கான உந்துதலையும் வழங்குகின்றன.

பொருளியல் நிலைத்தன்மை அற்ற சூழலாக இருந்தாலும் புத்தாக்கம் அவசியம் என்பதற்கு சான்றாக இரு உள்ளூர் நிறுவனங்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளன.

தொழில்நுட்பம் சார்ந்த துறையில் கொடிகட்டி பறக்கும் அவர்களின் பயணத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!