கார்டியோலா: முக்கியமானவர் வருகிறார், சற்று காத்திருங்கள்

மான்செஸ்டர்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் தற்காப்புக்குப் பக்கபலமாக விளங்கிய பிரெஞ்சு வீரர் ஐமெரிக் லப்போர்ட்டே விரைவில் அணிக்குத் திரும்புவார் என அக்குழு நிர்வாகி பெப் கார்டியோலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்டு வரும் லப்போர்ட்டே, மீண்டும் பழைய உடலுறுதிக்குத் திரும்புவதில் அவர் கண்டு வரும் முன்னேற்றம் தமக்கு உற்சாகம் அளிப்பதாக கார்டியோலா கூறினார்.

கடந்த ஆண்டு மேன்சிட்டி விளையாடிய பிரைட்டன் குழுவுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் ஆடம் வெப்ஸ்டர் எனும் ஆட்டக்காரருடன் பொருதியபோது லப்போர்ட்டேயின் வலது முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டது.

கடந்த செப்டம்பரில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது அவர் சொந்தமாக பயிற்சி செய்து வருகிறார்.

“ஒவ்வொரு நாளும் லப்போர்ட்டே பயிற்சி செய்து வருகிறார். எந்தவொரு வலியுமின்றி அவர் நல்ல உணர்வுடன் பயிற்சியை முடிக்கிறார்,” என்றார் கார்டியோலா.

ஆஸ்டன் வில்லாவுக்கு எதிராக மேன்சிட்டி இன்று நள்ளிரவு விளையாடவுள்ள லீக் ஆட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கார்டியோலா மேற்கண்ட கருத்தை முன்வைத்தார்.

லப்போர்ட்டே எப்போது மேன்சிட்டிக்காக களமிறங்குவார் என்பது பற்றி இப்போதைக்கு தம்மால் உறுதியாகக் கூற இயலாது என கார்டியோலா கூறினார்.

“எனினும், அந்த நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த வேளையில், அவர் விரைவில் பழைய ஆட்டத்திறனுக்குத் திரும்பக்கூடும்,” என்று கார்டியோலா சொன்னார்.

லப்போர்ட்டே இல்லாமல் மேன்சிட்டியின் தற்காப்பு பல வேளையில் தடுமாறியுள்ளது. அக்குழுவின் தாக்குதலில் குறை எதுவுமில்லை என்றாலும் தற்காப்பில் உள்ள பலவீனத்தால் ஒரு சில ஆட்டங்களில் மேன்சிட்டி வெற்றியை நழுவவிட்டது. அதுபோக, ஒரு சில ஆட்டங்களில் அக்குழு தோல்வியையும் தழுவியது.

இதன் விளைவாக, லீக்கில் வெற்றிநடை போடும் லிவர்பூலைவிட மேன்சிட்டி 14 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது (நேற்று பின்னிரவு நடைபெற்ற டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்-லிவர்பூல் ஆட்டத்திற்கு முந்தைய நிலவரப்படி).

நடப்பு லீக்கில் பாதிக்கட்டம் முடிந்துவிட்ட நிலையில், லப்போர்ட்டேயின் வருகை மேன்சிட்டியின் தற்காப்புக்கு புதுத்தெம்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மேன்சிட்டி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பக்கூடும்.

“இடது காலால் பந்தை உதைக்கும் லப்போர்ட்டே விறுவிறுப்பானவர். சிட்டியின் வேகத்திற்கு அவர் பெரும் பங்காற்றக்கூடியவர்.

“சிட்டிக்கு வந்த பிறகு குறுகிய காலத்திலேயே அவர் நன்கு தேறிவிட்டார். இப்போது அவரது வருகையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். எனினும், அவருக்குச் சற்று நேரம் தேவைப்படுகிறது. ஆக, சற்று பொறுமையுடன் காத்திருப்போம்,” என்றார் கார்டியோலா.

நடப்பு லீக் பட்டியலில் 17வது இடத்தில் தத்தளித்துக்கொண்டு இருக்கும் ஆஸ்டன் வில்லாவின் சொந்த மண்ணில் இன்றைய ஆட்டம் நடைபெறுகிறது.

லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள மேன்சிட்டி இந்த ஆட்டத்தை எளிதில் வென்றுவிடும் என காற்பந்து விமர்சகர்கள் கருதினாலும் கார்டியோலா மெத்தனமாக இருந்துவிடுவதாகத் தெரியவில்லை.

“அடுத்த பருவத்திலும் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாட வேண்டும் என்ற வைராக்கியம் ஆஸ்டன் வில்லாவிடம் உள்ளது. எனவே, அக்குழு வீரர்கள் விடாமுயற்சியுடன் விளையாடுவர். எனவே, கவனத்துடன் விளையாடுமாறு எமது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!