இறப்பின் கறைகளைத் தூய்மைப்படுத்தும் உன்னத பணி

அழுகிய உடல்கள் விட்டுச்சென்ற கழிவுகளை அப்புறப்படுத்தி உடல் இருந்த இடத்தைத் தூய்மைப்படுத்தும் தொழிலில் 40 வயது திரு ரஹ்மான் ரஸாலி ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக கொலை, சுயமாக உயிரை மாய்த்துக்கொள்ளுதல், விபத்துகள் ஆகியவற்றுடன் தனியாக வீட்டில் மரணம் அடைந்துள்ள மூத்தோர் உடல்களைத்தான் திரு ரஹ்மான் அடிக்கடி பார்த்து வருகிறார்.

இறப்புக்குப் பிந்திய தூய்மைப்படுத்துதல் அதாவது ட்ராமா கிளீனிங் (trauma cleaning) என்பது வெகு சிலரால் செய்யப்பட்டு வரும் முக்கியமான தொழில்களில் ஒன்று.

வீட்டிலோ வெளிப்புறங்களிலோ விபத்தில் இறந்தவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள் அல்லது வீட்டில் தனிமையில் இறந்தவர்களின் உடல் அவ்விடத்தைவிட்டு அகற்றப்பட்டவுடன் அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தும் வேலைக்குத்தான் 'டிராமா கிளீனிங்' என்று பெயர். சில வேளைகளில் இதனை தடயவியல் தூய்மைப்படுத்துதல் அதாவது 'ஃபாரென்சிக் கிளீனிங்' (Forensic cleaning) என்றும் கூறுவார்கள்.

குறிப்பாக இறந்த, அழுகிய உடல்கள் விட்டுச்சென்ற கழிவுகளையும் மாசுபட்ட உடைமைகளையும் பொருள்களையும் சுத்தப்படுத்துவது, அப்புறப்படுத்துவதும் இத்தொழிலில் அடங்கும்.
இறந்த பிறகு 24 மணி நேரத்திற்குள் உடல் அழுகத் தொடங்குகிறது. அப்போது இரத்தம், சிறுநீர் போன்ற திரவங்கள் உடலிலிருந்து வெளியேறி தரையையும் படுக்கையையும் மாசுபடுத்துகிறது.

நடுத்தர வயது ஆடவர் ஒருவர் தனியாக வீட்டில் இறந்தது கிட்டத்தட்ட அவர் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது. அவரது உடல் இருந்த மரப்பலகையால் ஆன 'பார்க்கே' தரையின் மாசுபடிந்த சில பகுதிகளை இடித்து, பிய்த்து எடுக்க வேண்டி இருந்தது என திரு ரஹ்மான் நினைவுகூர்ந்தார். இச்சம்பவம் 2020ஆம் ஆண்டு 'சர்கிட் பிரேக்கர்' எனும் கொவிட்-19 நோய் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது நிகழ்ந்தது.அந்த உடலை யார் கண்டுபிடித்தது என திரு ரஹ்மானுக்குத் தெரியவில்லை ஆனால் அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தச் சொல்லி தம்மிடம் கூறியது இறந்த ஆடவரின் முதலாளி.

குப்பைகள் போடும் பெரிய பைகள், 'கேபிள் டைஸ்', ஐசோபுரோல் திரவம் போன்றவை திரு ரஹ்மான் அவரது தொழிலுக்குப் பயன்படுத்தும் சில பொருள்கள். அவர் பயன்படுத்தும் பல பொருள்கள் அக்கம்பக்க கடைகளில் அவர் வாங்குபவைதான். கூடவே பொது இடத்தில் தொழுகை செய்ய தொழுகை பாயையையும் திருக்குர்ஆன் நூலையும் எடுத்துச்செல்வார்.

தமக்கு வரும் பணிகளில் 80 விழுக்காடு தனியாக வீட்டில் இறந்த முதியவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று திரு ரஹ்மான் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
பெரும்பாலும் அந்த உடல்கள் அழுகி பக்கத்து வீட்டில் துர்நாற்றம் உணரப்படும்போதுதான் அந்த மரணம் பற்றி தெரியவருகிறது.

சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டு மட்டும் 65 வயதுக்கு மேற்பட்ட 60,000 முதியவர்கள் தனியாக வாழ்ந்தனர் என்று சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை கூறியது.

"யாருமே இல்லாமல் ஒருவர் இறப்பதும் இறந்த உடல்களை அந்த நிலையில் பார்ப்பதும் மிகவும் வருத்தத்திற்கு உரியது. சிங்கப்பூரின் மூப்படையும் சமூகத்தில் இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கத்தான் போகிறது," என்று திரு ரஹ்மான் கூறினார்.

இந்தத் தொழிலில் இவரைத் தவிர சிங்கப்பூரில் வேறு ஒரு நிறுவனம் மட்டும் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். இது மிகவும் பிரத்தியேகத் தேவைகள் உடைய வேலை என்பதாலும் பலரால் இதில் உள்ள அறுவறுப்பையும் முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளையும் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் பலர் இத்தொழிலுக்கு வருவதில்லை என்று அவர் நம்புகிறார்.

சந்தர்ப்ப சூழ்நிலை திரு ரஹ்மானை இத்தொழிலில் ஈடுபட வைத்தது. டிடிகியூ எனும் துப்புரவு நிறுவனத்தை நடத்தி வந்த திரு ரஹ்மான் வீடுகளையும் அலுவலகங்களையும் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் தொழில் செய்து வந்தார்.

அப்போது வீட்டில் கீழே விழுந்து மாண்டு ஒரு மாதத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மூதாட்டியின் உறவினர் அவருடைய உதவியை நாடினார்.சம்பவ இடத்துக்குச் சென்றபோது பெரும் அதிர்ச்சி. காவல் துறை தடுப்புக் கயிறுகள் ஒரு பக்கம், தரையில் இரத்தம்.

"இறந்த உடலில் இருந்து வந்த துர்நாற்றத்தையும் இரத்தத்தையும் பார்த்தது அதுவே முதல் முறை. அந்த இடத்தில் பிளீச் திரவத்தை ஊற்றிவிட்டு 24 மணி நேரத்திற்கு ஒன்று செய்யவேண்டாம் என்று கூறி சென்றுவிட்டேன். கூகளில் இறந்த உடலில் இருந்து வரும் கழிவுகளை எப்படி அகற்றுவது, சுத்தம் செய்வது என்பது பற்றி படித்தேன்," என்று திரு ரஹ்மான் கூறினார்.

10 மாதம் முதல் 18 வயது வரையிலான ஆறு பிள்ளைகள் இருக்கும் திரு ரஹ்மான் அதன் பிறகு சுயமாகவே இத்தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். தற்போது நான்கு ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கிறார் திரு ரஹ்மான். அவருடைய 18 வயது மூத்த மகள் கஸ்ரினா ரஹ்மான் அப்பாவுக்கு உதவி வருகிறார். முதலில் அவரை இத்தொழிலில் ஈடுபடுத்த திரு ரஹ்மானுக்கு விருப்பம் இல்லை. ஆனால் ஊழியர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் தமது மகள் விருப்பப்பட்டதாலும் மகளை வேறு வழி இல்லாமல் உதவிக்கு அழைத்தார் திரு ரஹ்மான்.

தமது அணியிலேயே ஆக துணிச்சல்மிக்கவர் தமது மகள் என்கிறார் திரு ரஹ்மான். உடல் ரீதியாகவும் சவால்மிக்க தொழில் இது. முகத்தில் முழு முகக்கவசம், உடலில் முழு பாதுகாப்புக் கவசம் ஆகியவை தேவைப்படும். ஆரம்பத்தில் என்ன அணிவது என்றே தெரியாததால்தான் முழு ரெய்ன்கோட் அணிந்ததை நினைவு கூர்ந்தார் திரு ரஹ்மான்.

மேலும் வீட்டில் மாசு படிந்த பொருள்களை பிளாஸ்டிக்கால் சுருட்டி கீழே குப்பை வைக்கும் இடத்தில் வைக்கவேண்டும். சில கட்டடங்களில் மின் தூக்கி இருக்காது, அல்லது பழுதாகி இருக்கும். ஒரு சமயம் குப்பைப் பைகளை அகற்ற 20 முறை மேலும் கீழும் ஏறி இறங்கியதை திரு ரஹ்மான் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு வேலைக்கும் அதின் சிரமத்தைப் பொறுத்து $2,000 முதல் $4,000 வரை கிடைக்கும்.

"பலர் பார்க்காத சமூகத்தின் ஒரு முகத்தை நான் பார்க்கிறேன். நாங்கள் அந்த இடத்தை மரியாதைக்குரிய ஓரு இடமாக மாற்றி, சுத்தம் செய்து, எந்த துர்நாற்றமும் இல்லாமல், மாசு இல்லாத இடமாக மாற்றுகிறோம்," என்றார் திரு ரஹ்மான். மாண்ட ஒருவர் உயிருடன் இருக்கும்போது எப்படி இருந்திருப்பார் என்று திரு ரஹ்மான் எண்ணுவதுண்டு.

" உறவினர்களின் உணர்வுகளையும் நாம் புரிந்து நடக்க வேண்டும். துயரில் இருக்கும் அவர்களது பாரத்தைச் சற்று குறைக்கத்தான் விரும்புகிறோம்.

"இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை என் தொழில் எனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. அதனால் தற்போது நமக்கு என்ன இருக்கிறதோ அதைப் போற்றி அரவணைக்க வேண்டும்."

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!