உலகக் கிண்ண அணியில் இணையும் கேதார் ஜாதவ் 

புதுடெல்லி: காயம் குணமாகிவிட்டதால்  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் கேதார் ஜாதவ் (படம்) இடம்பெறுகிறார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி, இம்மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 

இந்திய அணியில், ‌ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, விஜய் சங்கர், டோனி, கே.எல். ராகுல், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், சகல், குல்தீப் யாதவ், முகம்மது ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்திய அணி 22ஆம் தேதி இங்கிலாந்து செல்ல இருக்கிறது. 24ஆம் தேதி அங்கு பயிற்சிப் போட்டிகள் தொடங்குகின்றன.

உலக கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாட கேதார் ஜாதவ் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது தோள் பட்டையில் காயம் அடைந்தார். அதனால், அந்தத் தொடரின் கடைசி சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அவர் குணமடை யாவிட்டால் உலகக் கிண்ண அணியில் அவருக்குப் பதிலாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. கேதார் ஜாதவுக்குப் பதிலாக ராயுடு, ரிஷப் பன்ட் ஆகிய வீரர்களை பரிசீலனை செய்யலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அவர் உடல்நிலையைக் கவனித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் இயன் மருத்துவ நிபுணர் பேட்ரிக் பர்ஹர்ட், அவருக்குத் தொடர்ந்து பயிற்சிகள் அளித்து வந்தார். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை ஜாதவுக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் காயம் குணமாகிவிட்டது எனத் தெரிந்தது. இதையடுத்து, 22ஆம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணியுடன் அவரும் செல்கிறார். என்றாலும் இதுபற்றி அதிகார பூர்வத் தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என்று தெரிகிறது.

உலகக் கிண்ண அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர்களில் கேதார் ஜாதவும் ஒருவர். நடுவரிசையில் சிறப்பாக ஆடக்கூடிய ஜாதவ், 59 போட்டிகளில் 1,174 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் ஐந்து அரை சதங்களும் அடங்கும். அவரது பந்தடிப்பு விகிதம் 102.50. அவர் 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

களமிறங்கும்போதெல்லாம் காயமடையும் ஜாதவ் கடந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலேயே காயம் அடைந்து வெளியேறினார். பின்னர் குணமடைந்து ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்கேற்றார். அதிலும் காயமடைந்தார். குணமடைந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். அதிலும் காயம் அடைந்தார். ஆனால் சரியான நேரத்தில் குணமடைந்துள்ள ஜாதவ் உலகக் கிண்ணப் போட்டியில் இடம்பெறுகிறார்.  
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமது முன்னாள் குழுவான ரியால் மட்ரிட்டுக்கு எதிராக இரண்டு கோல்களைப் போட்டு பிஎஸ்ஜி குழுவின் வெற்றிக்கு வித்திட்ட அர்ஜெண்டினா ஆட்டக்காரர் ஏங்கல் டி மரியா. படம்: ஏஎஃப்பி

20 Sep 2019

மூவர் இருந்தும் முடியவில்லை: ரியால் நிர்வாகி ஸிடான் வருத்தம்

பந்தைத் தக்கவைத்துக்கொள்ள போராடும் மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிக்கலஸ் ஓட்டாமெண்டி (இடது), ஷக்தர் டோனட்ஸ்க் குழுவின் ஜூனியர் மொராயஸ் (நடுவில்). படம்: ஏஎஃப்பி

20 Sep 2019

பிரமிக்க வைத்த பிரேசில் வீரர்